தங்கரதம் – விமர்சனம்

மாநகரம் சம்பந்தப்பட்ட காதல் கதைகளை விட கிராமம் சம்பந்தப்பட்ட காதல் கதைகளில் ஒரு இனிமை இருக்கும், ஒரு யதார்த்தம் இருக்கும்.

உறவுகள், பாசம் என சில காட்சிகளை அழுத்தமாக வடிவமைத்தாலே போதும் ஈர்த்துவிடும்.

இந்த ‘தங்கரதம்’ படத்தை அப்படி ஒரு அழுத்தமான, யதார்த்தமான படமாகக் கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர் பாலமுருகன்.

ஊரில் உள்ள காய்கறிகளை மார்க்கெட்டுக்கு எடுத்துச் செல்லும் டெம்போ வேன் டிரைவர் வெற்றி. அதே ஊரில் வெற்றிக்குப் போட்டியாக டெம்போ வேன் ஒன்றை சொந்தமாக வைத்துக் கொண்டு ஓட்டுபவர் சௌந்தர்ராஜா. வெற்றிக்கும், சௌந்தர்ராஜாவுக்கும் எப்போதுமே ஆகாது. கல்லூரியில் படித்துவிட்டு ஊருக்கு வரும் சௌந்தர்ராஜா, தங்கை அதிதி கிருஷ்ணாவுக்கும் காதல் மலர்கிறது.

ஒரு மோதலில் வெற்றிக்கும், சௌந்தர்ராஜாவுக்கும் பகை அதிகமாகிறது.  அந்தப் பகையைச் சமாளிக்க வெற்றியின் முதலாளி ஆடுகளம் நரேன், வெற்றியை வெளி ஊருக்கு அனுப்பிவிட்டு, அவருடைய மகனுக்கு, வெற்றியின் காதலியான அதிதி கிருஷ்ணாவை நிச்சயம் செய்துவிடுகிறார். வெளியூரிலிருந்து வரும் வெற்றி, தன் முதலாளி மகனுக்கு தன் காதலி நிச்சயம் செய்யப்பட்டுள்ளதைப் பார்த்து அதிர்ச்சியடைகிறார்.

தனக்கு வாழ்வளித்த முதலாளியின் முடிவை அவர் மதிக்கிறாரா, அல்லது காதல்தான் பெரிது என காதலியுடன் சேர்கிறாரா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

டெம்போ வேன் ஓட்டும் கிராமத்து இளைஞன் கதாபாத்திரத்தில் வெற்றியின் நடிப்பு பாராட்டும்படி உள்ளது. ஆனால், பேச்சில்தான் மலையாள வாடை அதிகம் வீசுகிறது. பேச்சைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால் பல காட்சிகளில் மிகவும் யதார்த்தமாக நடித்திருக்கிறார்.

அதிதி கிருஷ்ணா, கிராமத்தில் படித்த பெண்கள் எப்படி இருப்பார்களோ அப்படியே இருக்கிறார். பேரழகாக இல்லாமல் பெயர் சொல்லும்படியான அழகாக இருந்து நடிப்பிலும் யதார்த்தமாய் நடித்திருக்கிறார்.

சௌந்தரராஜாதான் படத்தின் வில்லன். எப்போதும் முறைத்துக் கொண்டேயிருக்கும் கதாபாத்திரம். மற்ற நடிகர்களில் ஆடுகளம் நரேன் மனதில் இடம் பிடிக்கிறார்.

பெரிய திருப்பங்கள் இல்லாத திரைக்கதை என்றாலும், படமாப் பார்க்கும் போது ஒரு கிராமத்து ஜோடியின் யதார்த்த காதல் வாழ்க்கையைப் பார்த்த திருப்தி கிடைக்கிறது.

Read Previous

சூப்பர் சிங்கர் ஜுனியர் 5, ப்ரித்திகா பட்டம் வென்றார்…

Read Next

பீச்சாங்கை – விமர்சனம்

Most Popular