இன்றைய தேதியில் இந்தித் திரையுலகில் பரபரப்பான இயக்குனர்களில் முன்னணியில் இருந்து கொண்டிருப்பவர் பிரபு தேவா. தமிழ்த் திரையுலகில் குழு நடனத்தில் ஆரம்பித்து, ‘லாலாக்கு டோல் டப்பிமா’ என ‘சூரியன்’ படத்தில் தனி நடன நடிகராகவும் நடித்து, தொடர்ந்து நடன இயக்குனராக பல படங்களில் பணியாற்றி விட்டு ‘காதலன்’ திரைப்படம் மூலம் நாயகனகவும் உயர்ந்து பல வெற்றிப் படங்களிலும் நடித்தவர்.
தொடர்ந்து நடிப்பதை குறைத்துக் கொண்டு தெலுங்குத் திரையுலகில் 2005ல் வெளிவந்த ‘நூவொஸ்தாவன்டே நேனு ஒத்தன்டானா’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அந்தப் படம் தமிழிலும் ‘உனக்கும் எனக்கும்’ என்ற பெயரிலும் ரீமேக்காககி பெரிய வெற்றியைப் பெற்றது.
அடுத்து தமிழில் விஜய், அசின் நடிக்க ‘போக்கிரி’ என்ற மாபெரும் வெற்றிப் படத்தையும் இயக்கினார். இப்படத்தை சல்மான் கான், ஆயிஷா தாக்கிய நடிக்க ஹிந்தியிலும் இயக்கினார் பிரபுதேவா. இந்தப் படம் 2009ம் ஆண்டில் அதிக வசூலைக் குவித்த படங்களில் இரண்டாம் இடத்தைப் பிடித்த படமாக விளங்கியது.
தொடர்ந்து ஹிந்தியில் பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து “ரவுடி ரத்தோர், ராமையா ஒஸ்தாவையா, ஆர் ராஜ்குமார்” ஆகிய படங்களை இயக்கினார். தமிழில் ‘‘வில்லு, எங்கேயும் காதல், வெடி” ஆகிய படங்களையும் இயக்கினார். தற்போது அஜய் தேவகன், சோனாக்ஷி சின்ஹா நடிக்க ‘ஆக்ஷன் ஜாக்சன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். அடுத்து மீண்டும் அக்ஷய் குமார் நடிக்கும் படத்தை இயக்கப் போகிறார்.
தமிழில் வந்து மீண்டும் படம் இயக்காத அளவிற்கு ஹிந்தியில் தொடர்ந்து பிஸியாகவே இருக்கிறார். மூன்று வருடங்கள் கழித்து சென்னையில் நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
“தமிழில் இருந்துதான் எனது பயணத்தை ஆரம்பித்தேன். அதனால் தமிழை மறக்க மாட்டேன். மீண்டும் எப்போது தமிழ்ப் படத்தை இயக்குவேன் என்று தெரியவில்லை.
‘ஐ’ படத்தில் நடன இயக்குனராக பணியாற்ற வேண்டும் என்று ஆசைப்பட்டேன். இயக்குனர் ஷங்கரைத் தொடர்பு கொண்டு கேட்ட போது, நீங்க ரொம்ப பிஸியா இருக்கீங்க பிரபு, அதான் உங்களைக் கூப்பிடலை’ என்று பதிலளித்தார். பரவாயில்லை சார் உங்க படத்துக்காக அட்ஜஸ்ட் பண்ணிட்டு வந்திருப்பேனே எனச் சொன்னேன்.
‘களவாடிய பொழுதுகள்’ படம் எப்போது வரும் என்று தெரியவில்லை. நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்தால் தமிழில் கண்டிப்பாக நடிப்பேன்.
இயக்கத்தைப் பொறுத்தவரைக்கும் ஒரு நல்ல கமர்ஷியல் இயக்குனராக இருக்கணும்னுதான் ஆசைப்படறேன். விருது வாங்கற மாதிரியான படங்களை எடுக்கலாம் ஆசையில்லை.
தமிழ்ப் படங்களைப் பற்றி ஹிந்தித் திரையுலகில் நிறையவே கவனித்து வருகிறார்கள். தமிழ்ப் படங்களின் நிலை தற்போது எங்கேயோ உயர்ந்து வருகிறது.
என்னைப் பொறுத்தவரையில் தமிழில் சிறப்பாக நடனம் ஆடக் கூடிய நடிகர் விஜய்தான். வடிவேலு நடிக்கும் படத்தை இயக்குவதாக வந்த செய்திகளில் உண்மையில்லை.
எனக்கு திருமண ஆசையெல்லாம் இல்லை. இப்போது தனியாகத்தான் இருக்கிறேன். எனது படங்கள், எனது குழந்தைகளுடன் நேரம் போவதே தெரிவதில்லை. இதுவும் எனக்குப் பிடித்திருக்கிறது, ” என்றார்.