சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘வீரம்.’
ஒரு கதாபாத்திரம் பேசும் வசனங்கள் ரசிகர்களால் பரபரப்பாக பேசப்படும் மிகச் சில படங்களின் வரிசையில் சமீபத்திய வரவு இது.
அளவான , அழகான, ஆழமான சிந்திக்கத் தூண்டும் மற்றும் சிரிக்க வைக்கும் வசனங்கள் அரங்கத்தில் அதிகப்பட்டியான கைதட்டலைப் பெறுகிறது.
விக்ரம் நடித்த “தில்,தூள் விஜய் நடித்த கில்லி,மதுர” படங்களின் வசனகர்த்தாவான பரதனை ‘கில்லி’ படப்பிடிப்பின் போது அவரது வசனங்கள் மற்றும் உழைப்பைப் பார்த்து விஜயே அழைத்து “அழகிய தமிழ் மகன்” படத்தின் மூலம் இயக்குனர் ஆக்கினார் என்பதை நன்றியுடன் கூறுகிறார் பரதன்.
“சில நல்ல விஷயங்களை விஜய், அஜீத் போன்ற மாஸ் ஹீரோக்கள் மூலமாக சொல்லும் போது அது நூறு சதவீதம் மக்களுக்கு போய்ச் சேரும். எனக்கு வீரம் கதையில் நிறைய இடங்கள் அப்படி எழுதும் வகையில் அமைந்திருந்ததும் அதை பவர் ஃபுல்லாக பேசியும், நடித்தும் மெருகேற்றிய அஜீத் சார் அவர்களுமே இந்த வெற்றிக்குக் காரணம்,” என்கிறார் பரதன்.
“அந்த விநாயகம் கதாபாத்திரத்தில் அஜீத் சார் அவர்களை பொருத்தி கண்களை மூடியபடி யோசித்தபோது என் பேனாவிலிருந்து வந்து விழுந்த வார்த்தைகள் என்னையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. இந்த வசனகர்த்தாவுக்கு இன்று வாழ்த்துக்கள் குவிய காரணகர்த்தா அஜீத்சார் அவர்கள்தான்.
ஆல்பிரட் ஹிட்ச்காக் அவர்களிடம் ஒரு முறை நீங்கள் இயக்கும் படங்களைப் பார்த்து ரசிகர்கள் பயந்து அலறுவதை அரங்கில் சென்று பார்த்த அனுபவம் உண்டா என கேட்டபோது அதற்கு அவர் இல்லை என்று பதில் கூறினார். ஏன் என்று கேட்டதற்கு “நான் தான் காட்சிகளை படமாக்கும் போதே அதை அனுபவித்து விடுகிறேனே என்றார். ஓர் நிஜமான படைப்பாளிக்கு அந்த தீர்க்க தரிசனம் வேண்டும்.
அப்புகுட்டிக்கு அஜித் சார் பத்திரம் கொடுக்கும் போது காட்சிக்கான வசனத்தை நான் எழுதி இயக்குனரிடம் படித்தபோது அவர் தன் கையை என் முன் நீட்டினார் பாருங்கள் சார் என் கை சிலிர்த்திருச்சு. இப்படி நிறைய அனுபவங்களை எனக்கு வீரம் படம் கொடுத்தது,”என்கிறார் பரதன்.
இவர் இப்போது இயக்கி வரும் ‘அதிதி’ படம் முடியும் தருவாயில் உள்ளது.
நந்தா – அனன்யா, நிக்கேஷ்ராம் – அஸ்வதி வர்ஷா, தம்பிராமையா, மயில்சாமி ஆகியோர் நடிக்கின்றனர்.
பரத்வாஜ் இசையமைக்க ஜெய்யின் ஒளிப்பதிவில்,பிரவீன்.கே.எல்.ஸ்ரீகாந்த் எடிட்டிங்கில் விக்கியின் சண்டைப் பயிற்சியில், நா.முத்துகுமார், பா.விஜய் பாடல்கள் எழுத தினேஷ், பாலகுமார், ரேவதி நடனம் அமைத்துள்ளனர்
திரில்லர் மற்றும் காதல் படமான ‘அதிதி’ மார்ச் மாதம் திரைக்கு வருகிறது.
