தயாரிப்பு – ஸ்பெல்பௌண்ட் பிலிம்ஸ்
இயக்கம் – பரதன்
இசை – பரத்வாஜ்
நடிப்பு – நந்தா, நிகேஷ் ராம், அனன்யா மற்றும் பலர்.
ஹாலிவுட்டிலிருந்து மலையாளத்திற்கு ‘காக்டெயில்’ ஆக வந்து, பின்னர் தமிழில் ‘அதிதி’யாக வெளிவந்துள்ள படம். விஜய் நடித்த ‘அழகிய தமிழ் மகன்’ படத்தை இயக்கிய பரதன் அவருடைய அடுத்த படமாக இந்த படத்தை இயக்கியிருக்கிறார். ரீமேக் படம்தான் என்றாலும், தமிழுக்கு ஏற்றபடி பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் கொடுத்து படத்தை ரசிக்க வைத்திருக்கிறார். இந்த முறை கதைக்கு ஏற்ற நடிகர்களைத் தேர்வு செய்து முதல் படத்தில் விட்டதை இந்த படத்தில் பிடித்திருக்கிறார்.
கதை
நந்தா, ஒரு கட்டிட கட்டுமானக் கம்பெனியில் வேலை பார்க்கிறார். அன்பான மனைவி அனன்யா, அழகான பெண் குழந்தை என அவருடைய காதல் திருமண வாழ்க்கை யாருடைய ஆதரவும் இல்லாமல் நல்லபடியாக போய்க் கொண்டிருக்கிறது. ஒரு நாள் நந்தாவும், அனன்யாவும் காரில் சென்று கொண்டிருக்கும் போது வழியில் ‘லிப்ட்’ கேட்கும் நிகேஷ் ராம், இருவரும் கடத்துகிறார். அவர் எதற்காக இவர்களை கடத்தினார் ? அதன் காரணம் என்ன என்பதுதான் படத்தின் பரபரப்பான மீதி கதை.
கனமான கதையும், யூகிக்க முடியாத திரைக்கதையும்தான் படத்திற்கு பிளஸ் பாயின்ட். மூன்றே மூன்று கதாபாத்திரங்களுக்குள் நடக்கும் கதை. அடுத்து என்ன நடக்கப் போகிறது என யாரும் யூகிக்க முடியாத திரைக்கதையும், விறு விறுப்பான காட்சிகளும் படத்தை ரசிக்க வைக்கின்றன. இயல்பான கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான நட்சத்திரத் தேர்வு, அதில் நந்தா, நிகேஷ் ராம், அனன்யா ஆகியோரின் இயல்பான நடிப்பு பாராட்ட வைக்கிறது. கிளைமாக்ஸ் ட்விஸ்ட் சிறுதும் எதிர்பாராத ஒன்று.
முக்கால்வாசி கதை தொடர்ந்து காரிலேயே நடப்பது கொஞ்சம் தொய்வைத் தருகிறது. நிகேஷ் ராம், நந்தா – அனன்யா தம்பதியை ஏன் கடத்தினார் என்பது கிளைமாக்சில் மட்டுமே தெரிய வருகிறது. அதற்கு முன்னதாகவே சில சந்தேகங்களை ஏற்படுத்தி, கடைசியில் காரணத்தைச் சொல்லியிருந்தால் இன்னும் சுவாரசியமாக இருந்திருக்கும்.
அதிதி – அருமை…

