தமிழ் சினிமாவில் அதிகப்படியாக எடுக்கப்படும் படங்கள் இரண்டே இரண்டு வகைதான்…ஒன்று காதல் படங்கள், மற்றொன்று ஹீரோயிசம் படங்கள்… குடும்பப் படங்கள், தொலைக்காட்சித் தொடர்களால் காணாமல் போய்விட்டது. ‘த்ரில்லர், ஹாரர்’ வகைப் படங்கள் எப்போதாவது ஒரு முறை வந்தாலும், அட…போங்கப்பா…பேயாவது…பிசாசாவது…என்ற விதத்தில்தான் நம்மை பயமுறுத்தியிருக்கின்றன. ஆனால், இந்த ‘யாமிருக்க பயமே’ படத்தில் இயக்குனர் டீகே, ‘டபுள் ஓகே’ எனச் சொல்லும் விதத்தில் ‘ஆஆஆஆ….’ என இரண்டு மணி நேரமும் அதிர்ச்சியிலேயே உறைய வைத்து விடுகிறார். ஒரு ‘ஹாரர்’ கதையை பயமுறுத்தியும், சிரிக்க வைத்தும் கொடுப்பதென்றால் சாதாரண விஷயமில்லை. இயக்குனர் டீகே அதைச் சரியாகச் செய்திருக்கிறார். ஆரம்பத்தில் ‘பவர் ஸ்டார்’ மாத்திரை வைத்து கலகலப்பாக ஆரம்பமாகும் படம், கடைசியில் ‘இப்பதானே போனாங்க, அதுக்குள்ளவா….’ என முடியும் காட்சி வரையிலும் சிலிர்க்கவும், சிரிக்கவும் வைத்து ரசிகர்களை ‘வாடா…வாடா…..வாடா…..’ இல்லை..இல்லை…‘வாங்க வாங்க…வாங்க…’ என தியேட்டருக்கு வரவைத்து விடுவார்…(வாடா வாடா வாடா…காரணம் படம் பார்த்தால் புரியும்…) கிருஷ்ணாவுக்கு, அவருடைய அப்பா எழுதி வைத்த சொத்து கைக்கு கிடைப்பதால், காதலி ரூபா மஞ்சரியிடன், சொத்திருக்கும் இடமான மலைப் பிரதேசத்திற்கு பயணிக்கிறார். அங்கு போய்ப் பார்த்தால் சொத்தாக இருப்பது ஒரு பழைய பங்களா. சொத்தின் பத்திரத்தை வைத்திருக்கும் கருணாகரன், அவரது தங்கை ஓவியாவுடன் சேர்ந்து அந்த பங்களாவை புதுப்பித்து ‘ரிசார்ட்’ நடத்த ஆரம்பிக்கிறார்கள். ஆனால், அந்த ரிசார்ட்டில் வந்து தங்குபவர்கள் ஒவ்வொருவராக இறந்து போகிறார்கள். ஏன், அப்படி நடக்கிறது எனப் புரியாமல் நால்வரும் தவிக்கிறார்கள். அதைக் கண்டுபிடித்து சொத்தை தக்க வைத்துக் கொண்டார்களா இல்லையா என்பதுதான் படத்தின் கதை. ஒரு த்ரில்லர் படத்துக்கு இதுக்கு மேல கதையைச் சொல்லக் கூடாது. ஹாரர் படம்னாலே ஒரு பங்களா, இல்லை அந்தக் கால வீடு, என்ற ‘ஃபார்முலா’வை இயக்குனர் மாற்றவில்லை. இருந்தாலும், பயமுறுத்தும் காட்சிகளிலும், இறந்தவர்களை மறைப்பதில் கூட ‘ஜஸ்ட் லைக் தட்’ என வைத்து காட்சிகளில் பல சுவாரசியத்தை இணைத்திருப்பதால் பல ‘லாஜிக்’குகள் ‘மேஜிக்’காய் மாறிவிட்டன. கிருஷ்ணாவிற்கு இந்த படம் சரியான