‘சென்னை 28, ஆரண்ய காண்டம்’ உள்ளிட்ட பல படங்களை தயாரித்த எஸ்.பி. பி சரண் , ஜே. செல்வகுமாருடன் இணைந்து வழங்கும் படம் ‘திருடன் போலீஸ்’.
பால்ய பருவத்தில் இருந்தே ஓட, விரட்ட என்று பழக்கப்பட்ட கதையை நவீன மயமாக்கி , பல்வேறு கதாபாத்திரங்களின் துணையோடு நகைச்சுவை கலந்து, எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும் வண்ணம் படமாக்கப்பட்ட ‘ திருடன் போலீஸ்’ படப்பிடிப்பு முடிந்து வெளி வரும் தருவாயில் உள்ளது. கம்ப்யூட்டர் தொழில் நுட்ப காட்சிகளில் பிரசித்தி பெற்ற கார்த்திக் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.
‘அட்ட கத்தி’ தினேஷ் கதா நாயகனாக நடிக்க , அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்.வித்தியாசமான கதாபாத்திரங்கள் மூலம் நிலையான பெயரை நிலை நிறுத்திக் கொள்ள மெனக்கெடும் தினேஷுக்கு ‘திருடன் போலீஸ்’ ஒரு மாறுபட்ட படமாக இருக்கும்.
நிதின் சத்யா, பால சரவணன், ‘ நான் கடவுள்’ ராஜேந்திரன், ஜான் விஜய், ஆகிய நால்வரும் இந்தக் கதையை தாங்கி பிடிக்கும் முக்கிய தூண்கள். மூத்த நடிகர் ராஜேஷ், பொறுப்பில்லாமல் இருக்கும் ஒரு பிள்ளையின் கண்டிப்பான , கண்ணியமான தந்தையின் கதாபாத்திரத்தை தனது யதார்த்தமான நடிப்பால் நம் கண் முன் நிறுத்துகிறார்.
புதிய முயற்சிகளுக்கு என்றுமே உறு துணையாக இருக்கும் யுவன் ஷங்கர் ராஜா இசை அமைப்பில் உருவாகி இருக்கும் ‘ திருடன் போலீஸ் ‘ ஜூலை மாதம் இறுதியில் வெளி வருகிறது.