தரமணி விமர்சனம்

இது ‘ஏ’ படம், அதனால் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே படத்தை வந்து பாருங்கள் என்று பட வெளியீட்டிற்கு முன்பே சொன்ன இயக்குனர் ராமின் நேர்மைக்கு முதலில் பாராட்டுக்கள்.

எதையாவது சொல்லி, எப்படியாவது ரசிகர்களைத் தியேட்டர்களுக்கு வரவழைத்து மூன்று நாட்களில் 100 கோடி என்று சொல்ல வைக்கும் இயக்குனர்களுக்கு மத்தியில் தனித்த எண்ணம் கொண்டவராக இருக்கிறார் ராம்.

அதே போலவே யாரும் தொடத் தயங்கும் ஒரு கதையை எழுதி அதை அருமையான பதிவாகவும் கொடுத்திருக்கிறார். எதிர்காலத்திலும் இந்த ‘தரமணி’ பேசப்படும் ஒரு படமாக இருக்கும்.

சென்னையில் சில வருடங்களில் விஸ்வரூப வளர்ச்சியடைந்த தரமணி பகுதியில் நடக்கும் கதை. கால் சென்டரில் வேலை பார்க்கும் வசந்த் ரவி, அஞ்சலியைக் காதலித்து ஏமாந்து போகிறார். ஒரு கார்ப்பரேட் கம்பெனியில் எச்.ஆர்-ஆக வேலை பார்க்கும் கணவரை விட்டுப் பிரிந்த, 7 வயது மகனுடன் இருக்கும் ஆன்ட்ரியாவிற்கும், வசந்த் ரவிக்கும் பழக்கம் ஏற்படுகிறது. நாளடையில் அது காதலாகவும் மாறி, இருவரும் ஒரே வீட்டில் வசிக்கும் நிலை வருகிறது. ஆன்ட்ரியாவின் அழகும், அவரை மற்றவர்கள் பார்க்கும் பார்வையும் வசந்த் ரவிக்கு பொறாமையையும், வெறுப்பையும் ஏற்படுத்துகிறது. பின்னர் அது சண்டையாக மாற, ஆன்ட்ரியாவால் வீட்டை விட்டு விரட்டப்படுகிறார் வசந்த் ரவி. இருவரும் அவரவர் பாதையில் பயணிக்கிறார்கள். அடுத்து அவர்கள் சந்திக்கும் விஷயங்கள் அவர்களை நிரந்தரமாகப் பிரித்ததா, இல்லை ஒன்று சேர்த்ததா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

படத்தின் நாயகன் வசந்த் ரவியின் முதல் படம் இது என்று சொன்னால் நிச்சயம் நம்ப முடியாது. மழை நேரத்தில், பேருந்து நிறுத்தத்தில் அந்த அறிமுகக் காட்சியிலேயே பிரபுநாத் கதாபாத்திரமாகவே நமக்குள் வந்துவிடுகிறார். அது கொஞ்சம் கொஞ்சமாக அப்படியே உயர்ந்து கொண்டே போகிறதே தவிர, எங்குமே கீழிறங்கவில்லை. பிரிந்த அஞ்சலியை மீண்டும் சந்திக்கும் காட்சி, முஸ்லிம் வீட்டில் பணத்தை எடுத்துக் கொள்ளுங்கள் என்று கெஞ்சும் காட்சி, ஆன்ட்ரியாவிடம் மெயின் கேட்டில் நின்று கொண்டு ஏற்றுக் கொள் என கேட்கும் காட்சியில் ஆகியவற்றில் உருக வைத்து விடுகிறார். 2017ம் ஆண்டின் சிறந்த அறிமுக நடிகர் என இப்போதே சொல்லிவிடலாம்.

