ஆஹா கல்யாணம்னு பேரு வச்சதுக்குப் பதிலா ஆஹா காதல்னு பேரு வச்சிருக்கலாம். அந்த அளவுக்கு படத்துல காதல் வழியுது.
இப்படி ஒரு இளமையான, கலர்ஃபுல்லான காதல் படத்தைக் கொடுத்ததுக்கு இயக்குனர் கோகுல் கிருஷ்ணாவைப் பாராட்டியே ஆகணும்.
ஹீரோவோட காதலுக்கு உதவி செய்யற காமெடி நண்பன் கிடையாது. காதலுக்கு எதிரா எந்த வில்லனும் கிடையாது. காதலை எதிர்க்கிற அப்பா அம்மா கிடையாது. இப்படி வழக்கமான காதல் படமா இல்லாம இருக்கிறதுதான் இந்த படத்தோட ஹைலைட்.
படத்துல பின்னாடி டான்ஸ் ஆடறவங்கள்ல இருந்து, கூட்டத்தோட கூட்டமா போற பெண்கள் எல்லாமே அழகா இருக்காங்களே. அவ்வளவு ‘ரிச்’ படம் இது. செலவைப் பத்தி யோசிக்காம பணத்தை பூவா இறைச்சிருக்காங்க. ஏன் தண்ணிதான சொல்லணும்னு கேக்கறீங்களா, படத்தைப் பாருங்க புரியும்.
‘குஷி’ காலத்துல இருந்து நாம பார்த்துட்டு வர்ற ‘ஈகோ’ மோதல்தான் படத்தோட கதை. கல்யாண வீட்டுல ஒரு மோதல்ல சந்திக்கிறாங்க படத்தோட ஹீரோ நானியும், ஹீரோயின் வாணியும். அப்புறம் என்ன வழக்கம் போல, நானி, வாணி பின்னாடி சுத்தறாரு. ஆனால், வாணி தெளிவான பொண்ணு. படிச்சி முடிச்சதும் சொந்தமா தொழில் செய்யணும்னு நினைக்கிறாங்க. அப்படியே நட்பா சுத்தற நானியும், வாணி கூட சேர்ந்து தொழில் ஆரம்பிக்கிறாங்க. ‘கெட்டி மேளம்’ கற திருமணங்களை நடத்தித் தர்ற ‘திருமண ஏற்பாட்டாளர்கள்’ அதாவது ‘வெட்டிங் பிளானர்ஸ்’ கம்பெனியை ஆரம்பிக்கிறாங்க.
4 லட்ச ரூபாய்ல ஆரம்பமாகிற இவங்க பிசினஸ், கொஞ்சம் கொஞ்சமா வளர்ந்து அப்படியே கோடி ரூபாய் வரைக்கும் வளர்றாங்க. ஒரு முறை 2 கோடி ரூபாய் கல்யாணம் ஒண்ணை நடத்தின சந்தோஷத்துல இரண்டு பேரும் ஆபீஸ்ல தங்கியிருக்கும் போது, போதையில கட்டிலை பங்கு போட்டுக்கறாங்க. அதுக்கப்புறமா அதை தப்புன்னு உணர்ற நானி, வாணி காதலை சொல்ல வந்தாலும் அதை ஏற்க மறுத்து பேசிடறாரு. இதனால ரெண்டு பேரும் பிரியறாங்க. அது மட்டுமில்லை, ‘கெட்டி மேளம்’ உடைஞ்சி, நானி தனியா ‘ஹேப்பி வெட்டிங்‘னு ஒரு போட்டி கம்பெனியை ஆரம்பிக்கிறாரு. இதுக்கப்புறம் என்ன நடக்குதுன்றதுதான் படத்தோட மீதி கதை.
