“விண்ணைத்தாண்டி வருவாயா, அழகர்சாமியின் குதிரை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், தேசிங்கு ராஜா, மான் கராத்தே ஆகிய வெற்றிப் படங்களைத் தொடர்ந்து, தற்போது பிரபுசாலமன் இயக்கத்தில் கயல் படத்தைத் தயாரித்து வரும் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ் பி லிட் பட நிறுவனம் சார்பில் பி. மதன் தயாரிக்கும் புதிய படம் ‘மாப்ள சிங்கம்’.
இப்படத்தில் விமல் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக அஞ்சலி நடிக்கிறார். “தூங்கா நகரம், கலகலப்பு” ஆகிய படங்களுக்குப் பிறகு இருவரும் ஜோடியாக நடிக்கும் மூன்றாவது படம் இது.
“கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா” ஆகிய வெற்றிப்படங்களைத் தொடர்ந்து எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ் பட நிறுவனத்துடன் விமல் இப்படத்தின் மூலம் மூன்றாவது முறையாக மீண்டும் இணைந்துள்ளார்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குனராக அறிமுகமாகிறார் ராஜசேகர். இவர் இயக்குநர் எழிலிடம் உதவியாளராகப் பணியாற்றியவர்.
இப்படத்தில் நகைச்சுவை வேடத்தில் சூரி நடிக்க மற்றும், ராதாரவி, மனோபாலா, மயில்சாமி, ‘முனீஸ்காந்த்’ ராம்தாஸ், காளி வெங்கட், சிங்கமுத்து, சுவாமிநாதன், விஷ்ணு ஆகியோர் நடிக்கின்றனர்.
இவர்களுடன், ஏ.ஆர்.ரஹ்மானின் கே.எம். மியூஸிக் ஸ்கூலின் துணை முதல்வர் ஆடம் க்ரீக் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
ரகுநந்தன் இசையமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னை, அனகாபுத்தூரில் உள்ள முருகன் கோயிலில் பூஜையுடன் ஆரம்பமானது. தொடர்ந்து சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.