ஒவ்வொரு படத்தையும் சமூக அக்கறையுடன் கொடுக்கும் விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சில இயக்குனர்களில் சமுத்திரக்கனியும் ஒருவர்.
‘தொண்டன்’ படத்தில் பல சமூகக் கருத்துக்களை வெளிப்படையாவும், அழுத்தமாகவும் சொல்லி சபாஷ் போட வைக்கிறார் சமுத்திரக்கனி.
ஆம்புலன்ஸ் டிரைவராக இருக்கும் சமுத்திரக்கனி, ஒரு முறை உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கும் ஒரு உயிரைக் காப்பாற்ற முயற்சிக்கிறார். ஆனால், அதனால் மந்திரியின் வாரிசான நமோ நாராயணன் பகையைச் சம்பாதிக்கிறார். அடுத்தடுத்து நடக்கும் நிகழ்வுகள்ல் சமுத்திரக்கனிக்கும், நமோ நாராயணனுக்கும் பகை அதிகமாகிறது. சமுத்திரக்கனியை பழி வாங்கத் துடிக்கிறார் நமோ நாராயணன், அவரது முயற்சி வெற்றி பெற்றதா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
ஆம்புலன்ஸ் டிரைவர் மகாவிஷ்ணுவாக ஒரு அவதாரமே எடுத்திருக்கிறார் சமுத்திரக்கனி. நாட்டில் நடக்கும் பல அரசியல் விஷயங்களையும் அவர் விமர்சிக்கும் விதமே தனி சுவாரசியம். அவருக்குப் பொருத்தமான கதை, கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து அதில் வெற்றியும் பெற்றுவிடுகிறார். இந்தப் படத்திலும் அப்படியே.
இரண்டாவது நாயகனாக விக்ராந்த். தவறான வழியில் சென்று கொண்டிருப்பவரை தன்னுடைய பேச்சால் நல்ல வழிக்குத் திருப்பி, அவரையும் உயிர் காக்கும் ஆபத்பாந்தவனாய் மாற்றுகிறார் சமுத்திரக்கனி. ‘அண்ணே, இன்னைக்கு ஒரு உயிரைக் காப்பாத்திட்டேன்’ என விக்ராந்த் சொல்லும் போது நெகிழ்ச்சியடையாதவர்கள் இருக்க முடியாது.
சமுத்திரக்கனியின் காதலியாக சுனைனா. ஒரு அழகான திறமையான நடிகையை தமிழ் சினிமா சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லையே என்ற ஒரு வருத்தம் அவரைப் பார்க்கும் போதெல்லாம் வரும். இந்தப் படத்தில் அந்தக் குறை போய்விடுகிறது.
விக்ராந்தின் ஜோடியாக நடித்திருக்கும் புதுமுகம் அர்த்தனா, அறிமுக நடிகை என்று சொல்ல முடியாத படி நடித்திருக்கிறார். வில்லனாக நமோ நாராயணன், சமுத்திரக்கனியின் அப்பாவாக வேல ராமமூர்த்தி, கனியின் உதவியாளராக வரும் கஞ்சா கருப்பு, கொஞ்ச நேரமே வந்தாலும் சிரிக்க விடும் சூரி, தம்பி ராமையா என படத்தில் அவரவர் கதாபாத்திரங்களில் அனைவருமே நிறைவு.
ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் கச்சிதம். ஏகாம்பரம், ரிச்சர்ட் எம். நாதன் ஒளிப்பதிவு அருமை. சில நீளமான காட்சிகளுக்கு எடிட்டிர் கத்திரி போட்டிருக்கலாம்.
இந்தக் காலத்தில்தான் இப்படிப்பட்ட படங்கள் வரவேண்டும்.