காமிக் புக் பிலிம்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்னும் புதிய பட நிறுவனம், சிங்கப்பூர் மீடியா அதாரிட்டி நிறுவனத்தாருடன் இணைந்து ‘சென்னை சிங்கப்பூர்’ என்ற தமிழ்ப் படத்தை தயாரிக்கின்றனர்.
இந்த படத்தின் மூலம் சிங்கப்பூர் தமிழ் சினிமாவுக்கு பிரதான வர்த்தக வாயிலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிங்கப்பூர் மற்றும் மலேசியாவை சேர்ந்த பல்வேறு திரையுலகத் திறமைகள் ஒருங்கிணைந்து இந்தப் படத்தில் பணியாற்றுகிறார்கள். பல்வேறு ஆவணப் படங்களை தயாரித்து இயக்கிய அப்பாஸ் அக்பர் என்னும் அறிமுக இயக்குனர் கதை , திரைக்கதை அமைத்து இப்படத்தை இயக்குகிறார்.
சென்னையை சார்ந்த ஒரு வளரும் இயக்குனர் சிங்கப்பூருக்கு வாய்ப்பு தேடிச் செல்கிறான். அங்கே அவன் சென்னையைச் சேர்ந்த ஒரு பெண்ணை சந்திக்க நேரிடுகிறது. அவர்களுக்குள் அங்கே உருவாகும் காதலும் அதன் தொடர்ச்சியாக ஏற்படும் சம்பவங்களும்தான் படத்தின் கதை.
‘அமர காவியம்’ மூலம் இளைஞர்களை குறிப்பாக இளம் பெண்களை அதிக அளவில் கவர்ந்த சத்யா இந்த படத்திலும் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ‘திருமணம் எனும் நிக்காஹ்’ படத்தில் அறிமுகமான ஹெப்பா படேல் நடிக்கிறார்.
‘ஆந்திரா மெஸ்’ என்ற படத்தில் அறிமுகமாகும், திறமையானப் ஒளிபதிவாளர் என்று பாராட்டப்படும் முகேஷ் ஒளிப்பதிவில் , தேசிய விருது பெற்ற படத் தொகுப்பாளர் கே.எல்.பிரவீன் படத்தொகுப்பில், “வாகை சூடவா, திருமணம் எனும் நிக்காஹ், அமர காவியம், ரன் ராஜா ரன் [ தெலுங்கு]” ஆகிய படங்களுக்கு இசையமைத்த ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
‘சென்னை சிங்கப்பூர்’ அடுத்த வருடத்தின் துவக்கத்தில் வெளியாக உள்ளது.