ஆரம்பம் – விமர்சனம்

arrambam review

நாட்டையே உலுக்கிய ஒரு சில ஊழல்களை மையமாக வைத்து இந்த பரபரப்பான, ஸ்டைலிஷான ஆக்ஷன் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் விஷ்ணுவர்தன்.

‘பில்லா 2007’ படத்திற்குப் பிறகு இயக்குனர் விஷ்ணுவர்தன் – அஜித் கூட்டணி மீண்டும் ஒரு வெற்றிக் கூட்டணியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

நண்பனைக் கொன்றவர்களை பழி வாங்கும் கதைதான் என சிலர் சிம்பிளாக சொன்னாலும் அதை எடுத்திருக்கும் விதமும், அதற்குப் பின்னணியாக உண்மையாகவே நடந்த சில சம்பவங்களையும் இணைத்திருப்பது படத்திற்கு அதிகமான பரபரப்பைக் கொடுத்துள்ளது.

ஒரு படத்தை ரசிகர்கள் ரசிக்கும் விதத்தில் எப்படி கொடுக்கிறோம் என்பதுதான் முக்கியம். தனக்கான படமாக இல்லாமல் ரசிகர்களுக்கான படமாக எப்போது கொடுக்கிறோமோ அப்போது வெற்றி நிச்சயம். இது ரசிகர்களுக்கான கொண்டாட்டமான படம்.

அஜித், ரானா இருவரும் தீவிரவாத தடுப்புப் பிரிவைச் சேர்ந்தவர்கள்.  ஒரு சமயம் தீவிரவாதிகளை எதிர் கொள்ள நேரிடும் போது, ரானா தீவிரவாதிகளால் சுடப்பட்டு இறந்து போகிறார். அவர், ‘புல்லட் புரூப் ஜாக்கெட்’  அணிந்திருந்தும் இறந்ததைப் பார்த்து அஜித் அதிர்ச்சியடைகிறார்.

இது சம்பந்தமாக உயர் அதிகாரியிடம் கேட்கும் போது அவர் ஆதாரமிருக்கிறதா எனக் கேட்கிறார். பின்னர்தான், உயர் அதிகாரி, அமைச்சர் மற்றும் பலர் அந்த தரமற்ற புல்லட் புரூப் சப்ளை செய்ததில் தொடர்புடையவர்கள் எனத் தெரிகிறது.

அவர்களைப் பழி வாங்க ரானாவின் தங்கைய நயன்தாரா, கம்ப்யூட்டர் ஹேக்கர் ஆர்யா துணையுடன் களமிறங்குகிறார். அதில் அவர் எப்படி வெற்றி பெறுகிறார் என்பதுதான் படத்தின் பரபரப்பான மீதி கதை.

‘மங்காத்தா’ படத்திற்குப் பிறகு அஜித் மீண்டும் ‘சால்ட் பெப்பர்’ லுக்கில் நடித்திருக்கிறார். ஒரு டூயட் இல்லாமல்,காதல் காட்சிகள் இல்லாமல் இந்த காலத்திலும் ஜெயிக்க முடியும் என்பதை அஜித் நிரூபித்திருக்கிறார். சின்னச் சின்ன வசனங்களிலும், ஒரு சில பார்வைகளிலுமே அஜித் ரசிகர்களின் கைதட்டலை அள்ளிக் கொள்கிறார். அவருடைய ஈர்ப்பு ரசிகர்களிடம் அமோகமாக வளர்ந்துள்ளது என்பது இந்த படம் மூலம் அனைவருக்கும் புரியும்.

நயன்தாரா , அஜித்தின் ஜோடியாக இல்லாமல் எப்போதும் அஜித் கூடவே இருக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். துப்பாக்கி எல்லாம் தூக்கி அதிரடி நாயகியாகவே வலம் வருகிறார். ரசிகர்கள் எதிர்பார்க்கும் காட்சிகளும் இவருக்கு படத்தில் உண்டு. ஆனாலும், அஜித்துடன் ஒரு டூயட்டாவது வைத்திருக்கலாம் என்பது ரசிகர்களின் முணுமுணுப்பு.

ஆர்யா, திறமைசாலியான ஹேக்கர். எந்த நிறுவனத்தின் இணையதளங்களையும் ‘ஹேக்’ செய்யக் கூடியவர். அஜித்துக்கு சமமான கதாபாத்திரம். இவருடைய கதாபாத்திரத்தை சீரியசாக வைக்காமல், அவ்வப்போது நகைச்சுவையான கமென்ட் அடித்து தனியாக நகைச்சுவை நடிகர் ஒருவர் இல்லாத குறையை தீர்த்து வைக்கும் அளவிற்கு அமைத்திருக்கிறார் இயக்குனர்.

டாப்ஸீ, வழக்கமான சினிமா கதாநாயகிதான். இருந்தாலும் இவருக்கும் ஆர்யாவுக்குமான காதலில் இளமை கொப்பளிக்கிறது.

வில்லன்களாக மகேஷ் மஞ்ச்ரேக்கர், அதுல் குல்கர்னி. ஆர்பாட்டமில்லாமல் அசத்தியிருக்கிறார்கள். கிஷோரின் கதாபாத்திரம் மிகவும் யதார்த்தம்.

கொஞ்ச நேரமே வந்தாலும் தனது அறிமுகத்தை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் ரானா டகுபதி.

யுவனின் பின்னணி இசை பிரமாதப்படுத்தியிருக்கிறது. அதிலும் அஜித்திற்கான ‘தீம் மியூசிக்’ காதில் விழாத அளவிற்கு தியேட்டர்களில் கைதட்டல்கள் அதிருகிறது.

“அடடடா…ஆரம்பமே…’, ‘என் பியூசு போச்சி…’, ‘மேலால வெடிக்குது…’ ஆகிய பாடல்கள் ரசிக்க வைக்கின்றன.

ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு ‘ஓஹோ’ போட வைக்கிறது. சண்டைக் காட்சிகள் விறுவிறுப்பாக அமைந்துள்ளன. சுபாவின் வசனத்தில் அதிகப்படியான ‘பன்ச்’ வசனங்கள் இல்லாமல் யதார்த்தமான ‘குத்தலாக’ அமைந்துள்ளது பாராட்டுக்குரியது.

ஆரம்பம் – ஆஹா…..

 

தயாரிப்பு – ஸ்ரீ சத்ய சாய் மூவீஸ் – ஏ. ரகுராம் இயக்கம் – விஷ்ணுவர்தன் கதை, திரைக்கதை – விஷ்ணுவர்தன், சுபா வசனம் – சுபா இசை – யுவன்ஷங்கர் ராஜா பாடல்கள் – பா. விஜய் ஒளிப்பதிவு – ஓம் பிரகாஷ் படத்தொகுப்பு – ஸ்ரீகர் பிரசாத் சண்டைப் பயிற்சி – லீ விடேகர், கேச்சா, டினு வர்மா, ஜெகன் நடனம் – தினேஷ், ஷோபி, பால் ராஜ் கலை – இளையராஜா மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா நடிப்பு – அஜித், ஆர்யா, நயன்தாரா, டாப்ஸீ, ரானா டகுபதி, மகேஷ் மஞ்ரேக்கர், கிஷோர், சுமா ரங்கனாத், அதுல் குல்கர்னி மற்றும் பலர். வெளியான தேதி – 31 அக்டோபர் 2013

Read Previous

அடுத்தடுத்து இரண்டு படங்களா ? விக்ரம் பிரபுவின் குழப்பம்…

Read Next

பாண்டிய நாடு – விமர்சனம்

Most Popular