சிங்காரம் – விமர்சனம்

கே.வி. கதிர்வேலு இயக்கத்தில், கிராமியப் பின்னணியில் நகைச்சுவை, குடும்ப உணர்வுகள் மற்றும் சமூகக் கருத்துகளுடன் உருவாகியிருக்கும் இப்படம், நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரின் வாழ்க்கைப் பயணத்தைப் பேசுகிறது.

யோகி பாபு கதையின் நாயகனாக நடித்திருக்கும் இப்படம் ஒரு எளிய மனிதனின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களையும், தனது சமூகத்திற்கான உரிமைகளைப் பெற்றுத்தர அவர் மேற்கொள்ளும் முயற்சிகளையும் மையப்படுத்தியுள்ளது.

நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த சிங்காரம் (யோகிபாபு), தனது குடும்பத்தினருடன் ஊர் ஊராகச் சென்று மணிமாலைகள் உள்ளிட்ட கைவினைப் பொருட்களை விற்பனை செய்து வாழ்க்கை நடத்தி வருகிறார். நாடோடி வாழ்க்கை வாழும் இவரது சமூகத்தினர், முறையான அடையாள ஆவணங்கள் இல்லாத காரணத்தால் அரசின் அடிப்படை உரிமைகளையும் நலத்திட்டங்களையும் பெறுவதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இந்நிலையில், எதிர்பாராத வகையில் கிடைக்கும் லாட்டரி பரிசு சிங்காரத்தின் வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது. பொருளாதார நிலையில் மாற்றம் ஏற்பட்டாலும், தனது சமூகத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்ற எண்ணம் அவருக்குள் உருவாகிறது. இதற்காக அரசியல் களத்தில் இறங்கும் சிங்காரம், தனது சமூகத்தினரின் உரிமைகளுக்காக எத்தகைய போராட்டத்தை முன்னெடுக்கிறார் என்பதே படத்தின் மீதிக்கதை.

நரிக்குறவர் சமூகத்தினரின் வாழ்க்கை முறையையும், அவர்கள் எதிர்கொள்ளும் சமூகப் பிரச்சினைகளையும் கதையின் மையமாகத் தேர்வு செய்திருக்கும் இயக்குநர் கே.வி. கதிர்வேலுவின் முயற்சி பாராட்டுக்குரியது. ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கையில் ஏற்படும் பொருளாதார மாற்றத்தை மட்டுமே கதையாகச் சொல்லாமல், அந்த மாற்றத்தின் மூலம் தனது சமூகத்திற்கும் நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணம் உருவாவதைத் திரைக்கதையில் இணைத்திருப்பது சிறப்பு. கிராமிய வாழ்க்கை, குடும்ப உறவுகள், அரசியல் பின்னணி, சமூக உரிமைகள் எனப் பல அம்சங்களை நகைச்சுவை மற்றும் உணர்வுப்பூர்வமான காட்சிகளின் வழியாகக் கடத்தியிருக்கிறார்.

குறிப்பாக, நரிக்குறவர் சமூகத்தினர் எதிர்கொள்ளும் அடையாளம் மற்றும் அடிப்படை உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளைப் பேசும் காட்சிகள் கவனிக்க வைக்கின்றன. யோகிபாபுவின் இயல்பான நகைச்சுவையையும், கதையின் உணர்வுப்பூர்வமான தருணங்களையும் இணைத்திருக்கும் விதம் படத்திற்கு பலம் சேர்க்கிறது. சில காட்சிகளில் உணர்வுகளை இன்னும் அழுத்தமாக வெளிப்படுத்தியிருக்கலாம். அதேபோல், அரசியல் பின்னணியை மையப்படுத்தும் இரண்டாம் பாதியில் திரைக்கதையை இன்னும் சுவாரஸ்யமாக நகர்த்தியிருக்கலாம். இருப்பினும், சமூக அக்கறையுடன் ஒரு எளிய மனிதனின் வாழ்க்கையைப் பதிவு செய்திருக்கும் விதத்தில் இயக்குநர் கவனம் ஈர்க்கிறார்.

சிங்காரம் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் யோகிபாபு, வழக்கமான நகைச்சுவை நடிப்பைக் கடந்து, உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். குடும்பத்தின் மீதான பாசம், சமூகத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் கண்டு ஏற்படும் ஆதங்கம், தனது லட்சியத்தை நோக்கிய பயணம் எனப் பல்வேறு உணர்வுகளை இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

சிங்காரத்தின் தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் எம்.எஸ். பாஸ்கர், அனுபவம் வாய்ந்த நடிப்பால் கதைக்கு வலுசேர்க்கிறார். குறிப்பாக, தந்தை – மகன் இடையேயான காட்சிகளில் தனது நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். வேல ராமமூர்த்தி, மனோபாலா, சென்ட்ராயன், தீபா சங்கர், படவா கோபி உள்ளிட்ட நடிகர்களும் தங்களது கதாபாத்திரங்களுக்கு ஏற்ற பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள். படத்தில் இடம்பெறும் மற்ற கதாபாத்திரங்களும் பொருத்தமாக அமைந்திருக்கின்றன.

பிரசன்னா எஸ். குமாரின் ஒளிப்பதிவு, கிராமியப் பின்னணியையும், கதாபாத்திரங்களின் வாழ்வியலையும் இயல்பாகப் பதிவு செய்திருக்கிறது. குறிப்பாக, நரிக்குறவர் சமூகத்தினரின் வாழ்க்கைச் சூழலைக் காட்சிப்படுத்தியிருக்கும் விதம் சிறப்பு.

சாம் சி.எஸ். இசையும் பின்னணி இசையும் கதையின் உணர்வுகளுக்கு ஏற்ற வகையில் அமைந்திருக்கின்றன. லாரன்ஸ் கிஷோரின் படத்தொகுப்பு, கதையின் ஓட்டத்திற்கு துணை நிற்கிறது. கலை இயக்குநர் குருராஜின் பங்களிப்பும் படத்தின் கிராமியப் பின்னணியை நம்பகத்தன்மையுடன் வெளிப்படுத்த உதவியிருக்கிறது.

நரிக்குறவர் சமூகத்தினரின் வாழ்வியலையும், அவர்கள் எதிர்கொள்ளும் அடிப்படை உரிமைகள் சார்ந்த பிரச்சினைகளையும் ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் பயணத்தின் வழியாகப் பதிவு செய்திருக்கும் திரைப்படம் ‘சிங்காரம்’.

Read Previous

பனி விழும் இரவு – விமர்சனம்