பிசாசு – விமர்சனம்

pisasu review மனித மனங்களின் உணர்வுகளைப் பற்றிய உணர்வுபூர்வமான படங்களை எடுத்தால், மசாலாப் படங்களை அதிகம் ரசித்து பழகிப் போன ரசிகர்கள் நம் படங்களை ரசிக்க மாட்டேன் என்கிறார்களே என, ஒரு பிசாசின் உணர்வை வெளிப்படுத்தும் படத்தை மிஷ்கின் இயக்கியிருக்கிறார் போலிருக்கிறது. ‘பிசாசு’ பற்றிய படமாக இருந்தாலும் இது மிஷ்கின் படம் என பல இடங்களில் ‘மிஷ்கின் டச்’ இருக்கிறது. எல்லோரும் சொல்லியதைப் போல சொல்லிப் பேர் வாங்குவது மிஷ்கின் வழக்கம் இல்லை. அது இந்த பிசாசு பற்றிய படத்திலும் இருக்கிறது. ஒரு மனிதன் மீது பிசாசுக்கு ஏற்படும் காதல் என படம் வெளிவருவதற்கு முன் படத்தின் கதை பற்றிய சில விஷயங்கள் வெளியே கசிந்தன. அது எப்படி பிசாசு மனிதனைக் காதலிப்பதை படமாக்க முடியும் என்ற சந்தேகம் வந்தது. அட….இப்படிக் கூட ஒரு படத்தை எடுக்க முடியுமா என ஆச்சரியப்பட வைத்திருக்கிறார் மிஷ்கின். அதிலும், அந்த ‘மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல….பிசாசுக் காதல்…’ என்பது நடக்கவே முடியாத ஒன்று என நம் மூளைக்குத் தெரிந்தாலும் அந்த உணர்வு பூர்மான காட்சிகள் மூலமாக மூளையை மனம் வென்று விட வைக்கிறார் மிஷ்கின். இசையமைப்பாளர்களுக்கு வயலின் இசைக்கும் வயலின் கலைஞராக இருக்கிறார் நாகா. ஒரு நாள் தெருவில் நின்று பேசிக் கொண்டிருக்கும் போது பக்கத்தில் விபத்தில் சிக்கி தலையில் அடிபட்ட இளம் பெண்ணை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என மருத்துமனைக்கு அழைத்துச் செல்கிறார். ஆனால், மருத்துமனையில் சேர்த்த சில நொடிகளிலேயே நாகாவின் கையைப் பிடித்து அந்தப் பெண், எதையோ சொல்ல முயற்சித்து உயிரை விட்டு விடுகிறார். அந்தப் பெண்ணின் ஞாபகமாகவே இருக்கும் நாகாவுக்கு, வீட்டுக்கு வந்ததும் தொடர்ந்து பல புதுப்புது அனுபவங்கள் கிடைக்கிறது. ஒரு பிளாட்டிற்குள் தனியாக இருக்கும் நாகாவுக்கு வீட்டிற்குள் பிசாசு புகுந்து விட்டது என்பது தெரிகிறது. பல முயற்சிகளுக்குப் பின் அப்படி பிசாசாக வருவது, விபத்தில்சிக்கி மரணமடைந்த பெண்தான் என்பது தெரிய வருகிறது. அந்தப் பிசாசு எதற்கு தன் வீட்டிற்குள் இருக்கிறது, அதை  வீட்டை விட்டு எப்படி விரட்டுவது என்ற முயற்சியில் இறங்குகிறார் நாகா. அதில் அவர் வெற்றி பெற்றாரா இல்லையா என்பதுதான் படத்தின் பரபரப்பான மீதி கதை. நடிப்புக்கு முக்கியமே கண்கள்தான் என்பார்கள். ஆனால், மிஷ்கின் படத்தில் அந்த விதிகளுக்கெல்லாம் இடமில்லை. படத்தில் நாகாவின் இரு கண்கள்…இல்லை…இல்லை…ஒரு கண்ணாவது எத்தனை முறை தெரிந்தது என ஒரு போட்டியே வைக்கலாம். எதற்கு அப்படி ஒரு தோற்றம் நாயகன் நாகாவுக்கு