தயாரிப்பாளராகவும் இருந்து இயக்குனராகவும் மாறியிருக்கும் சி.வி.குமார் முதல் படத்திலேயே வித்தியாசமான ‘சயின்ஸ் ஃபிக்ஷன்’ படத்தைக் கொடுத்து இயக்கத்திலும் வெற்றி பெற்றிருக்கிறார். வளரும் நட்சத்திரங்களை வைத்துக் கொண்டு இப்படி ஒரு படத்தைக் கொடுத்திருப்பது நிச்சயம் தனி கவனம் பெறும்.
கதை
சந்தீப் கிஷன் சென்னை, அம்பத்தூர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருக்கிறார். ஒரே மாதிரியாக நடக்கும் சில கொலைகளைப் பற்றிய விசாரணை அவரிடம் ஒப்படைக்கப்படுகிறது. அது சம்பந்தமான விசாரணையில் இறங்குபவர் ‘மோட்டிவேஷன் குரு’வான டேனியல் பாலாஜியை சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரிக்கிறார். அப்போது அவருக்கு திடுக்கிடும் சில விஷயங்கள் தெரிய வருகிறது. மனித மூளையைக் காப்பி எடித்து அதை வேறு ஒருவருக்கு செலுத்தி சில வேலைகளையும், கொலைகளையும் ஒருவர் செய்வதைக் கண்டுபிடிக்கிறார். அந்த ‘மாயவன்’ யார் என்பதை சந்தீப் கிஷன் எப்படி கண்டுபிடித்தார் என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
இயக்கம்
உடல் உறுப்பு மாற்றுக் கதைகளைப் பார்த்திருக்கிறோம். ஆனால், முதல் முறையாக மூளை மாற்றுக் கதை ஒன்றை தமிழ் சினிமாவில் பார்க்கிறோம். அதை சிறிதும் சுவாரசியம் குறையாமல் படத்தை விறுவிறுப்பாகக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் சி.வி.குமார். அறிவியல், உளவியில், மருத்துவம், ஆச்சரியம் என பரபரப்புடன் நகர்கிறது படம்.
நடிப்பு
தமிழ் சினிமாவில் சந்தீப் கிஷனுக்கு முதல் முறையாக ஒரு நல்ல படமும், நல்ல கதாபாத்திரமும் கிடைத்திருக்கிறது. அதை உணர்ந்து நடித்து தன் நடிப்பைப் பற்றி பேச வைத்திருக்கிறார் சந்தீப். போலீஸ் அதிகாரியாக ஒரு ஹீரோ நடித்தால் அந்தப் படம் அவருக்குத் திருப்புமுனையாக அமையும் என தமிழ் சினிமாவில் ஒரு சென்டிமென்ட் உண்டு. அது சந்தீப்புக்கம் அமையட்டும்.
மனநல மருத்துவராக லாவண்யா திரிபாதி. அதிக வேலையில்லை என்றாலும் வரும் சில காட்சிகளிலும் அவருடைய முக்கியத்துவத்தை படத்தில் உணர்த்தியிருக்கிறார். ‘மோட்டிவேஷன் குரு’ ருத்ரன் ஆக டேனியல் பாலாஜி. இப்படிப்பட்ட கார்ப்பரேட் பாணி கொள்ளைகளைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். முதல் முறையாக அதை எப்படி செய்வார்கள் என்பதை தனது நடிப்பின் மூலம் உணர்த்தியிருக்கிறார் டேனியல் பாலாஜி. கிளைமாக்சுக்கு முன்பாக வந்து தனி பரபரப்பைக் கூட்டுகிறார் ஜாக்கி ஷெராப். பகவதி பெருமாள் கடமைக்காக கண்ணீர் விட வைக்கிறார்.
இசை
ஜிப்ரான் இசையில் பாடல்களுக்கு அதிக முக்கியத்துவமில்லை. பின்னணி இசையில் மாயவனை இன்னும் கொஞ்சம் மிளிர வைக்கிறார். கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவும், கோபி அமர்நாத்தின் கலை வடிவமைப்பும் படத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவை.
படத்திற்கு +
புதுமையான கதை, விறுவிறுப்பான காட்சிகள், கதாபாத்திரங்களின் வடிவமைப்பு.
படத்திற்கு –
சிற்சில இடங்களில் நிலவும் குழப்பங்கள்.