திருப்புமுனையைக் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆச்சரியப்படுவதிலும், பயப்படுவதிலும் கண்களை முழிக்க வைத்தே நடிப்பில் முன்னுக்கு வந்திருக்கிறார். நகைச்சுவை நடிப்பு கூட சர்வசாதாரணமாய் வருகிறது. ம்ம்…தம்பியுடையான் படைக்கு அஞ்சான் என்பார்கள். ’தமிழ் சினிமாவில் அண்ணன் உடையான் படத்துக்கு அஞ்சான்’ என்றுதான் சொல்ல வேண்டும். அடுத்தடுத்த படங்களில் அண்ணன் இயக்குனர் விஷ்ணுவர்தனே இவரைக் கரை சேர்த்துவிடுவார். அந்த அளவிற்கு இந்த படத்தில் தனி முத்திரை பதித்துவிட்டார் கிருஷ்ணா. ரூபா மஞ்சரி, இந்த மாதிரியான ஒரு கிண்டலான கதாபாத்திரத்தில் நடிக்க சம்மதித்ததற்கே பெரிய மனது வேண்டும். போகிற போக்கில் அவரை சரமாரியாகக் கிண்டல் செய்து விட்டுப் போகிறார்கள். அவரும், அதை திரையில் பெரிதாகக் காட்டிக் கொள்ளாமல், யதார்த்தமாய் நடித்திருக்கிறார். அதுவே அவருக்கும் கிடைத்த வெற்றி. கருணாகரன், கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக மாறி வருகிறார். இந்த படத்தில் மற்றொரு கதாநயாகனாகத்தான தெரிகிறார். குணச்சித்திரமும் வருகிறது, வில்லத்தனமும் வருகிறது, நகைச்சுவையும் வருகிறது. நமக்கென்னமோ அடுத்த பிரகாஷ்ராஜாக வருவார் எனதான் தோன்றுகிறது. நம்ம நம்பிக்கையை காப்பாத்திடுங்க பாஸ்… ஓவியா, ‘ஃபிரைட் ரைஸ்’ செய்வது மட்டும்தான் இவருக்கு வேலை. அதற்காக இப்படியா கொஞ்சம் ஃப்ரீயாக நடமாட விடுவது. பயத்துல அவங்க கவர்ச்சிலாம் எங்கங்க கண்ணுக்குத் தெரியுது. சிறப்புத் தோற்றத்தில் ஆதவ் கண்ணதாசன், அனஸ்வரா. அந்தக் கால உடையில் ஜெமினி கணேசனை ஞாபகப்படுத்துகிறார். முயற்சி பண்ணுங்க ஆதவ், இன்னொரு காதல் மன்னனாய் தமிழ் சினிமாவில் வலம் வரலாம். அனஸ்வரா, இவங்கதான் படத்துல பேயா வர்றாங்க…அட…என்ன அழகு…எத்தனை அழகு…ன்னு நாம பாடலாம்னு நினைச்சால், ஒரு நொடியில…மாறி….‘ஈஸ்வரா…….’ன்னு கத்த வச்சிடறாங்க… நீண்ட இடைவெளிக்குப் பிறகு அந்தக் கால ரஜினிகாந்த்தின் காப்பியான நளினிகாந்த் (ஆனால், அடையாளம்தான் தெரியலை…), மகாநதி சங்கர், நமோ நாராயணன், மயில்சாமி குறைவாக வந்தாலும் நிறைவு. பிரசாத்தின் இசையும், ரம்மியின் ஒளிப்பதிவும், ஸ்ரீகர் பிரசாத்தின் படத்தொகுப்பும் படத்திற்கு பயமில்லாத சப்போர்ட்டாக அமைந்துள்ளன. ‘யாமிருக்க பயமே’ – அனைத்தும் பலமே….