என்பதற்கு மிஷ்கின் விளக்கமளித்தால் நலமாக இருக்கும். ஆனால், கண்ணையும் காட்டிக் கொள்ளாமல் உடல் மொழியால் பயத்தையும், மிரட்சியையும், பாசமான குணத்தையும் நன்றாகவே வெளிப்படுத்தியிருக்கிறார் நாகா. அடுத்த படத்திலாவது  பெண்கள் ‘கண்ணார’ பார்த்து ரசிக்க வழி வகை செய்து கொள்ளுங்கள்… பிசாசுக்கும், பேய்க்கும் உருவம் கொடுப்பதில் மட்டும் மற்றவர்கள் வழியையே மிஷ்கின் பின்பற்றியிருக்கிறார். ஆனாலும், இந்த பிசாசு நம்மை பயமுறுத்துவதை விட பாசத்தை வெளிப்படுத்தி கவர்ந்து விடுகிறது. பிசாசு மேக்கப் போட்டு பிரயாகாதான் நடித்திருக்க வேண்டும். ஆனாலும், படத்தின் முதலிலேயே டைட் குளோசப்பில் காட்டப்படும் அவரது கண்கள், நம் மனதுக்குள் மண்டபம் கட்டி உட்கார்ந்து கொள்கிறது. ‘பா…..’ என்று சொல்லி உயிரை விடும் அந்த நொடி….கவனக் குறைவால் ஏற்படும் விபத்துக்களின் வலியை ஏற்படுத்தி விடுகிறது. ‘அம்மா….செல்லம்…நம்ம வீட்டுக்கு வந்துடும்மா…ஏம்மா…அடுத்தவங்களுக்கு வந்து தொந்தரவு கொடுக்கிற….’ எனச் சொல்லி பிசாசாக இருக்கும் மகளை நோக்கி தவழ்ந்து சென்று கெஞ்சும் காட்சியில் ராதாரவி நம் கண்களை குளமாக்கி விடுகிறார். இப்படி ஒரு நடிப்பை அவரிடமிருந்து பார்த்து எத்தனை நாளாயிற்று…அந்த ஒரு காட்சி போதும், அவருடைய நடிப்பைப் பாராட்ட…..இந்த வரிகளை டைப் செய்யும் போதும் புல்லரிக்கிறது…. பக்கத்து பிளாட் வினோதினி, சண்டையிட்டுக் கொள்ளும் கணவன் மனைவி, வானத்தைப் பார்த்து பேசிக் கொண்டிருக்கும் அந்த வெட்டி இளைஞன், நாகாவின் அம்மா, நண்பர்கள் அவரவர் பங்கிற்கு யதார்த்தத்தை வெளிப்படுத்துகிறார்கள். அரோல் கொரேலி என்ற இளம் இசையமைப்பாளர்…படத்தின் ஆரம்பத்திலிருந்தே அவருடைய இசையால் நம்மை ஆக்கிரமித்து விடுகிறார். முதல் படம் என்று சொல்ல முடியாதபடி இசையமைத்திருக்கிறார். அந்த ஒரு பாடலும் உருக வைக்கும் பாடல். அரோல் கொரேலி, ஆலமரம் போல் வேலி இல்லாமல் வளர வாழ்த்துவோம். ரவி ராயின் ஒளிப்பதிவில் இருட்டும், அறையிருட்டும், பாதி இருட்டும், என ஒளியமைப்பிற்கு பல காட்சிகளைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர். இரண்டு மணி நேரத்திற்கும் குறைவான படம் என்பது மூன்று மணி நேர படங்களைப் பார்த்து நொந்து போயிருக்கும் ரசிகர்களுக்கு மிகப் பெரிய ஆறுதல். சில சின்னச் சின்னக் குறைகள், கேள்விகளாக எழுந்தாலும், ’பிசாசு’ என்பதை ஃபேன்டஸியாக எடுத்துக் கொண்டு அவற்றைக் கண்டு கொள்ளாமல் விட்டு விடலாம். பிசாசு – ‘பேய்’ ஓட்டம் ஓடும்…

Read Previous

‘மைனா, கும்கி’யை மிஞ்சும் ‘கயல்’…

Read Next

‘இடம் பொருள் ஏவல்’ இசைக்கு நல்ல வரவேற்பு…

Most Popular