அழகான குடும்பக் கதைக்குள் , ஆக்ஷனை புகுத்தி, அதையும் யதார்த்தமாக சொல்லி தரமான வெற்றியைப் பெற்றிருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன்.
இதுவும் ஒரு பழிவாங்கும் கதைதான். அதற்காக அண்ணனைக் கொன்றவுடன் அடுத்த காட்சியிலேயே அதற்குக் காரணமானவர்களை வெட்டி சாய்க்கும் வன்முறைப் படமல்ல இது என்பதை அழுத்தமாக உணர்த்தியிருக்கிறார் இயக்குனர்.
ஒரு பாசமான , சாதாரணமான குடும்பத்தில் வலியவர்களால் ஏற்படும் கொடுமையை சமாளிக்க முடியாமல் ஒரு சாமானியமான பாசமான தந்தை எப்படியெல்லாம் துடித்துப் போகிறார் என்பதை பாசமான காட்சிகளுடன் பதறிப் போக வைத்திருக்கிறார்கள். அந்த பாசமான அப்பாவாக இயக்குனர் பாரதிராஜா நடித்து, இந்த படத்திற்கே முதுகெலும்பாக இருந்திருக்கிறார் என்று சொன்னால் அது மிகையில்லை.
சரி , கதைக்கு வருவோம். பாரதிராஜா ரிடையர்ட் அரசு ஊழியர். அவருக்கு இரு மகன்கள், மூத்த மகன் கனிம வளத்துறையில் துணை இயக்குனர். இளைய மகன் விஷால், செல்போன் சர்வீஸ் கடை நடத்துபவர். வில்லனான சரத் லோகித்தாஷ்வா நடத்தும் கிரானைட் குவாரியில் நடக்கும் அநியாயத்தை தடுத்து நிறுத்துங்கள் , இல்லையென்றால் உங்கள் லைசென்ஸை நீக்கி விடுவோம் என்கிறார். அதற்கு மறுக்கும் சரத், விஷாலின் அண்ணனை அவரை விபத்தில் சிக்க வைத்து கொன்று விடுகிறார்.
தனது மகனை கொன்று விட்டார்கள் என்பதை நேரடியாகவே சொல்லக் கேட்டு அறிந்த அப்பா பாரதிராஜா கூலிப்படைய வைத்து மகனைக் கொன்றவர்களை பழி வாங்கத் துடிக்கிறார். இன்னொரு பக்கம், விஷாலும் அவர்களை பழி வாங்கத் துடிக்கிறார். இதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் பரபரப்பான மீதி கதை.
இந்த திரைப்படம் விஷாலின் திரையுலக் பாதையில் ஒரு முக்கியமான திருப்புமுனையை ஏற்படுத்தும் படமாக இருக்கும். வழக்கமான அதிரடியான ஆக்ஷன் ஹீரோவாக இல்லாமல், அமைதியாக இருந்தும் ஆக்ஷனை ஏற்படுத்த முடியும் என்பதை இவரது கதாபாத்திரம் மூலம் நிரூபிக்க வைத்திருக்கிறார் இயக்குனர்.
உணர்ச்சி வசப்படும் போது பேச்சு தடுமாறுவதை இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார் விஷால். இவருக்கும் லட்சுமி மேனனுக்குமான காதல் காட்சிகள் சுவாரசியமானவை. கிளைமாக்ஸ் காட்சியில் கூட வழக்கமான சினிமா சண்டையை வைக்காமல் யதார்த்தமாக வைத்திருப்பது கூடுதல் சுவாரசியம்.
இன்னுமொரு வெற்றிப் படத்தில் லட்சுமி மேனன். டீச்சர் கதாபாத்திரத்தில் அச்சு அசலாகப் பொருந்தியிருக்கிறார். பாந்தமான புடவையில் அமைதியாக வந்து போகும் இவர், “ஃபை ஃபை கலாச்சிஃபை” பாடலில் ஆடும் அதிரடி ஆட்டம் ஆச்சரியம்தான். இத்தனை நாள் இந்த நடனத்தை எங்கு வைத்திருந்தீர்கள் லட்சுமி. சரியான கதாபாத்திரங்களை தேர்வு செய்வதில் லட்சுமி தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறார்.
விஷாலின் நண்பர்களாக விக்ராந்த், சூரி. விக்ராந்த் கொஞ்ச நேரமே வந்தாலும் மனதில் இடம் பிடித்து விடுகிறார். சூரிக்கு நகைச்சுவை காட்சிகள் குறைவுதான், இருந்தாலும் குறையாகத் தெரியவில்லை.
வில்லனாக சரத் லோகித்தாஷ்வா, ‘எதிர் நீச்சல்’ படத்தில் நந்திதாவின் பாசமான அப்பாவாக வந்தவரா இவர் என ஆச்சரியப்பட வைக்கிறார். அந்த உருண்ட கண்கள் இவரது வில்லன் நடிப்பை மேலும் மெருகேற்றுகிறது.
வில்லனின் அடியாளாக ஹரிஷ், பாரதிராஜாவின் நண்பராக முத்துராமன் சரியான தேர்வு.
இமானின் இசையில், வைரமுத்துவின் பாடல் வரிகளில், ‘ஏலே..ஏலே…மருது.. ’, ‘ஒத்தக் கடை…’, ‘ஃபை பை பை…’ ஆகிய பாடல்கள் இந்த ஆண்டின் ஹிட்டான பாடல்கள்.
மதியின் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்துமே பளிச்சென மனதில் இடம் பிடிக்கின்றன.
பாசமான வசனங்களில் பாஸ்கர் சக்தி மிளிர்கிறார். அனல் அரசுவின் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சி குறிப்பிட வேண்டிய ஒன்று.
‘பாண்டிய நாடு’ – பாசக்காரங்க…
தயாரிப்பு – விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பாளர் – விஷால் எழுத்து, இயக்கம் – சுசீந்திரன் இசை – டி. இமான் பாடல்கள் – வைரமுத்து ஒளிப்பதிவு – மதி படத்தொகுப்பு – ஆண்டனி வசனம் – பாஸ்கர் சக்தி சண்டைப் பயிற்சி – அனல் அரசு நடனம் – ஷோபி கலை – ராஜீவன் தயாரிப்பு கட்டுப்பாட்டாளர் – ஆன்டணி சேவியர் உடை வடிமைப்பு – மாலினி – நிகிலா, வாசுகி பாஸ்கர் மக்கள் தொடர்பு – ஜான்சன் வெளியான தேதி – 2 நவம்பர் 2013