‘நான் ஈ’ படத்துல கொஞ்ச நேரமே வந்தாலும் எல்லால் மனசுலயும் இடம் பிடிச்ச நானி இந்த படத்துல அட்டகாசமா நடிச்சித் தள்ளியிருக்காரு. அதுலயும் அவரோட சொந்தக் குரல்லயே பேசி நடிக்கணும்னு அவர் எடுத்த முடிவுக்கு பாராட்டுக்கள். கொஞ்சம் தெலுங்கு வாடை அடிச்சாலும் போகப் போக அந்த தமிழே நமக்கு பழகிடுது. அவர் அடிக்கிற சில டயலாக் காமெடிகள் சரியான ‘பன்ச்’. அவர் குரல்ல கேக்கறது, இன்னும் காமெடியா அமைஞ்சிடுது. முதல்ல காதலிச்சி, அப்புறம் வேணாம்னு சொல்லிட்டு, திரும்பவும் காதலை விட முடியாம அவர் தவிக்கிற தவிப்பு எல்லாமே சிம்ப்ளி சூப்பர்ப். அவரோட கேரக்டரை ரொம்பவே அனுபவிச்சி நடிச்சிருக்காரு.
நாயகியா புதுமுகம் வாணி கபூர். வாம்மா நீ…ன்னு வெத்தலை, பாக்கு தட்டோட, கெட்டி மேளம் கொட்டி வரவேற்கலாம். முதல் படமா இதுன்னு ஆச்சரியப்படற அளவுக்கு நடிச்சித் தள்ளியிருக்காங்க. இது இருந்தால் அது இருக்காது, அது இருந்தால் இது இருக்காதுன்னு இல்லாம, நடிப்பு, அழகு, கிளாமர், நடனம் எல்லாத்துலயும் ‘எக்ஸ்பர்ட்’ மாதிரி தெரியறாங்க.
நான் போடற பிளான்படி எல்லாமே கரெக்டா போயிட்டிருக்குன்னு சொல்லி அவங்க இஷ்டத்துக்கு வாழற கேரக்டர் படத்துல. நானி, காதலை ஏத்துக்காமப் போயி அதை நினைச்சி அழற காட்சியில அவங்களே அழுமு, அவங்களே தேத்திக்கிறது இருக்கே…அடடா….சிம்ரனுக்கு அப்புறம் இடுப்பை இந்த அளவுக்கு அசைச்ச ஹீரோயின் இவங்களாதான் இருப்பாங்க…என்னமா ஆடறாங்க…வாணியின் வரவு இங்க உள்ளவங்க வயித்துல கண்டிப்பா புளியைக் கரைக்கும்.
இவங்க இரண்டு பேரைத் தவிர படத்துல மத்தவங்களுக்கு அவ்வளவு முக்கியத்துவமில்லை. படவா கோபி, ஸ்ரீராம் கொஞ்சமா வந்தாலும் யதார்த்தமான நடிப்புல ரசிக்க வச்சிருக்காங்க. சிம்ரன் சிறப்புத் தோற்றத்துல வந்து, நானியும், வாணியும் விக்ரமன் பட பாணியில சீக்கிரமா வாழ்க்கைல முன்னேற உதவி பண்றாங்க.
படத்தோட முக்கிய ஹைலைட் வசனங்கள். ரொம்ப அனுபவிச்சி எழுதியிருக்காங்க. ஆனால், ஒரு சில காட்சிகள்ல யதார்த்தமா இருக்கணும்னு சில சாதாரண கெட்ட வார்த்தைகளை சேர்க்காம இருந்திருக்கலாம்.
அடுத்தா ஒளிப்பதிவு, பிரேம் பை பிரேம் கலர்புல்…ரொம்பவே ரசிச்சி ரசிச்சி எடுத்திருக்காங்க.
தரண் இசையில “கதை கதை கதை கேளு….’ பாடல் ஹிட் லிஸ்ட்ல இடம் பிடிச்சிடும். கடைசில வர்ற பன்ச் சாங்…ஓகே. ஒரு அழகான, அற்புதமான டூயட் இருந்திருந்தால் நல்லா இருந்திருக்கும். ஆனால், பின்னணி இசையில கலக்கியிருக்காரு.
“ஆஹா கல்யாணம்” – “ஆஹா….ஓஹோ….”
