‘ஜீவா’ படத்தை வாங்கிய காரணம்…விஷால் பேச்சு…

jeeva - vishal speech‘பாண்டிய நாடு’ வெற்றிப் படத்தைத் தொடர்ந்து சுசீந்திரன் இயக்கி வரும் படம் ‘ஜீவா’. விஷ்ணு விஷால், ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ நாயகி ஸ்ரீதிவ்யா, சூரி மற்றும் பலர் நடிக்கும் இந்த படத்தை வெண்ணிலா கபடி டீம் புரொடக்ஷன்ஸ், மற்றும் நடிகர் ஆர்யாவின் தி ஷோ பியூப்பிள், தி நெக்ஸ்ட் பிக் பிலிம் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்தன.

‘வெண்ணிலா கபடி குழு’ படத்தின் மூலம் அறிமுகமான இயக்குனர் சுசீந்திரன், விஷ்ணு விஷால் இந்தப் படத்தின் மூலம் மீண்டும் இணைகிறார்கள். கிரிக்கெட்டை மையப்படுத்திய இந்தப் படத்தை மிகவும் யதார்த்தமாகவும், அழுத்தமாகவும் எடுத்திருக்கிறார்களாம்.

படத்தை பார்த்து மிகவும் பிடித்துப் போன நடிகர் விஷால் அவருடைய தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி மூலம் திரைப்படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார். படத்தின் இசை வெளியீடும், பத்திரிகையாளர் சந்திப்பும் நேற்று நடைபெற்றது. அப்போது ‘ஜீவா’ படத்தை வாங்கி வெளியிடும் காரணத்தை விஷால் கூறினார்.

“இயக்குனர் சுசீந்திரன் போன வருஷம் டிசம்பர்ல இந்த படத்தோட கதைய எங்க எல்லாருக்கும் சொன்னாரு. எல்லா நடிகர்களுக்கும் ஒரு ‘கேம் சேஞ்சர்’ தேவைப்படும். நாம என்னதான் முயற்சி பண்ணாலும் ஒரு காலகட்டத்துல ஒரு இயக்குனர்தான் நம்மள கொண்டு போய் சேர்ப்பாரு. எனக்கு எப்படி ‘அவன் இவன்’ படம் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்திக் கொடுத்துதோ, அதாவது ‘அவன் இவன்’ முன்னாடி, ‘அவன் இவன்’ பின்னாடி-ன்னு, எனக்கு ஒரு பேர் வரக் காரணமா ஆர்யா இருந்தாரு. அந்த படத்துக்காக நான் பாலா சாருக்கு எப்படி நன்றி சொல்லிட்டிருக்கேனோ அப்படி இந்த ‘ஜீவா’ படம் விஷ்ணுவுக்கு அமையும். இந்தப் படம் விஷ்ணுவுக்கு ஒரு ‘கேம் சேஞ்சரா’  இருக்கும்னு நான் நம்பறேன்.

ஒரு நல்ல படத்துல என் பேர் பதிவாகணும்கற நோக்கத்துலதான் இந்தப் படத்தை வாங்கி நான் வெளியிடறேன். லாப நோக்கத்துக்காகவே, வேற எதுக்காகவே இந்தப் படத்தை வாங்கலை. எனக்கு ரெண்டு நோக்கம் என் தம்பி விஷ்ணு பெரிய ஹீரோவா வரணும். இரண்டாவது இந்த மாதிரி நல்ல படங்கள் வந்து ஐந்து வருஷம் கழிச்சி பார்த்தால் கூட நல்ல படம்னு பேரு எடுக்கிற படமா இருக்கும்னு நம்பிதான் இந்த படத்தை பதிவு பண்ண நினைக்கிறேன். சுசீந்திரன் தொடர்ச்சியா நல்ல படங்களையே கொடுத்துட்டு வர்றாரு.

இந்தப் படத்தோட டிரைலர்ல கடைசியா ஒரு டயலாக் வரும். ”எல்லா நாட்டுலயும் விளையாடறதுக்கு வாய்ப்பு கிடைச்சிதான் தோத்துப் போவாங்க. ஆனால், இந்த நாட்டுல மட்டும் வாய்ப்பே கிடைக்காம நிறைய பேர் தோத்துப் போயிருக்காங்கன்னு” டயலாக் இந்தப் படத்தை வாங்கிறதுக்கு எனக்கு ஒரு இன்ஸ்பிரேஷனா இருந்தது. வாழ்க்கையில எந்த நேரத்துலயும் நாம கலங்கிடக் கூடாது, அதத்தான் நான் ஃபாலோ பண்ணிட்டு வர்றேன். இந்த விஷயம் படத்துல ரொம்ப நல்லா சொல்லப்பட்டிருக்கு, ” என்றார் விஷால்.

இந்தப் மாதம் 26ம் தேதி 200 திரையரங்குகளுக்கும் மேல் ‘ஜீவா’ படம் வெளியாக உள்ளது.

Read Previous

தமிழை என்றும் மறக்க மாட்டேன் – பிரபுதேவா

Read Next

இன்றைய ரிலீஸ் – 3 படங்கள்…

Most Popular