இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள், நலம் விரும்பிகள் இருக்கின்றனர். அவர்கள் அனைவரையும் ஒரு குடையின் கீழ் ஒருங்கிணைக்கும் அமைப்பாக உருவாக உள்ளது “இளையராஜா ரசிகர்கள் மன்றம்” (ILAYARAJA FANS CLUB).
இளையராஜாவின் அங்கீகாரத்துடன் அவரது மகன் கார்த்திக்ரா ஜா தலைமையில், தயாரிப்பாளர் பி.வேலுச்சாமி, டைரக்டர் ரத்னகுமார் ஆகியோரை மேனேஜிங் டிரஸ்டிகளாக கொண்டு அரசாங்க அங்கீகாரத்துடன் இந்த மன்றம் ஆரம்பமாக உள்ளது.
இந்த அமைப்பு மட்டுமே இளையராஜாவின் பெயரில், அதிகாரப்பூர்வமாக செயல்படும் உரிமை கொண்டது.
இளையராஜாவின் ரசிகர்கள் அவரது இசையால் ஈர்க்கப்பட்டு தங்களுக்கென சில கொள்கைப் பிடிப்புடன் செயல்பட்டு வருகிறார்கள். அவர்களை நல்வழிப்படுத்த, சமூக விழிப்புணர்வு மற்றும் சமூக நற்பணிகள், சமூக முன்னேற்றத்திற்கென ஆக்கப் பூர்வமாக செய்வதென முடிவெடுத்து அதனை இந்த ‘இளையராஜா ரசிகர் மன்றம்’ மூலம் செயல்படுத்த உள்ளனர்.
சாதி, மதம், இனம், அரசியல் போன்ற விசயங்களுக்கு அப்பாற்ப்பட்ட அமைப்பு இது. இதில் ஒருகோடி பேருக்கு மேல் உறுப்பினராக சேர உள்ளனர்.
இதற்கான அறிவிப்பை ஏப்ரல் 5ம் தேதி மதுரை தமுக்கம் மைதானத்தில் அறிவிக்க உள்ளனர்.
கார்த்திக்ராஜா தலைமையில் “ராஜாவின் சங்கீதா திருநாள்” நிகழ்ச்சி நடைபெறும் ஏப்ரல் ஐந்தாம் தேதி அன்று “இசைஞானி” என்ற வார இதழும் துவங்கப்பட உள்ளது.
திரைப்படத்துறையில் உள்ள முன்னணி நடிகர், நடிகைகளும் இதில் இணைய உள்ளனர்.
