ஒரு முகத்திரை – விமர்சனம்

சமூக வலைத்தளம் மூலம் இளம் பெண்கள் எப்படி ஏமாற்றப்படுகிறார்கள் என்பதைக் கருவாக வைத்து இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் செந்தில் நாடன்.

சைக்காலஜி மாணவியான அதிதி ஆச்சார்யாவுக்கு மேல்படிப்புக்காக வெளிநாடு செல்ல வேண்டும் என்பது ஆசை. அவருடன் ஃபேஸ்புக்கில் நண்பனாக இருக்கும் ஒருவரை நம்பி சென்னைக்குச் செல்கிறார். ஆனால், அவரை அழைத்துச் செல்ல அந்த நண்பர் வரவில்லை. இருந்தாலும் அதிதிக்கு பேராசியராக வந்து வகுப்பு எடுத்த மனநல மருத்துவர் ரகுமான் அவரைப் பார்த்து தன் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார்.

ஒரு சந்தர்ப்பத்தில் ஃபேஸ்புக்கில் ‘ரோஹித்’ என்ற பெயரில் தன்னுடன் பழகியது ரகுமான்தான் என்பது அவருக்குத் தெரிய வருகிறது. நடுத்தர வயதுடைய ரகுமான் தன்னை அடையத் துடிக்கிறார் என்பது தெரிந்து அதிதி அதிர்ச்சி அடைகிறார். இருந்தாலும் ரகுமான் வீட்டிலேயே இருந்து கொண்டு அந்தப் பிரச்சனையை அவர் எப்படி எதிர் கொள்கிறார் என்பதுதான் படத்தின் கதை.

மனநல மருத்துவர் சத்தியமூர்த்தி ரத்தினவேல் கதாபாத்திரத்தில் ரகுமான் நிறைவாக நடித்திருக்கிறார். ஒரு பக்கம் டாக்டருக்கே உரிய மிடுக்கு, ஆனால் மறுபுறம் அதிதி மீது ஆசை கொண்டு திரியும் காமம், இவை இரண்டிலுமே தன் பங்கை சிறப்பாகச் செய்திருக்கிறார்.

நாயகியாக அதிதி ஆச்சார்யா, புதுமுகம் என்று சொல்ல முடியாத அளவிற்கு அவருடைய கதாபாத்திரத்தில் சிறப்பாகவே நடித்திருக்கிறார். ஒரு கல்லூரி மாணவி சென்னைக்கு தனியாக வந்து, ரகுமான் வீட்டில் தங்கி, தன் மீது ஆசைப்படும் அவரை எதிர் கொள்ளும் தைரியம் என அவருடைய கதாபாத்திரத்தில் இயல்பாகவே நடித்துள்ளார்.

படம் ஆரம்பத்தில் சுரேஷ், தேவிகா காதலில் ஆரம்பமாகிறது. இவர்கள் காதல், மோதல், பிரிவு முடிந்த பிறகுதான் ரகுமான் என்ட்ரி ஆகிறார். அதோடு கிளைமாக்சுக்கு முன்பாகத்தான் சுரேஷ் ரீ-என்ட்ரி ஆகிறார். சுரேஷ், தேவிகா காதல்தான் படத்தின் முக்கியக் கதை என்று பார்த்தால் அது கடைசியில் கிளைக் கதை ஆகிவிடுகிறது.

சுரேஷ், தேவிகா, ஸ்ருதி மற்ற கதாபாத்திர நட்சத்திரங்களில் கவனத்தை ஈர்க்கிறார்கள்.

இப்படத்துடன் வெளிவந்த ‘ப்ரூஸ் லீ, கட்டப்பாவ காணோம்’ ஆகிய படங்களுடன் ஒப்பிடும் போது ‘ஒரு முகத்திரை’ படத்தைத் தாராளமாக ரசிக்கலாம்.

Read Previous

Dora all set for 31 March

Read Next

Meesaya Murukku out on 9 June

Most Popular