சசிகுமார், லாவண்யா, சந்தானம், சூரி மற்றும் பலர் நடித்துள்ள ‘பிரம்மன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சியில் அனைவரும் சுருக்கமாகவே பேசி விட்டு அமர, படத்தின் இயக்குனர் சாக்ரடீஸ் பேச வந்தார்.
மேடையில், மைக்கைத் தொட்டுப் பேச ஆரம்பித்தவர், எதிரில் இருந்தவர்கள் எவ்வளவோ கைதட்டினாலும் (?) மேடையை விட்டு இறங்காமல் பே……சிக் கொண்டேயிருந்தார். அவ்வளவு நீளமான பேச்சு.
பொதுவாகவே முதல் பட இயக்குனர்கள் பேசுவதை பத்திரிகையாளர்கள் அனைவருமே பொறுமையாகத்தான் கேட்பார்கள். காரணம், அவர்களுடைய நீண்ட நாள் கனவு , நனவாகும் தருணம் அது என்பதால். ஆனால், நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் இயக்குனர் சாக்ரடீஸ், அடிக்கடி அழுது கொண்டே பேசினார். ஒரு மேடையில் இயக்குனர் அனைவர் முன் இப்படி அழுகிறாரோ என்று…யோசிக்க ஆரம்பித்தனர்.
அதற்கான காரணம் இல்லாமல் இல்லை.
‘பிரம்மன்’ படத்தை இயக்குனர் சாக்ரடீஸ், தயாரிப்பாளர் கே.மஞ்சுவிடம், 75 நாட்களில் முடித்துக் கொடுப்பதாகச் சொன்னாராம். படப்பிடிப்பு ஆரம்பமானவுடன் 90 நாட்களில் முடித்து விடுவேன் என்றாராம். ஆனால், படப்பிடிப்பு 123 நாட்கள் நடைபெற்றிருக்கிறது.
இதைப் பற்றி முதலில் பேசிய தயாரிப்பாளர் கே. மஞ்சு அவரது பேச்சில் குறிப்பிட்டார். அது மட்டுமல்ல, இயக்குனருடன் பல சமயங்கள் பேசாமலே இருந்திருக்கிறார். ஆனால், படத்தைப் பார்த்து முடித்தவுடன் அவருடைய கோபம் மறைந்து இயக்குனரைப் பாராட்டியிருக்கிறார். அதோடு, படத்தையும் சொந்தமாகவே ரீலீஸ் செய்ய உள்ளார்.
இதன் பின் பேசிய இயக்குனர் சாக்ரடீஸ், அவருக்கும் தயாரிப்பாளருக்குமான மோதலைக் குறிப்பிட்டு பேசும் போதுதான் மேடையிலேயே அழுது விட்டார்.
“நான் சாகும் வரை தயாரிப்பாளர் கே.மஞ்சுவையும், சசிகுமாரையும் மறக்கவே மாட்டேன்,” என அவரது உரையை முடிக்கும் போதும், தேம்பி அழுதார்.
இயக்குனர் சாக்ரடீஸ், அண்ணா பல்கலைக் கழகத்தில் பி.ஈ. மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் கோல்டு மெடல் வாங்கியவர். சினிமா மீதுள்ள ஆர்வத்தால், வேலைக்குச் செல்லாமல், இயக்குனர் மௌலியிடம் உதவியாளராகச் சேர்ந்து ‘நள தமயந்தி, பஞ்ச தந்திரம்’ ஆகிய படங்களில் பணிபுரிந்திருக்கிறார்.
நீண்ட போராட்டத்திற்குப் பின் ‘பிரம்மன்’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.
நீங்கள் அழுதால் பரவாயில்லை…ஆனால், மற்றவர்களை அழ வைத்து விடாதீர்கள்…
