பாகமதி விமர்சனம்

‘பாகுபலி’ என்ற உச்சரிப்பு வருவது போலவே ‘பாகமதி’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். ஆனால், பெயரில் மட்டும் அப்படி சாயல் இருக்கலாம். உருவாக்கத்தில் ‘பாகுபலி’ படத்தின் கிட்ட கூட நெருங்க முடியாத ஒரு படம்தான் இந்த ‘பாகமதி’.

மக்களிடம் தனி செல்வாக்குடன் இருக்கும் மத்திய அமைச்சர் ஜெயராம். அவரை ஊழல் குற்றம் மூலம் அரசியலை விட்டே ஓட வைக்க அவரின் அரசியல் எதிரிகளான மாநில முதல்வர், உள்துறை அமைச்சர் முடிவெடுக்கிறார்கள். கொலைக் குற்றவாளியாகி சிறையில் உள்ள ஐஏஎஸ் அதிகாரியும், மத்திய அமைச்சர் ஜெயராமின் தனி உதவியாளருமான அனுஷ்காவை விசாரித்து ஜெயராம், சிலைத் திருட்டுகளில் சம்பந்தப்பட்டுள்ளார் என சிபிஐ மூலம் சிக்க வைக்க முயல்கிறார்கள். அதற்காக அனுஷ்காவை பாழடைந்த பாகமதி பங்களாவுக்கு அழைத்துச் செல்கிறார்கள். அங்கு அனுஷ்காவுக்குள், பாகமதி ஆவி புகுந்து கொள்கிறது. அதன் பின் என்ன என்பதுதான் பல படங்களில் பார்த்து பழகிப் போன ‘பாகமதி’.

ஒரு சாதாரணமான கதையில் அனுஷ்கா. அவருடைய கதாபாத்திரத்திலும் எந்த சிறப்பும் இல்லை, அதில் அனுஷ்காவின் நடிப்பும் அட்டகாசம் இல்லை. அதிகாரியாக வரும் காட்சிகளில் மிகவும் முதிர்ச்சியாகத் தெரிகிறார். சிறைக் கைதியாக வரும் காட்சிகளில் கொஞ்சம் பரவாயில்லை. பாகமதி என டைட்டில் வைத்து விட்டு, பாகமதியை வலுவில்லாத கதாபாத்திரமாகவே உருவாக்கியிருக்கிறார்கள்.

மக்களுக்காகவே உழைக்கும் நல்லவராக ஜெயராம், அவ்வளவு நல்லவர் மீது ஆரம்பத்திலேயே சந்தேகம் வர வைத்துவிடுகிறார்கள். உன்னி முகுந்தன் அனுஷ்காவின் காதலனாக நடித்துள்ளார். கொஞ்சமாக வந்தாலும் நடிப்பில் நிறைவு. நகைச்சுவைக் காட்சிகள் என சில காட்சிகள், சிறுபிள்ளைத்தனமான காட்சிகள்.

தமன் பின்னணி இசை பரவாயில்லை. ஒளிப்பதிவாளர் மதி, பாகமதியின் பங்களா ஒளி அமைப்பில் அசத்தியுள்ளார்.

பல படங்களில் பார்த்த அதே பாழடைந்த பங்களாவில் பேய், யாரோ திடீரென ஓடுவது, வித்தியாசமான சத்தங்கள் என ‘சந்திரமுகி’ காலத்து பயமுறுத்தும் காட்சிகள். படத்தில் புதிதாக, வித்தியாசமாக எதுவும் இல்லை என்பது குறை.

பாகமதி, பாதி ஒளி…

Read Previous

நிமிர் விமர்சனம்

Read Next

மன்னர் வகையறா விமர்சனம்