‘மொழி, அபியும் நானும்’ ஆகிய மறக்க முடியாத படங்களைக் கொடுத்த இயக்குனர் ராதா மோகனின் மற்றுமொரு படைப்பு ‘பிருந்தானம்’.
காது கேட்காத, பேசவும் முடியாத அருள் நிதிக்கும், அவருடன் சிறு வயதிலிருந்தே பழகி வரும் தன்யாவுக்கும் இடையே காதல். ஆனால், அந்தக் காதலை ஏற்க மறுக்கிறார் அருள்நிதி. அவர்களது காதலை அந்த ஊருக்கு வரும் நடிகர் விவேக் எப்படி சேர்த்து வைக்கிறார் என்பதுதான் ‘பிருந்தாவனம்’ படத்தின் கதை.
எத்தனை வருடங்கள் ஆனாலும், தன் பாணியை சிறிதும் மாற்றிக் கொள்ளாமல் ஒரு மென்மையான படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் ராதாமோகன். அவரது படங்களுக்கே உரிய அற்புதமான காட்சிகள் ஆங்காங்கே படத்தில் விரவிக் கிடக்கின்றன.
நடிக்க வந்து சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் ஒரு சவாலான கதாபாத்திரத்தை ஏற்று சிறப்பாக நடித்திருக்கிறார் அருள்நிதி. காது கேளாத, பேச முடியாத கதாபாத்திரத்தில் முக பாவங்கள் மூலமும், சைகைகள் மூலமும் அவருடைய நடிப்பு நிறைவாக அமைந்துள்ளது.
தமிழ் சினிமாவுக்கு ஒரு படபட கதாநாயகியாக தன்யா. இவருடைய முந்தைய படமான ‘பலே வெள்ளையத் தேவா’ படத்தில் இவரை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லையோ என வியக்க வைக்கிறது. யாரையும் கலாய்த்துத் தள்ளும் தன்யா இப்டி நல்ல படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்தால் அடுத்த ஜோதிகாவாகக் கூட வரலாம்.
விவேக், நடிகர் விவேக்காகவே நடித்திருக்கிறார். அருள்நிதி படத்தில் இவரது தீவிர ரசிகராக வருகிறார். ஒரு முறையாவது விவேக்கை நேரில் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படும் அருள்நிதிக்கு, அவருடைய நண்பராகவே மாறும் நிலை வருகிறது. விவேக்கிற்கு மீண்டும் ஒரு ரீ-என்ட்ரி தான் இந்த ‘பிருந்தாவனம்’.
படத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது பொன்.பார்த்திபன் வசனம். நகைச்சுவையிலும் சரி, மற்ற சென்டிமென்ட் காட்சிகளிலும் சரி அழுத்தமான வசனத்தைத் தந்திருக்கிறார்.
விஷால் சந்திரசேகரின் பின்னணி இசை படத்திற்குப் பக்கபலம். ஊட்டியின் அழகை அற்புதமாய் தன் காமிராவில் வடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் விவேகானந்த்.
மீண்டும் ஒரு நெகிழ்வான படத்தைக் கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் ராதா மோகன்.