மன்னர் வகையறா விமர்சனம்

குடும்பக் கதைகள், கிராமத்துக் கதைகள் என்றாலே தமிழ் சினிமாவில் அதை ரசிப்பதற்கென்றே தனி ரசிகர் கூட்டம் உண்டு. இந்தப் படத்தில் இரண்டு குடும்பங்களுக்கு இடையேயான மோதல், இரண்டு குடும்பங்களுக்கு இடையேயான காதல் இரண்டையும் மையமாக வைத்து கலகலப்பாகவும், சென்டிமென்ட்டாகவும் கொடுத்திருக்கிறார்கள்.

அண்ணன் கார்த்திக்குமார் காதலித்த சாந்தினிக்கு திருமணம் நடக்கப் போகும் தினத்தில் மண்டபம் புகுந்து அவரைத் தூக்கி வந்து அண்ணனுக்குத் திருமணம் செய்து வைக்கிறார் விமல். வரும் போதுதான் தன் காதலி ஆனந்தியின் அக்காதான் சாந்தினி என அவருக்குத் தெரிய வருகிறது. அடுத்து,  சாந்தினிக்குத் திருமணம் நிச்சயத்து வைத்திருந்த பையனுடன் ஆனந்திக்குத் திருமணம் முடிவு செய்கிறார்கள். அப்பா பிரவு சொன்னதால், ஆனந்தியை மறக்கிறேன் என்கிறார் விமல். இதன் பின் என்ன நடந்தது என்பதுதான் ‘மன்னர் வகையறா’.

கலகலப்பான படமாகக் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டார்கள். அதனால், கதையில் பெரிய திருப்புமுனை எல்லாம் இல்லாமல் ஜாலியாகக் கதையை நகர்த்தியிருக்கிறார்கள்.

விமல் இது போல் பல படங்களில் நடித்தவர். அதனால், இந்தக் கதாபாத்திரத்திலும் அப்படியே எளிமையாக, யதார்த்தமாக நடித்துவிடுகிறார். அவருடைய காதலியாக நடித்திருக்கும் ஆனந்திதான் ஆச்சரியப்படுத்தியிருக்கிறார். இதுவரை அழுமூஞ்சியாகவே பார்த்த ஆனந்தியா இது என வியக்க வைக்கிறார். நல்லா நோட் பண்ணிக்குங்க டைரக்டர்ஸ், ஆனந்திக்கு இப்படியும் நடிக்கத் தெரியும்.

பிரபு, ஜெயப்பிரகாஷ், சரண்யா, மீரா கிருஷ்ணன் என சென்டிமென்ட் கதாபாத்திரங்கள், ஆனந்தியின் அண்ணன் வம்சி கிருஷ்ணா, அண்ணி நீலிமா ராணி, ஆனந்தியின் பாட்டி என அனைவருமே அவரவர் கதாபாத்திரங்களில் யதார்த்தமாய் நடித்திருக்கிறார்கள்.

ரோபோ சங்கர் தான் படத்தின் ஸ்பீட் பிரேக்கர். கவுண்டமணி, வடிவேலு என இன்னும் ‘கலக்கப் போவது யாரு’ நிகழ்ச்சியை மறக்கவில்லை போலிருக்கிறது. இது சினிமா பாஸ், ரூட்டை மாத்துங்க.

ஜேக்ஸ் பிஜாய் இசையில், பாடல்கள் பரவாயில்லை. பி.ஜே. முத்தையா ஒளிப்பதிவில் கிராமத்து மண் வாசம்.

படத்தின் நீளம்தான் அதிகம், அதைக் குறைத்திருந்தால் இன்னும் கலகலப்பாக ரசிக்கலாம். ஜாலியான படம் பார்க்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு இந்த ‘மன்னர் வகையறா’ ஏமாற்றாது.

Read Previous

பாகமதி விமர்சனம்

Read Next

படை வீரன் – டிரைலர்

Most Popular