நடிகையர் திலகம் – விமர்சனம்

தமிழ் சினிமாவில் நாயகர்கள் கோலோச்சிக் கொண்டிருந்த காலத்தில் தனி ஒருவராக, தமிழ்த் திரையுலக ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர் நடிகையர் திலகம் சாவித்ரி.

அவருடைய திரையுலக வாழ்க்கை, தனிப்பட்ட வாழ்க்கை என முற்றிலும் தெலுங்கு ‘ரெஃபரென்ஸ்’ படங்களுடன் மட்டுமே தெலுங்கில் எடுக்கப்பட்டு தமிழில் மொழிமாற்றம் செய்து வந்திருக்கும் படம் ‘நடிகையர் திலகம்’.

சாவித்ரி என்ற ஒரு நடிகையை தெலுங்கு சினிமாவுக்கு மட்டுமே சொந்தம் கொண்டாடுவது போல படத்தின் காட்சிகளை அமைத்திருக்கிறார் இயக்குனர் நாக் அஷ்வின். தெலுங்கு சினிமாவை விட தமிழ் சினிமாவில் அவரைக் கொண்டாடியவர்கள் அதிகம்.

எத்தனை எத்தனை படங்கள், எத்தனை விதமான கதாபாத்திரங்கள். தெலுங்கில் எடுக்கப்பட்ட படமாக இருந்தாலும் தமிழுக்காக சில படங்களை கண்டிப்பாக இணைத்திருக்க வேண்டும்.

பல மொழிகளில் சாதனை புரிந்த கலைஞர்களை ஒரு மொழிக்குள்ளாக அடக்குவது நல்லதல்ல.

நடிகை சாவித்ரி சினிமாவில் நடிப்பதற்காக 14 வயதில் சென்னை வந்தது முதல் 45 வயதில் மரணம் அடைந்தது வரையிலான அவருடைய திரையுலக வாழ்க்கை, 14 வயதுக்கு முன்பாக அவருடைய சிறுமி வாழ்க்கை என படத்தில் இடம் பெற்றுள்ள அனைத்து சம்பவங்களுமே நம் கண்முன் நடப்பது போன்ற ஒரு உணர்வை இந்தப் படத்தில் கொடுத்திருக்கிறார் இயக்குனர் நாக் அஷ்வின். அதற்காக அவர் மேற்கொண்ட ஆராய்ச்சிகள், தகவல்கள் அனைத்தும் படத்தில் தெரிகிறது.

சாவித்ரியாக கீர்த்தி சுரேஷ். இவரைத் தவிர வேறு யாரும் அந்தக் கதாபாத்திரத்தில் அந்த அளவிற்கு வாழ்ந்திருப்பார்களா என்பது சந்தேகம்தான். இந்தப் படத்திற்குப் பின் கீர்த்தி சுரேஷ் எத்தனை படங்களில் நடித்தாலும், இந்தப் படம் அவருடைய புகழை காலத்திற்கும் சொல்லிக் கொண்டிருக்கும்.

சாவித்ரி பற்றிய வாழ்க்கை வரலாற்றை எழுதும் பத்திரிகையாளராக சமந்தா, அவருக்கு உதவியாக புகைப்படக் கலைஞராக விஜய் தேவரகொன்டா. இந்தக் கதாபாத்திரங்கள் இல்லாமலேயே நேரடியாக சாவித்ரியின் வரலாற்றைப் படமாகப் படைத்திருக்கலாம். இவர்கள் வரும் காட்சிகளை 80களில் நடப்பது போன்று காட்டுவதற்காக தேவையற்ற விதத்தில் காட்சியின் குவாலிட்டியைக் குறைத்தது போன்று எபெக்ட வேறு கொடுத்திருக்கிறார்கள்.

ஜெமினிகணேசன் ஆக துல்கர் சல்மான். கீர்த்தியின் நடிப்பிற்கு முன் இவரும் சளைக்காமல் ஈடு கொடுத்து நடித்திருக்கிறார். சாவித்ரி நடிகையாகக் காரணமாக இருந்தவர் ஜெமினி கணேசன். இந்த ஜோடி ‘மிஸ்ஸியம்மா’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் வெற்றிகரமான ஜோடியாக வலம் வந்தது. ஜெமினிகணேசன் யார் எனத் தெரிந்தே திருமணம் செய்து கொண்டவர் சாவித்ரி. அப்படியிருக்கையில் ஒரு கட்டத்தில் ஜெமினிகணேசனை மட்டும் தவறு செய்தவராகக் காட்டுவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

மேலும், சாவித்ரிக்கு குடிப்பழக்கம் யாரால் ஏற்பட்டது என்பது பலருக்கும் தெரியும். அதைக் காட்டாமல், ஜெமினிதான் பழக்கப்படுத்தினார் என்பது போல அவரை ஒரேடியாக வில்லனாகக் காட்ட முயற்சித்திருக்கிறார் இயக்குனர்.

சாவித்ரியின் பெரியப்பாவாக ராஜேந்திர பிரசாத் படத்தில் கீர்த்தி, துல்கருக்குப் பிறகு மனதில் இடம் பிடிப்பவர் இவர்தான்.

சாவித்ரியின் தோழியாக ஷாலினி பான்டே. மற்றபடி நாகேஸ்வரராவ் ஆக நடித்திருக்கும் நாகசைதன்யா, எஸ்.வி.ரங்காராவ் ஆக நடித்திருக்கம் மோகன்பாபு, சக்கரபாணியாக நடித்திருக்கும் பிரகாஷ்ராஜ் ஆகியோர் வந்து போகிறார்கள்.

சாவித்ரி பற்றிய படம் என்றால் எம்ஜிஆர் இருக்கிறாரோ இல்லையோ சிவாஜிகணேசன் கண்டிப்பாக இருந்திருக்க வேண்டும். அவரை மறந்தது ஏனோ…?.

மிக்கி ஜே மேயர் இசையமைப்பில் அந்தந்த காலக் கட்டங்களில் இருந்த சினிமா பின்னணி இசையைக் கொண்டு வந்திருக்கிறார். டானி-சா-லோ ஒளிப்பதிவும் குறிப்பிட வேண்டிய ஒன்று.

நடிகையர் திலகம் – நல்ல வரலாற்றுப் பதிவு, சிற்சில குறைகளுடன்…

Read Previous

இரும்புத்திரை – விமர்சனம்

Read Next

பெண்களின் பெரும் பங்களிப்பில் வரும் ‘காளி’

Most Popular