ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரித்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 7ம் அறிவு திரைப்படமும், திருப்பதி பிரதர்ஸ் தயாரித்து பாலாஜி சக்திவேல் இயக்கியுள்ள ‘வழக்கு எண் 18/9’ திரைப்படமும் ஆஸ்கர் விருதுக்கான இந்திய படங்களின் தேர்வுப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
ஆஸ்கர் விருதில் சிறந்த வெளிநாட்டு படங்களின் வரிசையில் கலந்து கொள்வதற்காக இந்தியா சார்பில் ஒவ்வொரு வருடமும் ஒரு சிறந்த படம் அனுப்பப்பட்டு வருகிறது. இந்திய திரைப்பட கழகம் இதை ஒவ்வொரு ஆண்டும் செய்து வருகிறது.
இந்த வருடம் கலந்து கொள்ள இருக்கும் படத்தைத் தேர்வு செய்வதற்கான பட்டியல் தயாராகியுள்ளது. அதில் ‘7ம் அறிவு’, வழக்கு எண் 18/9’ படங்களுடன், தமிழில் ‘நான் ஈ’ ஆக வெளிவந்த தெலுங்கு ‘ஈகா’ படமும் இடம் பெற்றுள்ளது. மலையாளத்திலிருந்து ‘ஆகஷின்தே நிறம்’ படமும் தென்னக மொழிகளிலிருந்து இடம் பெற்றுள்ளன.
ஹிந்தியிலிருந்து ‘பர்ஃபி’, ‘கேங்ஸ் ஆப் வாசிப்பூர்’ உட்பட மேலும் 5 படங்களும், ஒரு மராத்திய படமும் இந்த பட்டியலில் உள்ளன. இவற்றிலிருந்து ஏதாவது ஒரு படம் ஆஸ்கர் விருதுக்கு தேர்வு செய்து அனுப்பப்படும்.
இவற்றில் எந்த ஒரு படம் தேர்வாகும் என்பது ஹைதராபாத்தில் நடக்க உள்ள திரையிடலில் முடிவாகும். தமிழ்ப் படங்களுக்கு இந்த முறை வாய்ப்பு கிடைக்குமா என்பது விரைவில் தெரிந்து விடும்.