வெற்றி பெற்ற ஒரு படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் போது அது பற்றிய எதிர்பார்ப்புகள் அதிகம் இருக்கம்.
முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் இன்னும் அழுத்தமான கதையுடனும், அட்டகாசமான திரைக்கதையுடனும் இருக்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள்.
‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் முதல் பாகம் மிக மிக யதார்த்தமான ஒரு கதையுடன் இருந்ததால் ரசிகர்கள் அதைக் கொண்டாடினார்கள். ஒரு எளியவனின் வெற்றியை ரசிகர்களும் தாங்களே வெற்றி பெற்றது போல ரசித்து மகிழ்ந்தார்கள். அது இரண்டாம் பாகத்திலும் அப்படியே தொடர்ந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். ஆனால், கடைசியில் ‘சப்’பென்று முடித்து அதிர்ச்சியளித்துவிட்டார்கள்.
முதல் பாகத்தில் காதலியாக இருந்த அமலா பால் இரண்டாம் பாகத்தில் தனுஷின் மனைவியாக இருக்கிறார். முதல் பாகத்தில் அப்பா சமுத்திரக்கனி திட்டியதை இரண்டாம் பாகத்தில் அமலா பால் செய்கிறார். முதல் பாகத்தில் அம்மா சரண்யா மகனுக்கு ஆதரவாக இருந்தார், இரண்டாம் பாகத்தில் அப்பா சமுத்திரக்கனி ஆதரவாக இருக்கிறார். முதல் பாகத்தில் அமிதாஷ் பிரதான் செய்த வேலைகளை இரண்டாம் பாகத்தில் கஜோல் செய்கிறார்.
சிறந்த இஞ்சினியர் விருது வாங்கும் தனுஷை, தன்னுடைய கம்பெனிக்கு இழுக்க நினைக்கிறார் மிகப் பெரிய கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியின் அதிபரான கஜோல். ஆனால், தான் வேலை பார்க்கும் கம்பெனியை விட்டு வரமாட்டேன் எனக் கறாராகக் கூறுகிறார் தனுஷ். அப்படிப் பேசிய தனுஷை கஜோல் அவருடைய கம்பெனிக்கு இழுக்கிறாரா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.
தனுஷ் வழக்கம் போலவே அவருடைய ரசிகர்களைத் திருப்திப்படுத்துகிறார். கொஞ்சம் பன்ச் டயலாக், மனைவியுடன் செல்லக் கோபம், அப்பாவுடன் அன்பு, வேலை பார்க்கும் கம்பெனி மீது நேசம், கஜோல் மீது கோபம் என அனைத்திலும் நிறைவு. ஆனாலும், முதல் பாகத்தில் இருந்த எளிமை இதில் கொஞ்சம் மிஸ்ஸிங். வேலையில் இருக்கும் பட்டதாரியை விட வேலையில்லா பட்டதாரியைத்தான் அதிகம் பிடிக்கிறது. ரஜினியே புகை பிடிக்கும் காட்சிகளை விட்டுவிட்டார், நீங்கள் எப்போது விடப் போகிறீர்கள் தனுஷ் ?.
தனுஷின் மனைவியாக அமலா பால். முதல் பாகத்தில் காதலியாக இருந்த போது கொஞ்சி விளையாடிவர், இரண்டாம் பாகத்தில் கோபித்துக் கொண்டு விளையாடுகிறார். காதலியைத் திருமணம் செய்து கொண்டால் இப்படித்தான் மாறிவிடுவார்கள் என்று சொல்லாமல் சொல்கிறார்களோ ?. இருப்பினும் நானும் வேலைக்குப் போகிறேன் என்று சொல்லும் அந்தக் காட்சி நெகிழ்வு.
படத்தில் அமலா பாலை விட அதிகக் காட்சிகள் கஜோலுக்கு. படத்தின் நாயகி என்று இவரைத்தான் சொல்ல வேண்டும். கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி அதிபர் வசுந்தரா-வாக அதிகாரமாக நடித்திருக்கிறார். ‘மன்னன்’ விஜயசாந்தியைக் கொஞ்சம் ஞாபகப்படுத்தினாலும் கஜோலிடம் காணப்படும் கம்பீரமும், உடல் மொழியும் அவர் கதாபாத்திரத்தில் ஜொலிக்க வைக்கிறது. முகத்திற்கு போட்ட மேக்கப்பை மட்டும் நல்ல கண்ணாடியில் பார்க்கவில்லை போலிருக்கிறது.
அப்பா சமுத்திரக்கனி, தம்பி ஹிரிஷிகேஷ் கொஞ்சமாக வந்தாலும் தாங்கள் இருப்பதை உணர்த்துகிறார்கள். விவேக் – செல் முருகன் நகைச்சுவை அவர்கள் வரும் இடங்களில் எல்லாம் சிரிக்க வைக்கிறது. ‘பிக் பாஸ்’ புகழ் ரைசா, கஜோலின் பி.ஏ, இங்கேயும் ‘யெஸ் மேம்’, சொல்லிக் கொண்டிருக்கிறார்.
‘வேலையில்லா பட்டதாரி’ முதல் பாகத்தில் அனிருத்தின் இசையில் பாடல்கள் படத்திற்கு பெரும் பலத்தைக் கொடுத்தன. இரண்டாம் பாகத்தில் ஷான் ரோல்டன் அனிருத்தின் இசையில் ஐம்பது சதவீதத்தைக் கொடுத்திருப்பாரா என்பது சந்தேகம்தான். இடையிடையே அனிருத்தின் தீம் மியூசிக்தான் வருகிறது.
கிளைமாக்சுக்கு முன்பு ஏதோ பெரிதாக நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி சட்டென்று படத்தை முடித்துவிட்டார்கள். அது ஏமாற்றமே. முதல் பாகம் அளவிற்கு இல்லை என்றாலும் கிளைமாக்ஸ் தவிர்த்து படத்தை ரசிக்கலாம்.