ஆங்கிலோ இந்தியப் பெண் ஆல்த்தியா ஜான்சன் ஆக ஆன்ட்ரியா. இவரைத் தவிர வேறு யாரையும் இந்தக் கதாபாத்திரத்தில் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. இவ்வளவு நடிப்பை இத்தனை காலம் எங்கு வைத்திருந்தீர்கள் ஆன்ட்ரியா என்று கேட்கத் தோன்றுகிறது. அவ்வளவு இலகுவாக ஆல்த்தியா கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார். 7 வயது பையனுக்கு அம்மா, அம்மாவின் வார்த்தைகளால் சுடப்படும் மகள், கணவனை விட்டுப் பிரிந்த மனைவி, பாசம் காட்டி மோசம் செய்யும் காதலன், படுக்கைக்கு அழைக்கும் ஆண்களைச் சமாளிக்கும் பெண் அதிகாரி, இப்படி எத்தனை உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடிய கதாபாத்திரம். தேசிய விருது தேர்வுக்குழுவினரே, இந்த ஆல்த்தியா – ஆன்ட்ரியாவை நீங்கள் சிறந்த நடிகையாகத் தேர்வு செய்தே ஆக வேண்டும்.

அபூர்வ சௌம்யா-வாக அஞ்சலி, சில காட்சிகளில் வந்தாலும் கலாச்சாரத்தை மாற்றிக் கொள்ள விரும்பும் பெண்களுக்கு சிறந்த உதாரணம். ரயில்வே போலீஸ் பர்னபாஸ் ஆக அழகம் பெருமாள், இந்தக் காலத்தில் இப்படி ஒரு மனிதரா என வியக்க வைக்கிறார்.

ஆன்ட்ரியாவின் மகனாக அட்ரியன் நைட் ஜெஸ்லி, அவன் எங்குமே நடிக்கவில்லை, அவன் அவனாகவே இருக்கிறான். உதவி கமிஷனராக படத்தின் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே, தமிழ் சினிமாவிற்கு குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்க மற்றுமொரு யதார்த்த அறிமுகம்.

ஆன்ட்ரியாவின் பாஸ் ஆக அபிஷேக் டி ஷா, ஆன்ட்ரியாவின் அலுவலகத் தோழி சாரா ஜார்ஜ், ஜேஎஸ்கே-வின் மனைவி லிசி ஆன்ட்னி என கொஞ்ச நேரம் வருபவர்கள் கூட அவரவர் கதாபாத்திரங்களை உணர்ந்து அவ்வளவு இயல்பாய் நடித்திருக்கிறார்கள்.

யுவன்ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை இதுவரை கேட்காத ஒரு இசையைக் கொடுத்திருக்கிறது. நா. முத்துக்குமாரின் பாடல்கள் அனைத்துமே கதையுடன் இரண்டறக் கலந்திருக்கிறது. ஒரு மகத்தான கவிஞனை இழந்துவிட்டோம் என நினைக்கும் போது வலிக்கிறது. தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவில் தரமணியின் பருந்துப் பார்வையும், பாத்திரங்களை நாம் பார்க்கும் பார்வையும் படத்திற்கு அவ்வளவு பலம்.

இடைவேளைக்குப் பின் வசந்த் ரவி சில பெண்களை ஏமாற்றுவது மட்டும் மையக் கதையிலிருந்து விலகிய ஒரு உணர்வை ஏற்படுத்துகிறது.

படத்தின் இடையிடையே ராமின் குரலில் வரும் கமெண்ட்டுகள் அனைத்தும் ‘கருத்தானவை‘. அதிலும் ரூபாய் நோட்டு செல்லாது பற்றிய கமெண்ட்டுக்கு தியேட்டரே கைதட்டுகிறது.

இன்றைய தலைமுறை இயக்குனர்களில் ‘தரமணி’க்குப் பிறகு இயக்குனர் ராம், இயக்குனர் பாலச்சந்தர் ஆகத் தெரிந்தால் அது மிகையில்லை.

Read Previous

பொதுவாக எம்மனசு தங்கம் விமர்சனம்

Read Next

Hara Hara Mahadevaki – Official Trailer

Most Popular