இரும்புத்திரை – விமர்சனம்

திரைப்படங்கள் என்பது பொழுதுபோக்கு அம்சம்தான் என்றாலும், அதில் மக்களுக்குப் பயன்படும்படியான விஷயம் இருந்தால் அது மக்களிடம் அதிக வரவேற்பைப் பெறும். அப்படிப்பட்ட ஒரு படம்தான் ‘இரும்புத்திரை’.

ஸ்மார்ட் போன் இல்லாமல் யாருமேயில்லை என்று சொல்லுமளவிற்கு இன்றைக்கு ஒவ்வொருவர் கையிலும் ஸ்மார்ட்போன்கள் இருக்கிறது. அந்த போன்களால் நமக்கு பல வசதிகள் என்றாலும், ஆபத்துகளும் நிறைந்திருக்கின்றது. நம்மைப் பற்றி ரகசியங்கள் எதுவுமே காப்பாற்றப்படாது. நம்மை பின்தொடரும் ஒரு உளவாளியாகத்தான் ஸ்மார்ட்போன்கள் இருக்கின்றன. அதை இந்த ‘இரும்புத்திரை’ மூலம் விறுவிறுப்பாக விளக்கியிருக்கிறார்கள்.

அறிமுக இயக்குனர் பி.எஸ்.மித்ரன், இந்த ஒரு படத்தின் வரவேற்பிலேயே அடுத்த கட்டத்திற்கு தாவிவிடுவார். இந்த மாதிரியான இயக்குனர்கள்தான் தமிழ் சினிமாவின் இப்போதைய தேவை.

ராணுவ அதிகாரியான விஷால், தங்கையின் திருமணத்திற்காக, வங்கியில் அப்பா பெயரில் கடன் வாங்குகிறார். கடனாகப் பெற்ற 6 லட்ச ரூபாயுடன் சேர்த்து, அவருடைய வங்கிக் கணக்கில் இருந்த 10 லட்ச ரூபாய் காணாமல் போகிறது. எப்படி அந்தப் பணம் அவருடைய கணக்கில் இருந்து மாற்றப்பட்டது என்பதைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார். அதில் அவர் தெரிந்து கொள்ளும் விஷயங்கள் அவருக்கு மட்டும் அதிர்ச்சி அல்ல, நமக்கும் அதிர்ச்சிதான். அவருடைய பணத்தை அவர் கைப்பற்றினாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

இந்தப் படத்தைப் பார்த்த பிறகு இனி யாராவது நம்மிடம் தொலைபேசி எண்ணையோ, மெயில் முகவரியையோ கேட்டால் கூட கொடுக்கத் தயங்குவோம். பல கார்ப்பரேட்கள் இணைந்து நம் ரகசியங்களைக் கைப்பற்றி நம் வாழ்க்கையை எப்படி கேள்விக்குறியாக்குகிறார்கள் என்பதை விவரமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

விஷாலுக்கு இந்த இரும்புத்திரை அவருடைய படங்களில் ஒரு முக்கியமான படம். தனக்கான படம் எது, கதாபாத்திரம் எது என்பதை இந்தப் படத்தின் வெற்றி விஷாலுக்கு நிறையவே புரிய வைக்கும். இம்மாதிரியான கதைகளில் அவர் பயணித்தால் வெற்றி நிச்சயம்.

படத்தின் வில்லன் அர்ஜுன். தமிழ் சினிமாவில் வில்லன்களைக் கூட மிகவும் ஸ்மார்ட் ஆகத் தேர்வு செய்வது வழக்கமாகி வருகிறது. ஸ்மார்ட்போன் பற்றிய படம் அல்லவா, அதனால்தான் ஸ்மார்ட்டான வில்லன் அர்ஜுன் போலிருக்கிறது. இந்தப் படத்திற்குப் பிறகு அர்ஜுனுக்கு வில்லன் கதாபாத்திரங்கள் மளமளவெனத் தேடி வரும்.

விஷால் ஜோடி சமந்தா என்று சொல்வதா, இல்லை ‘வெல்விஷர்’ என்று சொல்வதா தெரியவில்லை. இருவருக்கும் இடையே படத்தில் காதல் காட்சிகளே இல்லை. அவர்கள் காதலிக்க ஆரம்பித்துவிட்டார்கள் என்று நாம்தான் புரிந்து கொள்ள வேண்டும். மனநல மருத்துவர் ஆக மிகப் பாந்தமாக நடித்திருக்கிறார் சமந்தா.

ரோபோ சங்கர், டெல்லி கணேஷ் இருவரும் படம் முழுவதும் இருக்கிறார்கள். முதலாமவர் நகைச்சுவைக்கு, இரண்டாமவர் சென்டிமென்ட்டுக்கு.

யுவன்ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை வேறு ஒரு தளத்தில் அமைந்து ரசிக்க வைக்கிறது. ஜார்ஜ் வில்லியம்ஸ் படத் தொகுப்பு, ரூபன் படத் தொகுப்பு ஆகியவையும் படத்திற்கு பலம். விவசாயிகளைப் பற்றிய வசனங்களுக்கும், நாட்டு நிலைமையை ஆங்காங்கே உணர்த்தும் வசனங்களுக்கும் தியேட்டரில் கைத்தட்டல்.

படம் கொஞ்சம் நீளம் என்பதைத் தவிர படத்தில் வேறு எந்தக் குறையும் இல்லை.

இன்றைய மொபைல் போன் காலத்தில் ஒவ்வொருவரும் தவறாமல் பார்க்க வேண்டிய படம் ‘இரும்புத்திரை’.

 

Read Previous

இரவுக்கு ஆயிரம் கண்கள் – விமர்சனம்

Read Next

நடிகையர் திலகம் – விமர்சனம்

Most Popular