‘பிரம்மன்’னு டைட்டில், சசிகுமார் மாடர்ன் லுக்…இதையெல்லாம் பார்த்ததும், ஏதோ ஒரு ஆக்ஷன் படம்னு நினைச்சி தியேட்டர்ல போய் உட்கார்ந்தால் அதே சசிகுமாரோட வழக்கமான ஃபார்முலாவான நட்பைப் பத்தின படம்.
சசிகுமார்கிட்ட யாராவது போய் கதை சொல்லும் போது, “சார், நீங்கதான் ஹீரோ….உங்களுக்கு ஒரு ஃபிரண்டு, அவன் உங்களை ஏமாத்தறார்னு…” சொல்லி ஆரம்பிச்சால் கதை கேட்க உட்கார்ந்துடுவார் போல.
இப்படித்தான் இயக்குனர் சாக்ரடீஸ், சசிகுமார்கிட்ட கதை சொல்லி அசத்தியிருப்பார் போல. உடனே அவரும் படத்துல ஹீரோவா நடிக்க சம்மதிச்சிருக்காரு. “சுந்தரபாண்டியன், குட்டிப்புலி” இரண்டு ஹிட் படங்களைக் கொடுத்து, தன்னோட மார்க்கெட்டை இன்னும் ஸ்டிராங்காக்க நினைச்ச சசிகுமாருக்கு இந்த படம் ஒரு சறுக்கல்தான்…சாரி…மிஸ்டர் சசிகுமார்.
டைரக்டர் சாக்ரடீஸ் பிரமாதப்படுத்திடலாம்னு நினைச்சி ரொம்பவே பின்னோக்கி போயிட்டாரு. புதுசா கொஞ்சம் யோசிச்சிருக்கலாம்.
ஊர்ல தியேட்டரை லீசுக்கு எடுத்துட்டு நடத்தறவரு சசிகுமார். அவருக்கு உதவியா நண்பன் சந்தானம். அவங்க சேர்ந்து தியேட்டர்ல புதுப் படம் போடணும்னு நினைப்பாங்க. ஆனால், முடியவே முடியாது. வீட்டுலயும் உதவாக்கரைன்னு ஒரு பேரு வேற. எப்படியாச்சும் தியேட்டரை நல்ல நிலைமைக்கு கொண்டு வரணும்னு சசி நினைப்பாரு. ஆனால், 5 லட்ச ரூபாய்க்கு வரி கட்டாததால அவங்க தியேட்டருக்கு சீல் வச்சிடறாங்க.
தியேட்டரைக் காப்பாத்தறதுக்காக சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருக்கும், அவரோட பால்ய கால நண்பனான நவீன் சந்திராவைப் பார்க்க சென்னைக்குப் போறாரு. போன இடத்துல யதேச்சையா ஒரு தயாரிப்பாளரை சந்திச்சி சசி ஒரு கதைய சொல்ல, அவரையே இயக்குனராவும் ஆக்கிடறாங்க. இந்த விஷயம் கேள்விப்பட்ட நவீன் சந்திரா, அந்த கதையை அவரே படமாக்க நினைக்கிறாரு. தான்தான் நவீனோட சின்ன வயசு நண்பன்கற விஷயத்தை சசி அவர் கிட்ட மறைச்சி, நண்பனுக்காக தன்னோட கதையை விட்டுத் தர்றாரு.
இதுக்கிடையில சசியோட காதலியான லாவண்யாவை நவீன் சந்திராவுக்கு திருமணம் செய்ய முடிவெடுக்கிறாங்க…அப்புறம்…படத்தைப் பாருங்க, இதுக்கு மேல கதைய சொல்ல முடியாது.
சசி, ஜீன்ஸ் பேன்ட்டும், டீ ஷர்ட்டுமா பார்க்க நல்லாதான் இருக்காரு. ஆனால், அதுக்கேத்த பொருத்தமான கதையும், கதாபாத்திரமும் இல்லையே. தப்பா நினைச்சிக்காதீங்க, உங்களை வேட்டி சட்டைதான் ரொம்ப பொருத்தமா இருக்கு. நட்பு ஃபார்முலா உங்களுக்கு சக்சஸ்-ஆ வருதுன்னு நினைச்சி தொடர்ந்து பண்றீங்க. ஆனால், இந்த படத்துல அழுத்தமான காட்சிகள்னு எதுவுமேயில்லையே. உங்களோட, வழக்கமான குசும்பு, அந்த ஏளனமான திமிர்த்தனம் எதுவுமில்லை. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.
லாவண்யா, தமிழுக்கு மேலும் ஒரு புதுமுகம். லட்சணமா இருந்தாலும் நல்லா நடிக்க ட்ரை பண்ணாலும், ஹீரோவை சுத்தி வர்ற வழக்கமான ஹீரோயின் கேரக்டரையே இவங்களுக்கு கொடுத்திருக்காங்க.
இரண்டாவது ஹீரோவா நவீன் சந்திரா. பிரபலமான டைரக்டர். தெலுங்குல ஹிட் படங்களைக் கொடுத்தவரு, தமிழ்ல படம் பண்ணும் போது, சரியான கதை கிடைக்காம தவிக்கிறாருங்கறதுலாம் நம்பற மாதிரி இல்லை. அதுக்காக இன்னொருத்தர் எழுதற கதையை எப்படியாச்சும் படம் பண்ணியே தீருவன்னு சொல்றதுலாம் ரொம்பவே ஓவர்.
சந்தானம் வழக்கம் போல ஹீரோவோட சுக துக்கங்கள்ல பங்கெடுக்கிற கேரக்டர். இதுக்கு மேல என்னத்துக்குன்னு அவரும் அதிகமா சிரிக்க வைக்கலை. இடைவேளைக்கு அப்புறம் கொஞ்சமே கொஞ்சம் காட்சிகள்ல சூரி.
தேவி ஸ்ரீ பிரசாத் தமிழ்ல எப்படியாவது ஹிட் படங்கள்ல இடம் பிடிச்சிடணும்னு நினைச்சி ரொம்பவே உழைக்கிறாரு. பாவம், அவருக்கு என்ன நேரமோ…
சசிகுமாருக்கும் அவரோட தங்கச்சி மாளவிகா மேனனும் கிளைமாக்ஸ் முன்னாடி பேசற அந்த சீன்தான் படத்துலயே சூப்பர்ப். உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும்ணா என தங்கச்சி பாச மழை பொழிவதும், தங்கச்சின்னா, சண்டை போடணும்டி…அப்பதான் நல்லா இருக்கும்னு சசி சொல்வதும், அதைப் பார்த்து அப்பா, அம்மா கலங்குவதும், ஒரே காட்சியில் கண்ட ‘பாச மலர்’.
மற்றபடி பிரம்மன் – படைக்கத் தவறி விட்டார்.
