லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா முதன் முறையாக நடித்துள்ள ‘அஞ்சான்’ படம் வரும் 15ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. யுவன்ஷங்கர் ராஜா இசையில் பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றுவிட்டது.
சூர்யா ஜோடியாக சமந்தா நடிக்க, ‘பில்லா 2, துப்பாக்கி’ படங்களின் வில்லனான வித்யுத் ஜமால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மும்பையைக் கதைக்களமாகக் கொண்டுள்ள இந்தப் படம் ‘சிக்கந்தர்’ என்ற பெயரில் தெலுங்கிலும் வெளியாகிறது.
கடந்த சில நாட்களாகவே சூர்யா இந்தப் படத்தின் பிரமோஷனுக்காக ஆந்திரா, கேரளா என பல இடங்களுக்குச் சென்று வருகிறார். நேற்று தெலுங்குப் படத்திற்கான இசை வெளியீட்டின் வெற்றி விழாவை ஆந்திர மாநிலம், விசாகப்பட்டிணம் நகரில் கொண்டாடியிருக்கிறார்கள். இயக்குனர் லிங்குசாமி, சூர்யா, தெலுங்குப் படத்தின் தயாரிப்பாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
விழாவில் உரையாற்றிய தயாரிப்பாளர் ஸ்ரீதர், தமிழில் ‘அஞ்சான்’ படத்தின் வசூல் இலக்காக 100 கோடி ரூபாயை வைத்திருக்கிறார்கள். தெலுங்கிலும் இந்தப் படம் 50 கோடி வரை வசூலாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.
ஹிந்தியில் மட்டுமே ‘100 கோடி ரூபாய் கிளப்’ என்பது சமீப காலமாக ‘200 கோடி ரூபாய் கிளப்’ மாறியுள்ள நிலையில் தமிழில் ‘அஞ்சான்’ படத்தின் வசூல் ‘100 கோடி ரூபாய் கிளப்’பை அசராமல் ஆரம்பித்து வைக்கும் என்று கோடம்பாக்கத்தில் பேசிக் கொள்கிறார்கள்.