லிங்கா – விமர்சனம்

lingaa review ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பழைய துடிப்பான ரஜினியைப் பார்த்து ரசிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ‘முத்து, படையப்பா’ படங்களுக்குப் பிறகு கே.எஸ்.ரவிக்குமார் – ரஜினிகாந்த் கூட்டணி மீண்டும் இணைந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கிறது. ஒரு ‘அணை’ அதைச் சுற்றி நடக்கும் பிரச்சனைதான் கதை. மலை சூழ்ந்த பசுமையான கிராமம், கிராமத்து மனிதர்கள், ரஜினியை உயர்வாக நினைக்கும் உள்ளூர் மக்கள், ரஜினியைக் காதலிக்கும் கதாநாயகிகள், ரஜினிக்கென ஒரு ஓபனிங் சாங், ராதாரவி, விஜயகுமார், நிழல்கள் ரவி என ரஜினிகாந்தின் படங்களில் இருக்கம் வழக்கமான விஷயங்கள் அனைத்துமே படத்தில் இருக்கிறது. இருந்தாலும் வழக்கம் போலவே படத்தைத் தாங்கிப் பிடித்திருக்கிறார் ரஜினிகாந்த். தேவையற்ற சண்டைக் காட்சிகள், ஆவேசமாக சவால் விடும் காட்சிகள் என இல்லாமல் அமைதியான அதே சமயம் துணிவான ஒரு ரஜினிகாந்தைப் பார்ப்பது அவருடைய வழக்கமான நடிப்பிலிருந்து இந்தப் படத்தை வேறுபடுத்திக் காட்டியிருக்கிறது. சோலையூர் கிராமத்தில் பல ஆண்டுகளாக மூடிக் கிடந்த கோயிலைத் திறக்க ஊர் பெரியவரான கே.விஸ்வநாத் முடிவு செய்கிறார். ஆனால், அந்தக் கோயிலைத் திறக்க அந்த ஊருக்கே தெய்வமாக விளங்கிய ராஜா லிங்கேசுவரனின் (ரஜினிகாந்த்) வாரிசுதான் வரவேண்டும் என்கிறார். அந்த வாரிசைத் தேடி தொலைக்காட்சி நிருபரான விஸ்வநாத்தின் பேத்தி அனுஷ்கா செல்கிறார். சென்னையில் ராஜா லிங்கேசுவரனின் வாரிசான அவருடைய பேரன் லிங்காவைக் (ரஜினிகாந்த்) கண்டுபிடிக்கிறார். திருட்டுத் தொழில் செய்து வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கும் ரஜினியை ஒரு வழக்கில் சிக்க வைத்து சோலையூருக்கு அழைத்து வருகிறார் அனுஷ்கா. தாத்தா மீது எந்த அபிமானமும் இல்லாத லிங்கா – ரஜினிகாந்திடம் அந்தக் கோயிலில் உள்ள மரகத லிங்கத்தைப் பற்றித் தெரிவிக்கிறார் விஸ்வநாத். இரவோடு இரவாக அந்த லிங்கத்தைத் திருடி ஓடிவிடலாம் என ரஜினி நினைக்கிறார். அந்த திருட்டு நடக்கும் சமயத்தில் விஸ்வநாத் மூலம் தனது தாத்தாவின் பெருமைகளைப் பற்றி ரஜினி அறிந்து கொள்கிறார். ரஜினியின் தாத்தாதான் அந்த ஊருக்கே ஜீவாதாரமாக இருக்கும் அணையை கட்டியவர். இப்போது அந்த அணைக்கு மிகப் பெரிய ஆபத்து ஒன்று வர ரஜினி அதை எப்படிக் காப்பாற்றுகிறார் என்பதுதான் படத்தின் மீதிக் கதை. ரஜினியின் கதாபாத்திரங்களைப் பார்க்கும் போது கொஞ்சம் ‘முத்து, அருணாச்சலம்’ வாசனை அடித்தாலும், இதில் வேறு விதமான ரஜினியைப் பார்க்க முடிகிறது. பேரன் ரஜினியை விட தாத்தா ரஜியின் தோற்றமும், நடிப்பும் மிக மிக வித்தியாசமாக அமைந்துள்ளது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் மகாராஜாவாக இருக்கும் ராஜா லிங்கேசுவரன் கதாபாத்திரத்தில் ரஜினியின் நடிப்பு கம்பீரத்தில் சிறிதும் குறைவில்லாமல் இருக்கிறது. மக்களுக்கு எதையாவது செய்ய வேண்டும் என்று துடிக்கும் கலெக்டராக அசத்தலான டிரெயின் சண்டைக் காட்சியில் அறிமுகமாகுபவர், பின்னர் மகாராஜா என்ற உண்மை தெரிய வருவது ரஜினியை முதலில் எதிர்க்கும் ஒரு பிரிட்டிஷ் கலெக்டருக்கு ஏற்படும் அதிர்ச்சியை விட நமக்கும் அதிர்ச்சிதான். தனது சொத்துக்கள், அரண்மனை அனைத்தையும் விற்று ஊர் மக்களுக்காக அணை கட்ட இஞ்சினியரான மகாராஜா லிங்கேசுவரன் எடுக்கும் முயற்சியும், அதற்காக