வெள்ளக்கார துரை – விமர்சனம்

Vellakkara Durai - Gallery - 3_00010 ‘துள்ளாத மனமும் துள்ளும், பூவெல்லாம் உன் வாசம்’ என தன்னுடைய ஆரம்பக் காலப் படங்களில் காதலை அழகான குடும்பத்துப் பின்னணியில் கொடுத்து ரசிகர்களைக் கவர்ந்த இயக்குனர் எழில், ‘மனம் கொத்திப் பறவை, தேசிங்கு ராஜா’ ஆகிய வெற்றிப் படங்களைத் தொடர்ந்து இந்த ‘வெள்ளக்கார துரை’ படத்தை கலகலப்பான நகைச்சவைப் பின்னணியில் அமைந்த காதல் படமாகக் கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார். ஆறடி உயர விக்ரம் பிரபு ஆக்ஷன் ஹீரோவாகத்தான் ஜொலிப்பார் என்று பார்த்தால், சூரியுடன் சேர்ந்து நகைச்சுவை நடிப்பிலும் பின்னியிருக்கிறார். இமானின் இனிமையான பாடல்கள், சூரியின் பிரமாதமான நகைச்சுவை ஆகியவை படத்திற்கு முதுகெலும்பாக அமைந்துள்ளன. இதற்கு முந்தைய படங்களில் எழில் சொன்ன அதே நாயகன் மட்டுமே காதலிக்கும் காதல் ஜோடியும், அவர்கள் இருவருக்குமிடையே காதல் வந்து அவர்கள் ஒன்று சேர்வார்களா இல்லையா என்பதுமான கதையாக இருந்தாலும், கலகலப்பான சுவாரசியமான திரைக்கதை படத்தை நன்றாகவே காப்பாற்றியிருக்கிறது. ரசிகர்கள் எதைக் கொடுத்தால் ரசிப்பார்கள் என்பதை இயக்குனர் எழில் நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறார்கள். அதற்கேற்றபடி நகைச்சுவையான காட்சிகளும் உள்ளன, சூடான காட்சிகளும் உள்ளன. விக்ரம் பிரபு, சூரி மற்றும் நண்பர்கள் சேர்ந்த குழு வட்டிக்குப் பணம் தரும் ஜான் விஜய்யிடம் பணம் வாங்கி ரியல் எஸ்டேட் தொழிலில் இறங்கி ஏமாந்து போகிறார்கள். பணத்தைக் கொடுத்த ஜான் விஜய் அவர்களைப் பிடித்து வந்து அவருடைய வீட்டில் கொத்தடிமைகளாக (?) வைக்கிறார். ஒரு சந்தர்ப்பத்தில் விக்ரம் பிரபு, ஜான் விஜய்யை காப்பாற்ற விக்ரமுக்கு மட்டும் சலுகையிலான சூப்பர்வைசர் வேலை. அந்த வீட்டில் இருக்கும் ஜான் விஜய்யின் தங்கையான சின்னம்மா என அழைக்கப்படும் ஸ்ரீதிவ்யாவைப் பார்த்ததுமே காதல் கொள்கிறார் விக்ரம் பிரபு. ஆனால், ஸ்ரீதிவ்யாவிற்கும் ஜான் விஜய்க்கும் திருமண நிச்சயம் நடக்க அப்போதுதான் ஸ்ரீதிவ்யா, ஜான் விஜய்யின் தங்கை இல்லை என்ற உண்மை விக்ரமுக்குத் தெரிய வருகிறது. திருமணம் நடப்பதற்கு முன்னால் இரவு ஸ்ரீதிவ்யா தப்பித்துப் போக அவருடன் விக்ரம் பிரபுவும் தப்பிக்கிறார். இதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை. விக்ரம் பிரபு, படங்களில் நடிப்பதற்கு முன் கதையைக் கேட்டுப் பார்த்துப் பார்த்து நடிக்கிறார் போலிருக்கிறது. முதல் படத்தில் கிடைத்த வெற்றியை இதுவரை முதலுக்கு மோசமில்லாத விதத்தில் தக்க வைத்துக் கொண்டு வருகிறார். முதல் முறையாக ஒரு நகைச்சுவை கலந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தாத்தாவை விட பேரன் 32 அடியாவது பாய வேண்டும். இப்போதுதான் கவனமாக அடி மேல் அடி எடுத்து வைத்துக் கொண்டு வருகிறார். அப்படியே தொடருங்கள். ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்திற்குப் பிறகு ‘ஜீவா’ படத்தில் ஸ்ரீதிவ்யா நடித்திருந்தாலும், முதல் படத்தைப் போலவே இந்தப் படத்தில்தான் கொஞ்சல், சிணுங்கல், ஊடல் என பல காட்சிகளை வைத்திருக்கிறார் இயக்குனர் எழில். மாடர்ன் மாணவி கதாபாத்திரத்தை விட இந்த கிராமத்துத் தேவைதைதான் ஸ்ரீதிவ்யாவிற்கு அழகாக இருக்கிறது. முதல் பாதி படத்தை சூரிதான் தன் தலை மீது வைத்துத் தாங்கிக் கொள்கிறார். ஆங்காங்கே வடிவேலுவின் வாசனை அடிப்பதைத் தவிர்ப்பது சூரிக்கு நல்லது. சில காட்சிகளில் ஸ்டீரியோ டைப்பாக நடிப்பதைத் தவிர்த்தே ஆக வேண்டும். ஜான் விஜய் ‘முட்டைக் கண்’ மிரட்டல் வில்லன். மற்றவர்களை யதார்த்தமாக நடிக்க வைத்து விட்டு, இவரை மட்டும் 60களின் வில்லன் போல உருட்டி, மிரட்டி நடிக்கக வைத்ததன் காரணம் புரியவில்லை. எம்.எஸ்.பாஸ்கர், சிங்கம் புலி கொஞ்சமே கொஞ்சம் வந்து போகிறார்கள். இமானின் இசையில் “அம்மாடி உன் அழகு…’ பாடல் இந்த ஆண்டின் மற்றுமொரு சூப்பர் ஹிட் மெலடி. ‘காக்கா முட்டை…’ வைக்கம் விஜயலட்சுமியின் குரலில் வித்தியாசமாக ஒலிக்கிறது. ‘கூத காத்து…’ பகலில் கேட் வேண்டிய பாட்டு அல்ல… வெள்ளக்கார துரை – வசூல் காரன்…

Read Previous

2014-ம் ஆண்டிலும் முதலிடத்தில் நா.முத்துக்குமார்…

Read Next

2014ம் வருடத்தின் முடிவில்…தமிழ் சினிமா… – வெங்கட் சுபா

Most Popular