கிராமத்துக் கதைகளை இந்தக் கால ரசிகர்களும் ரசிக்கும் விதத்தில் கொடுப்பது கொஞ்சம் சிரமமான விஷயம்தான். இருந்தாலும் அவர்களை ஈர்க்கும் விதத்தில் எதையாவது செய்துதான் அவர்களையும் கவர வேண்டும்.
கதையும், காட்சிகளும் சுவாரசியமாக இருந்தாலே போதும், கிராமத்துக் கதைகள் ரசிகர்கள் மனதில் அப்படியே இடம் பெற்று விடும். முந்தைய பல வெற்றிப் படங்களை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். அந்த ஃபார்முலாவைச் சரியாகத் தொட்டாலே போதும் வெற்றி என்பது தங்கமாக் கிடைத்துவிடும்.
இந்த ‘பொதுவாக எம்மனசு தங்கம்’ படத்தில் அறிமுக இயக்குனர் தளபதி பிரபு, வெற்றி என்னும் தங்கத்தைத் தர முயன்றவரை முயற்சித்திருக்கிறார்.
தன் மகளுக்கு மொட்டை அடிக்கவிடவில்லை என்பதற்காக அந்த உதயநிதியின் ஊர் மீது பல ஆண்டுகளாகவே வெறுப்பில் இருக்கிறார் பார்த்திபன். அந்த ஊர் மக்கள் பலரும் ஊரை விட்டு வெளியேற காரணமாக இருக்கிறார். அந்த ஊரையே இல்லாமல் செய்துவிட வேண்டும் என்பதுதான் பார்த்திபனின் எண்ணம். ஒரு சந்தர்ப்பத்தில் உதயநிதிக்கு பார்த்திபனின் வில்லத்தனம் தெரிய வருகிறது. பார்த்திபன் அவருடைய தங்கையைக் கட்டிக் கொடுத்த ஊருக்கு எல்லா நல்ல விஷயங்களையும் செய்திருக்கிறார். அதனால், பார்த்திபனின் மகளான நிவேதா பெத்துராஜைக் காதலித்து திருமணம் செய்து கொண்டால், தனது ஊருக்கும் நல்லது நடக்கும் என நிவேதாவைக் காதலிக்கிறார் உதயநிதி. பார்த்திபனுக்கு உதயநிதி – நிவேதாவின் காதல் விவகாரம் தெரிய வர அவர்களைப் பிரிக்க முயல்கிறார். இதன் பின் என்ன நடந்தது என்பதுதான் படத்தின் கதை.
உதயநிதி ஸ்டாலின் முதல் முறையாக கிராமத்து இளைஞராக நடித்திருக்கிறார். இதற்கு முன் நடித்த படங்களில் மாநகரத்து இளைஞராக நடித்தவர், கிராமத்துக் கதாபாத்திரத்திலும் முத்திரை பதித்துள்ளார். அவருக்குப் பொருத்தமான கதைகளையும், கதாபாத்திரங்களையும் சரியாகத் தேர்வு செய்கிறார். அதுவே அவருக்குப் பாதி வெற்றியைக் கொடுத்துவிடுகிறது. மீதி வெற்றியை இயக்குனர்கள்தான் ஏற்படுத்தித் தர வேண்டும்.
நாயகியாக நிவேதா பெத்துராஜ். முதல் படத்தில் ஐ.டி.யில் வேலை பார்க்கும் பெண்ணாக மாடர்ன் ஆக நடித்தவர். இரண்டாம் படத்திலேயே கிராமத்துப் பெண்ணாக மாறியிருக்கிறார். அழகாக வருகிறார், நடக்கிறார், பேசுகிறார், போகிறார். பாடல்களில் தனி எக்ஸ்பிரஷன் கொடுக்கிறார். காட்சிகளிலும் இன்னும் கொஞ்சம் அழுத்தமாக நடிக்க முயற்சிக்கலாம்.
தனக்கு அவமானத்தை ஏற்படுத்திய ஊரையே காலி செய்யத் துடிக்கும் வில்லனாக பார்த்திபன். அதிரடி வில்லன் எல்லாம் இல்லை, கலகலப்பான வில்லன். அவரது பாணியிலே அவரை வில்லத்தனம் செய்ய வைத்திருக்கிறார் இயக்குனர்.
பார்த்திபன் அடிக்கும் கமெண்ட்டுகளுக்கு முன்னால் சூரியின் நகைச்சுவை எடுபடாமல் போய்விடுகிறது. பார்த்திபனின் உதவியாளராக மயில்சாமியும் அவர் பங்கிற்கு நன்றாகவே சிரிக்க வைக்கிறார்.
இமானின் இசையில் ‘அம்மணி.., சிங்கக்குட்டி..’ பாடல்கள் ரசிக்க வைக்கின்றன.
திரைக்கதையில் திருப்பங்கள் கொஞ்சம் குறைவு. உதயநிதி, பார்த்திபன் இடையிலான மோதல் ஆட்டத்தை சில சுவாரசியங்களுடன் சேர்த்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.