உலகத்திலேயே ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு சகோதரிகள் நடித்துள்ள ஒரே படம் என்ற சாதனையைப் புரிந்துள்ள படம். சிறுவர், சிறுமியர்களுக்கான படமாக இந்தப் படத்தை உருவாக்கியுள்ள இயக்குனர் குரு ரமேஷ், குடும்பத்துடன் பார்த்து ரசிக்க வைத்துள்ளார். பேச முடியாத, காது கேளாத நான்கு சிறுமிகள்தான் படத்தின் நாயகன், நாயகி எல்லாமே. அழகான உயிரியல் பூங்கா பின்னணியில் ஒரு ஆங்கிலப் படத்துக்குரிய தோற்றத்துடன் இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார்கள். கதை ‘ஜெயம்’ ராஜா, மானு தம்பதியினருக்கு ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு பெண் குழந்தைகள். ஆனால், ராஜாவும் மானுவும் விவகாரத்துக்கு விண்ணபித்துள்ளார்கள். இதனிடையே, உயிரியல் பூங்காவுக்குச் சுற்றுலா சென்ற நான்கு சிறுமிகளும் காணாமல் போய்விடுகிறார்கள். அதே சமயம், ஒரு மலைப் பாம்பும் கூண்டிலிருந்து தப்பித்து விடுகிறது. காணாமல் போன சிறுமிகளைக் காப்பாற்ற டீச்சரான மாளவிகாவும், உயிரியல் பூங்கா ஊழியரான நிதின் சத்யாவும் முயற்சிக்கிறார்கள். இதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் பரபரப்பான கிளைமாக்ஸ்.
ஒரு ஆங்கிலப் படத்துக்குரிய பரபரப்பு படத்தில் இருக்கிறது. அதே போல படத்தின் நீளமும் ஆங்கிலப் படம் போலவே ஒன்றரை மணி நேரம் மட்டுமே இருக்கிறது. முழு கதையும் உயிரியல் பூங்காவுக்குள் நடைபெற்றாலும் எந்த தொய்வும் இல்லை. ஒரு பரபரப்பான கதைக்குள் கணவன் – மனைவி – குந்தைகள் சென்டிமென்ட், காதலன் – காதலி சென்டிமென்ட் ஆகியவற்றை இணைத்திருப்பது பெண்களைக் கவரும். இயக்குனரான ராஜா நடிகராக அறிமுகமாகியுள்ள படம், இயல்பாக நடித்திருக்கிறார். ‘காதல் மன்னன்’ படத்தின் நாயகி 15 ஆண்டுகளுக்குப் பிறகு அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
நான்கு சிறுமிகளையும் வைத்து இன்னும் கொஞ்சம் குறும்புத்தனங்களை வெளிப்படுத்தியிருக்கலாம். மனோபாலா, சிவசங்கர் நகைச்சுவை படத்திற்கு தேவையில்லாதது. அவ்வளவு பெரிய மலைப் பாம்பு தப்பித்திருக்க, நிதின் சத்யாவும், மாளவிகாவும் அவ்வளவு பரபரப்பைக் காட்டவில்லை. இன்னும் கொஞ்சம் நீளத்தைக் கூட்டியிருக்கலாம். என்ன சத்தம் இந்த நேரம் – இரண்டு மணி நேரம் செலவழித்து படத்தைப் பார்க்கலாம்…