‘நிமிர்ந்து நில்’ பெரிய பெருமை – ஜெயம் ரவி

nimirnthu nil success meet_00016‘நிமிர்ந்து நில்’ படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் படத்தின் இயக்குனர் சமுத்திரக்கனியும், நாயகன் ஜெயம் ரவியும் , ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்க,  பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

சந்திப்பில் இயக்குனர் சமுத்திரக் கனி பேசும் போது,

“இந்த படத்தின் மூலமா எனக்குக் கிடைக்கப் பெறாத நட்புலாம் கிடைச்சிருக்கு.

சகாயம் ஐ.ஏ.எஸ் அவர்கள் போன் பண்ணாங்க. ஊழலுக்கு எதிராக இந்த உலகத்தில் எந்த மூலையில் இருந்து, யார் குரல் கொடுத்தாலும் அவன் என்னுடைய நண்பன்னு சொன்னாரு. “லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்துன்னு” அவருடைய வாசகத்தை படத்துல பயன்படுத்தியிருப்பேன்.

வால்டர் தேவாரம் ஐயா போன் பண்ணாங்க. நான் யாரையெல்லாம் ‘இன்ஸ்பையர்’ பண்ணி, இந்த படத்துக்குள்ள கேரக்டர்ஸ் வச்சிருந்தனோ அவங்க எனக்கு போன் பண்ணாங்க.

என்னுடைய படங்கள்ல ‘இடைவேளை’ங்கறத கிளைமாக்ஸ்னு வச்சிதான் திரைக்கதை அமைப்பேன். இடைவேளைக்கப்புறம் கமர்ஷியலா, காமெடியா பண்ணணும்கறதுதான் என்னோட ஐடியா. இந்த படத்துல இரண்டாவது கேரக்டர்ல ரவியை நடிக்க வைக்கிற ஐடியா இல்லை. ஆனா, இதுக்கு முன்னாடி வந்த படத்துல ரவி டபுள் ஆக்ஷன் பண்ணதுல இருந்து முழுசா மாத்தி பண்ண வைக்கணும்கறதுக்காகத்தான் அவரையே நடிக்க வச்சேன்.

இடைவேளைக்கப்புறம் படம் வேற மாதிரி போகுதேன்னு கேக்கறாங்க. ஆனால், சென்னையைத் தாண்டினால் மொத்த ரசிகர்களும் அதைத்தான் ரொம்ப ரசிக்கிறாங்க.

இந்த படத்துக்கும் ‘ஆம் ஆத்மி’ அரவிந்த் கெஜ்ரிவால் பெயருக்கும் எந்த தொடர்பும் இல்லை. இரண்டு வருஷம் முன்னாடி படத்தோட கதை எழுதும் போதே ஹீரோவோட கேரக்டர் பேரை அரவிந்த் சிவசாமி-ன்னு வச்சேன்.

இந்த படம் சின்ன சிக்கலுக்கு அப்புறம், வெளிவரதுக்கு தம்பி ஜெயம் ரவிக்கு பெரிய பங்கு உண்டு. அதே மாதிரி தயாரிப்பாளரும் ரொம்ப முயற்சி எடுத்துக்கிட்டாரு,” என சமுத்திரக்கனி பேசினார்.

ஜெயம் ரவி பேசியதாவது,

“ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஆனா, அதையும் தாண்டி ஒரு நல்ல படம் பண்ணியிருக்கோம்கற பெரிய பெருமை எனக்கிருக்கு. என்னோட கேரியர்ல ஒரு முக்கியமான படம்னு எல்லோரும் சொன்னாங்க. அது எனக்கு படம் பண்ணும் போதே தெரிஞ்சுது.

அதுக்கு முக்கிய காரணம் இயக்குனர் சமுத்திக்கனிதான். அவர் கதை சொல்லும் போதே, ஒரு நல்ல படம் பார்த்த உணர்வு ஏற்பட்டுச்சி. அது படம் முடியற வரைக்கும் இருந்தது. படம் ரிலீசான உடனே அந்த உணர்வை மக்களும் கொடுத்தாங்க.

தயாரிப்பாளர், இயக்குனர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், ஹீரோயின் என மொத்த டீமும் கடினமா உழைச்சதாலதான் இந்த வெற்றியைப் பெற முடிஞ்சது. எல்லாருக்கும் ரொம்ப நன்றி…”, என்றார் ஜெயம் ரவி.

சமுத்திரக்கனி அடுத்ததாக காட்டை மையமாக வைத்து ‘கிட்னா’ என்ற படத்தை இயக்க உள்ளார். அந்த படத்தில் அமலா பால் இரு வேடங்களில் நடிக்கிறார். சமுத்திரக்கனியும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ஜெயம் ரவி நடித்து ‘பூலோகம்’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. அவருடைய அண்ணன் ராஜா இயக்கத்தில் நயன்தாராவுடன் இணைந்து ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.

Read Previous

இளையராஜா ரசிகர் மன்றம் – ஏப்ரல் 5-ல் ஆரம்பம்…

Read Next

வயதான தோற்றத்தில் அமலா பால் நடிக்கும் ‘கிட்னா’

Most Popular