வரும் எதிர்ப்புகளை அவர் சமாளிப்பதிலும் நமது மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து கொள்கிறார். ரஜினியின் இமேஜை இந்தக் கதாபாத்திரம் பல மடங்கு உயர்த்தியிருக்கிறது. பேரன் லிங்கா வாக நடிக்கும் கதாபாத்திரத்தில் இன்றைய ஸ்டைலான ரஜினிகாந்த், அனுஷ்காவுடனான காதல் காட்சிகளில் மட்டும் கொஞ்சம் சுவாரசியமான அத்து மீறல். ஆரம்பத்தில் கொஞ்சம் கலகலப்பு, கிளைமாக்சில் ஆக்ஷன் என இந்தக் கதாபாத்திரத்தில் சில முக்கிய விஷயங்கள் இருந்தாலும் தாத்தா ரஜினியிடம் பேரன் ரஜினி தோற்றுப் போகிறார். கொஞ்சம் கிளாமருக்கு அனுஷ்கா, நடிப்புக்கு சோனாக்ஷி சின்ஹா. எங்கெங்கோ கேமராவை வைத்துக் கொண்டு புலனாய்வு பத்திரிகையாளராக இருக்கும் அனுஷ்காவையே ஆட்டம் காண வைக்கிறார் திருடன் ரஜினிகாந்த். அந்த நகைக் கொள்ளைக் காட்சி கொஞ்சம் நீளமோ நீளம் என்றாலும் ரஜினிக்கும், அனுஷ்காவிற்கும் இருக்கும் அந்த நெருக்கத்தால் அந்தக் காட்சி  கூட சுருக்கமாகத் தெரிகிறது . இருந்தாலும் அனுஷ்காவின் அறிமுகக் காட்சியில் அவரை பாவாடை, தாவணியில் காட்டியிருப்பதெல்லாம் ரொம்பவே ஓவர். அவருக்கிருக்கிற உயரத்துக்கு லாரில கூட ஈஸியா ஏறிடுவாரு என சந்தானமே கலாய்க்கிறாரே இயக்குனர் சார், அப்படியிருக்க எப்படி பாவாடை தாவணிலாம் கொடுத்தீங்க. ரஜினிக்கும், அனுஷ்காவுக்கும் இன்னும் கூட கொஞ்சம் காதல் காட்சிகள் வச்சிருக்கலாம்…ரெண்டு பேருக்கும் உள்ள கெமிஸ்ட்ரி அவ்வளவு அழகா இருக்கு. அடுத்த படத்துலயும் ரஜினிக்கு ஜோடியா நடிகக அனுஷ்காவுக்கு சான்ஸ் கொடுங்கப்பா…. பிளாஷ்பேக்கில் வரும் ராஜா லிங்கேசுவரன் ரஜினிக்கு ஜோடியாக சோனாக்ஷி சின்ஹா. குறும்புத்தனமான கிராமத்துப் பெண்ணாக சோனாக்ஷி…‘ச்சோ ஸ்வீட்…’. பாரதி என்ற கதாபாத்திரத்தில் ப்பா…ரதி என சொல்ல வைக்கிறார். அப்படியே தமிழ்ல தொடர்ந்து நடிங்கம்மா…பார்த்த முகங்களையே பார்த்துப் பார்த்து போரடிக்குது. காட்சிக்குக் காட்சி நடிப்புல பொளந்து கட்டியிருக்காங்க. ஜாக்கெட் இல்லாமல் புடவை மட்டும் அணிந்திருந்தாலும் எங்குமே துளி கூட கிளாமர் இல்லை. ஏன் இந்த ஓர வஞ்சனை… சந்தானம் வழக்கம் போல தனது காமெடியில் கலகலக்க வைக்கிறார். அவர் வர்ற ஒவ்வொரு காட்சியிலயும் ஒரு நகைச்சுவை பன்ச் வச்சி காமெடியை பத்த வைக்கிறாரு. கருணாகரன், பாலாஜி அவருக்குத் துணை அவ்வளவே. ஜெகபதி பாபுதான் வில்லன், எம்.பியாக இருந்தாலும் ஊரை அடித்து உலையில் போடத் துடிக்கும் அரசியல்வாதி, இங்கு அணையை வைத்து பணத்தை அள்ளிப் போட நினைக்கிறார். ஊர் பெரிய மனிதராக கே.விஸ்வநாத். இவர்களிருவரின் வசன உச்சரிப்பிலும் தெலுங்கு வாடை, டப்பிங்காவது கொடுத்திருக்கலாம். பிளாஷ்பேக் ரஜினியின் உதவியாளராக இளவரசு, நிறைவு… ஏ.ஆர்.ரகுமான் இசையில் அனைத்துப் பாடல்களும் ஒவ்வொரு விதத்தில் அருமை…குறிப்பாக, “மோனா கசோலினா…., சின்னச் சின்ன நட்சத்திரம்…” இந்த ஆண்டின் சூப்பர் ஹிட் பாடல்கள்…பாடல் காட்சிகளிலும், டிரெயின், கிளைமாக்ஸ் காட்சிகளிலும் கேமரா மேன் ரத்தினவேலுவின் உழைப்பு தெரிகிறது. படத் தொகுப்பாளர் காட்சிகளைக் கொஞ்சம் கத்தரித்திருக்கலாம். ரஜினி நகை திருடும் காட்சி மிகவும் நீளம்…கிளைமாக்சில் காதில் மிகப் பெரிய மாலையை சூட்டுகிறார்கள். சில பல இடங்களில் லிங்கா கொஞ்சம் லென்த்தா…உள்ளது.  

Read Previous

ரஜினிக்கு கமல் பிறந்த நாள் வாழ்த்து…

Read Next

‘உயிரே உயிரே’ படத்திற்கு ரஜினிகாந்த்தின் உதவி…

Most Popular