தமிழ் சினிமாவில் ஒன்று சென்னையைச் சுற்றிய படங்கள் இருக்கும், அல்லது மதுரையைச் சுற்றிய படங்கள் இருக்கும். இவற்றைத் தவிர, தமிழ் நாட்டில் உள்ள வேறு ஊர்களைச் சுற்றியுள்ள இடங்களின் பின்னணியில் அமைந்த கதைகள் எப்போதாவதுதான் வருகின்றன. தமிழ் சினிமாவில் அதிகம் பார்த்திருக்காத ‘நாஞ்சில்’ நாட்டைச் சுற்றிய இப்படத்தின் கதை நமக்கு என்னவோ புதுசுதான் என்றாலும் சில இடங்களில் மலையாள வாடை வீசுவதைப் பார்க்க முடிகிறது. அதிலும் விஜய் சேதுபதியின் அப்பாவின் தோற்றமும், பேச்சும் அச்சு அசலாக ஒரு மலையாள அப்பாவைப் பார்ப்பது போலத்தான் உள்ளது. தமிழ் சினிமா மறந்து போன சென்டிமென்ட்டை மையமாக வைத்து இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் ஜெயகிருஷ்ணா. நாஞ்சில் நாட்டைச் சேர்ந்தவராக இருப்பார் போலும், அதனால்தான் அவருடைய ஊரைப் பற்றி அழுத்தமாக பதிய வைத்திருக்கிறார். அனைத்து வட்டார வழக்கமும், கலாச்சாரமும் தமிழ் சினிமாவில் பதிய வேண்டும், அப்போதுதான் திரைப்படங்கள் ஒரு கலாச்சாரப் பதிவு என்பதும் இன்றைய தலைமுறையினருக்குத் தெரிய வரும். அந்த ஒரு விஷயத்திற்காகவே இயக்குனருக்கு தென்னம் பூவுடன் வரவேற்பு கொடுக்கலாம். விஜய சேதுபதி, கிருஷ்ணா இருவரும் நெருங்கிய நண்பர்கள். கிருஷ்ணாவிற்கு சுனைனா மீது காதல். ஆனால் இந்த காதல் விவகாரம் சுனைனாவின் அண்ணனான மதுசூதனனுக்குத் தெரிய வர அவர் கிருஷ்ணாவை தட்டிக் கேட்கிறார். அப்போது நடக்கும் கைகலப்பில் கிருஷ்ணாவின் நண்பரான விஜய் சேதுபதி மசூதனனை எதிர்பாராமல் கொன்று விடுகிறார். அதன் பின் அந்தக் கொலையைப் பார்த்த மசூதனனின் டிரைவர், வேலையாள் ஒருவரை மிரட்டி உண்மையைச் சொல்லக் கூடாது என்கிறார். இன்ஸ்பெக்டரிடும் நேரடியாகச் சென்று மிரட்டல் விடுக்கிறார். மசூதனனுக்கும், சுப்பிரமணியபுரம் ராஜாவுக்கும் இடையிலான தொழில் பகை இருப்பதால் விஜய் சேதுபதி மீதும் சந்தேகம் வராமல் கொலைப்பழி ராஜாவை நோக்கியே திரும்புகிறது. இதனிடையே காதலி சுனைனாவின் சோகத்தைப் பார்க்கும் கிருஷ்ணா, விஜய் சேதுபதியிடம் கொஞ்சம் யோசிச்சிருக்கலாம் எனச் சொல்ல, அந்த வார்த்தையால் நண்பர்கள் இருவரும் பிரிகிறார்கள். கிருஷ்ணாவை, ராஜா அவருடைய பக்கம் இழுத்துக் கொள்கிறார். விஜய் சேதுபதி சுனைனா குடும்பத்தை ஒரு ஆபத்தில் இருந்து காப்பாற்றி அவர்களுடன் நெருக்கமாகி விடுகிறார். ராஜா, சுனைனா குடும்பத்தைப் பழி வாங்கத் துடிக்க, விஜய் சேதுபதியும், கிருஷ்ணாவும் மல்லுக் கட்டி