ஒருவர் கூட வராத படம்… – ஒரு அதிர்ச்சித் தகவல்

vijay sethupathy and d imman

தமிழ் சினிமா எங்கே போய்க் கொண்டிருக்கிறது என்றே தெரியவில்லை. கடந்த சில வாரங்களில் வெளியான ஒரு சில படங்களுக்கு படம் பார்க்க ஒருவர் கூட வராமல் போய், அந்த காட்சிகளையே ரத்து செய்யும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

இது யாரோ சொன்ன செய்தியல்ல. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவரான கேயார் தரும் தகவல்தான்.

‘அலையே அலையே’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில்தான் இந்த தகவலைச் சொன்னார் கேயார்.

வேதநாயகி பிலிம்ஸ் தயாரிக்கும் ஏ.ஆர். முருகன், சி.ஜவகர் பழனியப்பன் வழங்கும் படம் ‘அலையே அலையே’. புதுமுக இயக்குநர் ஜி.மணிகண்டகுமார் இயக்கியுள்ளார்.

நாயகனாக ‘மானாட மயிலாட’புகழ் ரஞ்சித்தும், நாயகியாக அங்கீதா நயனாவும் நடித்துள்ளார்கள் இப்படத்தின்  இசை  வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் உள்ள ஆர்.கே.வி. ஸ்டுடியோவில் நடைபெற்றது.

விழாவில் கேயார் பேசியதாவது,

“இன்று இந்தப்பட விழாவில் விஜய் சேதுபதி கலந்து கொண்டிருந்திருக்கிறார்.விஜய் சேதுபதி யதார்த்தமான நடிகர். இப்போதுள்ள நடிகர்களில் இயல்பான நடிப்பில் விஜய் சேதுபதியை எனக்குப் பிடிக்கும்.

இன்று தங்கள் படங்கள் சம்பந்தப்பட்ட  நிகழ்ச்சிகளுக்கே நடிகர்கள் வரத் தயங்குகிறார்கள். பல பெரிய நட்சத்திரங்கள் ஆடியோ வெளியீட்டுக்கு வருவதில்லை. அப்படி இருக்கும் போது இவர் தான் சம்பந்தப் படாத நிகழ்ச்சிகளுக்கும் வந்து கலந்து கொள்வது வாழ்த்துவது பாராட்டுக்குரியது.

இன்னொரு படத்தின் ப்ரமோஷனுக்கு  வந்திருந்து அவர் பெருந்தன்மையுடன் உதவுவதை வரவேற்க வேண்டும். இதை மற்ற நட்சத்திர நடிகர்களும் பின்பற்ற வேண்டும்.

கடந்த நாலைந்து மாதங்களில் தியேட்டர் வசூல் மிக மோசமாக இருக்கிறது. சமீபத்தில் ஒரு தயாரிப்பாளர் படத்தை வெளியிட்டார். அந்த தயாரிப்பாளருக்கு வெளியான முதல் நாளே தியேட்டர் மேனேஜர் போன் செய்தார். ‘சார் முதல் நாள் முதல் காட்சிக்கு இரண்டே பேர்தான்  வந்திருக்கிறார்கள். காட்சியை நிறுத்தட்டுமா ஓட்டட்டுமா’ என்றிருக்கிறார்.

 தியேட்டருக்கு போன தயாரிப்பாளரின்’ ரெப்’ போன் செய்திருக்கிறார். ‘தியேட்டரில் படம் பார்க்க ஒரு ஆள் கூட இல்லை’ என்று. அப்போது தயாரிப்பாளர் கேட்டாராம் ‘இரண்டுபேர் இருப்பதாக  இப்போது மேனேஜர் சொன்னாரே’ என்று. ‘அவர் சொல்லியிருக்கும் அந்த இரண்டு பேர் நாங்கள்தான்’ என்றாராம் ரெப். இப்படி இருக்கிறது இன்றைய நிலைமை,” என வருத்தத்துடன் கூறினார் கேயார்.

Read Previous

ஆஹா கல்யாணம் – விமர்சனம்

Read Next

தெலுங்கில் ‘த்ரிஷ்யம்’ ஆரம்பமானது…

Most Popular