மலையாளப் படங்கள் சிலவற்றைப் பார்க்கும் போதெல்லாம், இப்படி ‘சம்பவம்’ செய்யும் அளவில் நமது தமிழ்ப் படங்கள் இல்லையே என்ற ஒரு ஏக்கம் இருக்கும். அந்த அளவிற்கு யதார்த்தமான சம்பவங்களின் கோர்வையாக அவர்களது திரைக்கதை இருக்கும். அவற்றையெல்லாம் எப்படி நிஜமாகப் பார்ப்பது போன்ற ஒரு உணர்வுடன் படமாக்குகிறார்கள் என்ற கேள்வியும் எழும். காட்சிகள் மட்டும் அப்படி அமைந்தால் போதாது, அந்தக் காட்சிகளில் நடிக்கும் நடிகர்கள் கூட அவ்வளவு இயல்பாய் நடிக்க வேண்டும். அப்போதுதான் அது நிறைவாக அமையும். இந்த ‘வீர தீர சூரன் 2’ படத்தைப் பார்க்கும் போது ஒட்டு மொத்தமாய் சம்பவங்களின் கோர்வையை, நடிகர்கள் துணையுடன் முழுமையான ஒரு படைப்பாகக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் எஸ்யு அருண்குமார்.
மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ‘பெரியவர்’ என அழைக்கப்படும் பிருத்விராஜ், அவரது மகன் சூரஜ் வெஞ்சாரமூடு பவர்புல் ஆனவர்கள். மாவட்ட எஸ்பி ஆன எஸ்ஜே சூர்யா அவர்களை ‘என்கவுன்டர்’ செய்ய திட்டம் போடுகிறார். அதிலிருந்து தப்பிக்க தனது முன்னாள் அடியாளான விக்ரம் உதவியை நாடுகிறார் பெரியவர். முதலில் மறுக்கும் விக்ரம் பின்னர் காப்பாற்றுவதாக உறுதி அளிக்கிறார். ஊர் திருவிழா நடக்கும் ஒரு இரவு நாளில் இந்த ‘என்கவுன்டர்’ திட்டம் ஆரம்பமாகிறது. விக்ரம், எஸ்ஜே சூர்யா, பிருத்வி, சூரஜ் ஆகியோரது ஆடு புலி ஆட்டம், ஓட்டத்தில் யார் பலியாகிறார்கள், யார் காப்பாற்றப்படுகிறார்கள் என்பதுதான் படத்தின் பரபரப்பான மீதிக் கதை.
படத்தின் ஆரம்பம் முதல் கடைசி காட்சி வரை படம் எங்கேயும் தேங்கி நிற்காமல் பரபரப்பாக ஓடிக் கொண்டே இருக்கிறது. அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை விறுவிறுப்பாக நகர்த்தி இருக்கிறார் இயக்குனர்.
விக்ரம் நடிப்பைப் பற்றி சொல்லவே வேண்டாம். அவருக்கான தீனி கதையிலும், கதாபாத்திரத்திலும் கிடைத்துவிட்டால் போதும். நம்மை அவர் பக்கம் முழுமையாகத் திருப்பிவிடுவார். இந்தப் படத்தில் அப்படித்தான் நடந்திருக்கிறது. மளிகைக் கடை நடத்தி வரும் முன்னாள் அடியாள் காளி ஆக ஆவேச அவதாரம் எடுத்திருக்கிறார். சாதாரண வேட்டி, சட்டை, துண்டு, தாடியுடன் கிராமத்து மனிதராக அப்படியே மாறி இருக்கிறார். மளிகைக் கடை நடத்தி வருபவரின் பிளாஷ்பேக் கொஞ்ச நேரமே வந்தாலும் செம அதிரடி. ஒரு பக்கம் குடும்பம், மறுபக்கம் விசுவாசம், கடைசியில் தெரிந்து கொள்ளும் துரோகம் என வெளுத்து வாங்கியிருக்கிறார் விக்ரம்.
இப்படி ஒரு இயல்பான நடிகரான எஸ்ஜே சூர்யாவை சில பிரம்மாண்ட இயக்குனர்கள் கூச்சலிட வைத்து, ஓவர் ஆக்டிங் செய்ய வைத்து கெடுத்து வைத்துவிடுகிறார்கள். ஆனால், இந்தப் படத்தில் எஸ்பி கதாபாத்திரத்தில் அதற்கேயுரிய போலீஸ் மூளையுடன் செயல்பட்டு நம்மை வசியப்படுத்தி விடுகிறார் எஸ்ஜே சூர்யா. இவரை அடக்கி வாசிக்க வைத்த இயக்குனருக்கு கோடான கோடி நன்றி.
தமிழ் சினிமாவில் இப்போதுள்ள கதாநாயகியரில் யதார்த்தமான ஒரே நடிகை என துஷாரா விஜயனை தாராளமாகக் குறிப்பிடலாம். எந்தக் கதாபாத்திரம் வேண்டுமானாலும் கொடுங்கள் தூசி போல ஊதித் தள்ளிவிடுகிறேன் என்கிறார் துஷாரா.
தெலுங்கு நடிகரான பிருத்விராஜ் அந்த ‘பெரியவர்’ கதாபாத்திரத்தில் அப்படியே பொருந்திப் போய் இருக்கிறார். சந்தானம் நடித்த ‘பாரிஸ் ஜெயராஜ்’ படத்தில் அவரது அப்பாவாக காமெடி கதாபாத்திரத்தில் நடித்தவரா இவர் என ஆச்சரியப்பட வைக்கிறார். அவரது மகனாக மலையாள நடிகர் சூரஜ் வெஞ்சாரமூடு. இப்படியான யதார்த்த நடிகர்கள் தமிழ் சினிமாவிற்கு வருகை புரிவது சிறப்பு.
ஒரே இரவில் நடக்கும் கதை, ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர், அற்புதமான லைட்டிங் உடன் இரவு நேரக் காட்சிகளை கதையோடு சேர்த்து காட்சிப்படுத்தி இருக்கிறார். ஜிகே பிரசன்னாவின் படத்தொகுப்பு கடைசி வரை பரபரப்பைக் காப்பாற்றி இருக்கிறது. பின்னணி இசையில் தனக்கான பங்கை அழுத்தமாய் பதிவு செய்திருக்கிறார் ஜிவி பிரகாஷ்குமார்.
இடைவேளைக்குப் பிறகு கொஞ்ச நேரம் மட்டும் ஒரு சிறு தொய்வு, அதை சரி செய்திருக்கலாம். மற்றபடி, மாறுபட்ட ஒரு ஆக்ஷன் படத்தைப் பார்த்த திருப்தி நிச்சயம் கிடைக்கும்.