நூற்றாண்டை நெருங்கிக் கொண்டிருக்கும் தமிழ் சினிமா உருவான இத்தனை ஆண்டு கால வரலாற்றில் விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சில படங்கள்தான் நம் உள்ளுணர்வையும் உருக்கி எடுக்கும். அப்படிப்பட்ட ஒரு படம்தான் இந்த ‘காவியத் தலைவன்’. ‘நேர்த்தி’ என்ற வார்த்தைக்கு இத்தனை நாட்களாக எதைக் குறிப்பிடுவது என்ற யோசனை இருந்து வந்தது, முதன் முறையாக இப்படிப்பட்ட ஒரு படத்திற்கு அந்த வார்த்தையைப் பயன்படுத்துவதுதான் சிறந்தது. ‘ஐ,’ போன்றும் ‘லிங்கா’ போன்றும் ஒரு படத்தை எடுப்பதற்கு ஆயிரமாயிரம் பேர் இருப்பார்கள். ஆனால், இப்படிப்பட்ட ஒரு படத்தை எடுப்பதற்குத்தான் துணிச்சல் வேண்டும். வெறும் கமர்ஷியல் சினிமாவிற்குள் மட்டும் அடங்கி விடாமல், என்னுடைய பாதை வேறு என “வெயில், அங்காடித் தெரு, அரவான்” ஆகிய படங்களில் அழுத்தமாக உணர்த்திய இயக்குனர் வசந்தபாலன், இந்த ‘காவியத் தலைவன்’ படத்தில் அதை இன்னும் ஒரு படி மேலே போய் அழுத்தமாக உணர்த்தியிருக்கிறார். சுதந்திர காலத்திற்கு முந்தைய ஒரு நாடகக் குழுவில் நடக்கும் விஷயங்கள்தான் படத்தின் கதை என நினைத்தால், அதில் கூட “சுதேசி, சுதந்திரம், தேசப் பற்று” என தனது எண்ணங்களை பதிய வைத்திருக்கிறார் வசந்தபாலன். சில இடங்களில் இன்றைய “பா” வரிசை இயக்குனர்களைக் கூட மிஞ்சி நிற்கிறார். இப்படி ஒரு படத்தை…இல்லை…இல்லை…ஒரு காவியத்தை படைக்க வேண்டும் என நீங்கள் நினைத்ததற்கே தனி பாராட்டுக்கள். நாசருக்குச் சொந்தமான நாடக சபாவில் சித்தார்த், பிருத்விராஜ் முக்கியமான நடிகர்கள். பிருத்விராஜை அவருடைய அப்பா சிறு வயதிலேயே நாடக சபாவில் சேர்த்து விடுகிறார். ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த சிறு வயது சித்தார்த்தை எடுத்து வந்து தனது சபாவில் அடைக்கலம் கொடுத்து வளர்க்கிறார் நாசர். பிருத்விராஜிற்கு எதிலும் தான்தான் முன்னிலையில் இருக்க வேண்டும் என்று ஒரு குணம். ஒரு சந்தர்ப்பத்தில் நாசரின் நாடக் குழுவில் ராஜபார்ட்டாக நடிக்கும் பொன்வண்ணன் கோபித்துக் கொண்டு சென்று விடுகிறார். எப்படியும் தான்தான் அடுத்த ராஜபார்ட் என நினைத்துக் கொண்டிருக்கும் பிருத்விராஜிற்கு, நாசர், சித்தார்த்தை ராஜபார்ட்டாக நடிக்கச் சொன்னதும் அதிர்ச்சியாகிறது. இதனிடையே ஜமீன் மகளான அனைகாவிற்கும், சித்தார்த்திற்கும் காதல் வர, சமயம் பார்த்து சித்தார்த்தை நாசரிடம் மாட்டி விடுகிறார் பிருத்விராஜ். அதனால் கோபமடையும் நாசர், சித்தார்த்தை நாடக சபாவை விட்டு விரட்ட முடிவெடுக்கிறார். ஆனால், சித்தார்த் மன்னிப்பு கேட்பதால் இனி அனைகாவைப் பார்க்கக் கூடாதெனச் சொல்லிவிட்டு, நடிக்கக் கூடாதென நிபந்தனை விதித்தும் திரும்பவும் சேர்த்துக் கொள்கிறார். நாடகக் குழு வேறு ஊருக்குச் செல்கிறது. சித்தார்த்தைப் பிரிந்ததால் அனைகா தற்கொலை செய்து கொள்ள, கோபமடையும் சித்தார்த் நாசருக்கு சாபமிட, நாசர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மரணமடைகிறார். சித்தார்த்தை சபாவை விட்டே துரத்துகிறார் பிருத்விராஜ். அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதி கதை. சித்தார்த், இத்தனை நாட்களாக இந்தத் திறமையை எங்கே மறைத்து வைத்திருந்தாரோ தெரியவில்லை. காளியப்ப பாகவதராக கம்பீரமாக நடித்திருக்கிறார். நடிப்பின் மீது உயிராக இருக்கும் ஒருவர் எந்த அளவிற்கு திறமையாக இருப்பாரோ அதே திறமையை படம் முழுவதும் காண்பித்திருக்கிறார் சித்தார்த். நாசர் மீது குரு பக்தியை காட்டுவதிலாகட்டும், பிருத்விராஜ் மீத பாசமாக இருப்பதிலாகட்டும், அனைகா மீதான காதலில் ஆகட்டும் படம் முழுவதிலுமே சித்தார்த், ‘சின்சியர்’ சித்தார்த் ஆக இருக்கிறார். அதிலும், நாசரிடம் அடி வாங்கிக் கொண்டு மன்னிப்பு கேட்கும் அந்த காட்சியில் உருக வைத்திருக்கிறார். அதே போல், காதலி அனைகா இறந்ததும், நாசர் மீதே வெகுண்டெழுந்து சாபம் விடுவதாகட்டும், சிம்ப்ளி சூப்பர்ப். நடிப்பதற்கான நல்ல மேடை கிடைத்தால்தான் ஒரு நடிகரின் சிறந்த திறமையும் வெளிப்படுகிறது. சித்தார்த்திற்கு இந்த ‘காவியத் தலைவன்’ அப்படிப்பட்ட ஒரு சிறந்த மேடையாக அமைந்துள்ளது. தமிழில் அறிமுகமான முதல் படமான ‘கனா கண்டேன்’ படத்திற்குப் பிறகு பிருத்விராஜிற்கு இந்த ‘காவியத் தலைவன்’ அமைந்துள்ளது. அவருடைய கோமதி நாயகம் கதாபாத்திரத்தில் வேறு யாரையும் நினைத்துப் பார்க்க முடியாததே அவருடைய கதாபாத்திரத்திற்குக் கிடைத்த வெற்றி. தான்தான் எதிலும் முன்னயில் இருக்க வேண்டும், தனக்குத்தான் பாராட்டுதலும், கைதட்டல்களும் கிடைக்க வேண்டும் என்ற அந்த குணாதிசயத்தை சர்வசாதாரணமாக வெளிப்படுத்தியிருக்கிறார் பிருத்விராஜ். ஒரு மலையாள நடிகராக இருந்து கொண்டு அழகான தமிழ் உச்சரிப்பை வழங்கியதற்காக பிருத்விராஜிற்கு ஸ்பெஷல் பாராட்டுக்கள். பிருத்விராஜை, இன்னொரு நாயகன் என்று சொல்வதா அல்லது கூட இருந்தே குழி பறிக்கும் வில்லன் என்று சொல்வதா…?. கொஞ்ச நேரமே வந்தாலும் அம்சமாக வந்து செல்கிறார் அனைகா. வேதிகாதான் படத்தின் நாயகி என்றாலும் சித்தார்த், பிருத்விராஜ் ஆகியோருக்கு இருக்கும் முக்கியத்துவத்தில் அவர்களது நடிப்புக்கு அருகில் கூட செல்ல முடியாமல் தவிக்கிறார். இருந்தாலும், அறிமுகமாகும் அந்தக் காட்சியில் அவரின் ‘அபிநயம்’ அழகோ அழகு. சிவதாஸ் சாமிகள் ஆக நாசர். ஒரு நாடகக் குழுவின் தலைவர் எப்படி இருப்பார் என்பதை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார். இதுவரை எத்தனையோ கதாபாத்திரங்களில் அவர் நடித்திருந்தாலும், இந்த ‘சாமி’ கதாபாத்திரம் அவருடைய சிறந்த பத்து கதாபாத்திரங்களில் ஒன்றாக அமையும். நாடகக் குழு வாத்தியாராக தம்பி ராமையா, நாடக காண்டிராக்டராக மன்சூரலிகான் மற்றும் சிங்கம்புலி, குயிலி, கரிகாலன் அவரவர் கதாபாத்திரங்களில் நிறைவாக நடித்திருக்கிறார்கள். ஏ.ஆர்.ரகுமான் இசையில், “ஏ…சண்டிக் குதிரை…, ஹே மிஸ்டர்…, வாங்க மக்கா வாங்க…” தாளம் போட வைக்கின்றன. பின்னணி இசையில் அந்தக் காலத்திற்கே நம்மை அழைத்துச் செல்கிறார் ரகுமான். நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு, பிரவீண் படத் தொகுப்பு, ஜெயமோகனின் வசனம், பட்டிணம் ரஷீத்தின் மேக்கப், நிரஞ்சனி அகத்தியனின் ஆடை வடிவமைப்பு, சந்தானத்தின் கலை இயக்கம் அனைத்துமே படத்திற்கு பக்கபலமாக அமைந்துள்ளன. தமிழ்த் திரையுலகில் ஒரு அட்டகாசமான கலாச்சாரப் பதிவை படைத்திருக்கிறார் இயக்குனர் வசந்த பாலன். ‘காவியத் தலைவன்’ – காணக் கண் கோடி வேண்டும்…