நிற்க அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதி கதை. வித்தியாசமான படங்கள் மூலம் தனக்கென தனிப் பெயரை திரையுலகத்தில் ஏற்படுத்திக் கொண்ட விஜய் சேதுபதி, முதல் முறையாக ஒரு கமர்ஷியல் சினிமாவிற்குள் இறங்கியிருக்கிறார். படம் முழுவதும் வேட்டி, சட்டையுடன் யதார்த்தமாகவும் நடித்து தான் இன்னும் அந்தப் பக்கம் முழுமையாக மாறி விடவில்லை என்றும் நிரூபிக்கிறார். எந்த காட்சியிலாவது விஜய் சேதுபதி நடிக்கிறார் என்று சொல்லலாம் என்று பார்த்தால் அப்படி எந்த இடத்திலும் தோன்றவேயில்லை. கள்ளு குடிக்கும் போது போதையில் தடுமாறுவதிலும், குடித்த பின் கிருஷ்ணா வீட்டிற்கு போய் சண்டை போடுவதிலும், நண்பனிடம் பாசமாகவும், கோபமாகவும் பேசுவதிலும், சுனைனா குடும்பத்தில் பாசமாக நடந்து கொள்வதிலும், பெற்றோரிடம் மதிப்பு மிக்க மகனாக இருப்பதிலம் என ‘ராதா’ கதாபாத்திரம் போல் விஜய் சேதுபதிக்கும் மீண்டும் ‘வராதா’ என யோசிக்க வைக்கிறது அவருடைய நடிப்பு. இரண்டாவது ஹீரோவாக கிருஷ்ணா. விஜய் சேதுபதியிடம் எப்படியும் பல நாட்கள் பழகியிருப்பார். அப்படியே அவரிடமிருந்து நடிப்பது எப்படி என்று கற்றுக் கொண்டால் நன்றாக இருந்திருக்கும். கூட நடிக்கும் போது தெரியவில்லை என்றாலும், படத்தைப் பார்த்த பிறகாவது அவர் புரிந்து கொள்வார் என எதிர்பார்ப்போம். சுனைனாவிற்கு என்ன ஆச்சு…களையான முகம் கொஞ்சம் சுருங்கிப் போனது போல் உள்ளது, ஆனாலும் நடிப்பில் சுருக்கமில்லை. இப்படிப்பட்ட கதாபாத்திரங்கள் அவரைத் தேடி வருகிறதா, அல்லது அவராக தேடிப் போகிறாரா என்பது தெரியவில்லை. கிராமத்தைச் சுற்றிய கதை என்றால் நம் இயக்குனர்களுக்கு சுனைனா ஞாபகம் வந்து விடுகிறது. கொஞ்ச நேரமே வந்தாலும் பாசமான அண்ணனாக மனதில் இடம் பிடிக்கிறார் மதுசூதனன். சுப்பிரமணியபுரம் ராஜா, போஸ் வெங்கட், ஸ்ரீரஞ்சனி, முத்துராமன் ஆகியோருடைய கதாபாத்திரங்களும் நிறைவு. தமன் இசையமைப்பில் ஒரு பாடலையாவது அவர் ரசிக்கும்படி கேட்க வைத்திருக்கலாம். படத்தின் டைட்டிலிலேயே ஒரு தெலுங்கப் பட இசையை ஒலிக்க வைத்திருக்கிறார். அடிக்கடி தமிழ்நாட்டுப் பக்கம் வந்து போங்க தமன்…பால பரணியின் ஒளிப்பதிவு இரவுக் காட்சிகளில் கூட அருமையனா ஒளியமைப்புடன் ரசிக்க வைத்துள்ளது. படத்தில் இனிமையான பாடல்கள், மருந்துக்குக் கூட நகைச்சுவைக் காட்சிகள் ஆகியவை இல்லாதது மட்டும் குறையாகத் தெரிகிறது. வன்மம் – வெல்லும்…