இன்றைய தலைமுறையினர் பெற்றோர்களது பாசத்தைப் புரிந்து கொள்ளாமல் எப்படி நடந்து கொள்கின்றனர் என்பதை கருவாகக் கொண்ட கதை.
அதை வழக்கமான மசாலாப் படமாக இல்லாமல் கொஞ்சம் மாறுபட்டு சிந்தித்து இந்த படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஜேம்ஸ் டேவிட். எடுத்துக் கொண்ட கதை சரியான, தேவையான ஒன்றாக இருந்தாலும் கிளைமாக்சுக்கு முன்னர்தான் பரபரப்பான காட்சிகளை வைத்திருக்கிறார்.
இன்னும் பல சிறப்பான காட்சிகளை ஆரம்பம் முதலே சேர்த்திருந்தால் ஒரு விறுவிறுப்பான படத்தை ரசித்த அனுபவம் கிடைத்திருக்கும். ஆனாலும், பாசத்தின் பெருமையை உணர்த்தி படத்தை முடித்திருக்கும் விதம் அருமை.
அபிலாஷ், சானியதாரா இருவரும் சமூக வலைத்தளம் மூலம் அறிமுகமாகி, அதன் பின் பழகி காதலர்களாகிறார்கள். ஒரு சந்தர்ப்பத்தில் இவர்களது பழக்கம் இருவர்களது பெற்றோர்களுக்கும் தெரிய வருகிறது. இருவர் வீட்டிலுமே இவர்களது காதலை எதிர்க்கிறார்கள்.
அதனால் காதலர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறுகிறார்கள். முதலில் வரும் பேருந்தில் ஏறலாம் என முடிவெடுத்து, அப்படியே தேனி போய் மேகமலை காட்டுப் பகுதியில் நுழைகிறார்கள். அங்கு இவர்களுக்கு வர்ஷா அஸ்வதி அடைக்கலம் கொடுக்கிறார். அவரது வீட்டிலேயே சில நாட்கள் தங்குகிறார்கள். அப்போது வர்ஷாவின் மகனுக்கு இருக்கும் ஒரு வியாதியைப் பற்றி அறிகிறார்கள்.
அவன் மருத்துவ செலவுக்காக சேர்த்து வைத்த பணத்தை சிலர் பறிக்க நேரிடுகிறது. மீண்டும் மருத்துவ செலவுக்கு பணம் சேர்க்க அபிலாஷும், சானியதாராவும் உதவியாக இருந்து பணம் சேர்ந்த பின் மருத்துவமனை செல்ல காட்டு வழியாக பயணிக்கிறார்கள். அப்போது ஒரு புலியிடம் அனைவருமே சிக்க நேரிடுகிறது. தங்களைக் காப்பாற்றிக் கொள்ள மரத்தின் மீது ஏறிக் கொள்கிறார்கள்.
அதன் பின் நடக்கும் சம்பவங்கள்தான் பரபரப்பான மீதிக் கதை.
அபிலாஷ், இந்த படத்தில் நாயகனாக அறிமுகமாகியுள்ளார். காதல் நடிப்பைத் தவிர பெரிதாக வேறு எதையும் வெளிப்படுத்த முடியாத கதாபாத்திரம். சானிய தாராவை காட்சிக்குக் காட்சி காதலித்துக் கொண்டேயிருக்கிறார். அதை மட்டும் சரியாக செய்திருக்கிறார்.
சானியதாரா, அபிலாஷின் மனம் கவர்ந்த காதலி. இந்த அளவுக்கு ஒரு பெண் ஒருவரைக் காதலிப்பாரா என ஏங்க வைக்கும் அளவுக்கு இவரும் காதலோ காதல் என இருக்கிறார்.
வர்ஷா அஸ்வதி, காதலர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் ஒரு தைரியமான மலைப்பிரதேசத்துப் பெண். இடைவேளைக்கு முன்பிருந்தே இவர்தான் படத்தை தாங்கிப் பிடிக்கிறார். கடைசியில் தாய்ப் பாசம் என்றால் என்ன என்பதை யாரும் செய்யத் துணியாத ஒரு விஷயத்தை செய்து நம் மனதில் இடம் பிடிக்கிறார்.
படத்தின் ஹீரோ, வில்லன் என்றால் அந்த புலிதான்…நிஜ புலியும், கிராபிக்ஸ் புலியையும் சேர்த்து படமாக்கியிருக்கும் காட்சிகள் மிரள வைக்கின்றன. கடைசி அரை மணி நேர காட்சிகளில் புலிக்கும் உண்டான தாய்ப்பாசத்தையும், ஒரு அம்மாவின் தாய்ப்பாசத்தையும் வெளிக்காட்டும் காட்சிகள் நிச்சயம் கலங்க வைக்கும்.
ரஜின் இசையில் “ஆகாயம் என்றும்…., தூரத்துல….” ஆகிய பாடல்கள் ரசிக்க வைக்கின்றன.
காடு, மலை, என அருமையான லொகேஷன்களில் படத்தை ரம்மியமாக படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ராகவ்.
பனி விழும் மலர்வனம் – கொஞ்சம் பனி, கொஞ்சம் வெயில்…