முன்னணி கதாநாயகர்கள் நடிக்கும் படங்களையும், பல கோடி செலவில் பிரம்மாண்டமாக உருவான படங்களையும் மட்டுமே பார்க்க நாம் அதிக ஆர்வம் காட்டுகிறோம்.
நல்ல கதையம்சத்துடன் கூடிய படங்களைப் பார்க்க காட்டும் ஆர்வம் என்று அதிகமாக நம்மிடம் வளர்கிறதோ அன்று தமிழ் சினிமா மேலும் வளரும்.
பெரிய ஹீரோ படத்தைப் பார்த்து கலங்கிப் போயிருக்கும் நிஜமான தமிழ் சினிமா ரசிகர்கள் இந்த ‘குரங்கு பொம்மை’ படத்தைத் தவறாமல் பார்க்க வேண்டும்.
‘விவேகம்’ போன்று செலவு செய்து எடுக்கும் பட்ஜெட்டில் ‘குரங்கு பொம்மை’ போல பத்துக்கும் மேற்பட்ட படங்களை எடுக்கலாம். இம்மாதிரியான படங்களைக் கொடுக்கும் கிரியேட்டர்களை நாம் கொண்டாடடித் தீர்க்க வேண்டும்.ஹ
அதிலும் படத்தின் இயக்குனர் நித்திலன் இயக்கும் முதல் படம் இது என்று கேள்விப்படும் போது ஆச்சரியமாக இருக்கிறது.
தஞ்சாவூரில் சிலை கடத்தல் உள்ளிட்ட தவறான வேலைகளைச் செய்து பெரிய ரவுடியாக இருக்கம் தேனப்பனிடம் வேலை செய்கிறார் பாரதிராஜா. இவரின் மகன் விதார்த் சென்னையில் கார் டிரைவர் ஆக வேலை செய்கிறார். தேனப்பன் கடத்தும் சிலை ஒன்றை சென்னையில் மாற்ற பாரதிராஜா அனுப்பப்படுகிறார். 5 கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த சிலையை மாற்றும் வேலை செய்பவர் குமரவேல். பணத்திற்கு ஆசைப்பட்டு பாரதிராஜாவைக் கொன்று அந்த சிலையை மாற்றி அவரே பணம் சம்பாதிக்க முயல்கிறார். ஒரு சந்தர்ப்பத்தில் ஊரிலிருந்து சென்னைக்கு வந்த அப்பா பாரதிராஜா பற்றிய எந்த தகவலும் வராமல் இருப்பது மகன் விதார்த்துக்குத் தெரிய வருகிறது. அப்பா என்ன ஆனார் என அவர் கண்டுபிடிக்க களம் இறங்குகிறார். அதன் பின் நடக்கும் விஷயங்கள் நாம் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத விதத்தில் பரபரப்பாக நகர்கிறது.
கதையின் நாயகனாக விதார்த். ஆரம்பத்தில் பெண் பார்க்கப் போகும் போது மட்டும் கலர் டிரஸ் போட்டுக் கொண்டு போகிறார். அதன் பின் படம் முழுவதும் அவருடைய டிரைவர் யூனிபார்ம் மட்டுமே. நல்ல சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படும் விதார்த் போன்ற நடிகர்களை நாம் எப்போது தூக்கிவிடப் போகிறோமோ தெரியவில்லை. எந்த ஒரு காட்சியிலும் கதாபாத்திரத்தை மிஞ்சாத யதார்த்தமான நடிப்பை படம் முழுவதும் கொடுத்திருக்கிறார்.
கதையின் நாயகியாக டெல்னா டேவிஸ். கேரளாவிலிருந்து நடிக்க வருபவர்கள் கூட அவ்வளவு அழகாக அவர்களுடைய படங்களையும், கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து நடிக்கிறார்கள் என்பது ஆச்சரியம்தான்.
படத்தின் முதுகெலும்பு பாரதிராஜா. இவ்வளவு பெரிய யதார்த்த நடிகர் இத்தனை நாளாக இயக்குனர் என்ற அடையாளத்துடனேயே இருந்திருக்கிறார். இவர் படங்களில் ஏன் நடிகர்கள் அவ்வளவு அழகாக ஜொலிக்கிறார்கள் என்பதன் அர்த்தம் இப்போதுதான் புரிகிறது. அதிலும், குமரவேலிடம் ஒரு கதையைச் சொல்லும் காட்சியில் அனைவரும் அழுது விடுவார்கள்.
தஞ்சாவூர் தாதாவாக தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன். ‘சண்டக் கோழி’ படத்தில் நடித்த லால்-ஐப் பார்ப்பது போல் உள்ளது. அவ்வளவு இயல்பாக வில்லத்தனம் செய்திருக்கிறார். இவரைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டால் தமிழ் சினிமாவில் சில வருடங்களுக்கு லோக்கல் வில்லன்கள் பஞ்சம் இருக்காது.
படத்தின் மெயின் வில்லன் குமரவேல். அட, இப்படியெல்லாம் கூட ஒரு வில்லன் கதாபாத்திரத்தை உருவாக்க முடியுமா என இவருடைய கதாபாத்திரத்தை அவ்வளவு சிறப்பாக உருவாக்கியிருக்கிறார் இயக்குனர். அதில் குமரவேலின் நடிப்பு முத்திரை பதித்துள்ளது.
படத்தில் ஒரே ஒரு பாடல்தான். பின்னணி இசையில் அஜனீஷ் லோக்நாத் கதையுடன் இசையையும் பொருத்தமாக நகர்த்தியிருக்கிறார். உதயகுமாரின் ஒளிப்பதிவு படத்துடன் நம்மை அப்படியே உள்ளே இழுத்துக் கொண்டு செல்கிறது.
நல்ல சினிமா வரவில்லையே என ஏங்கித் தவிப்பவர்கள் ‘குரங்கு பொம்மை’ படத்தைப் போய்ப் பாருங்கள். உங்கள் ஏக்கம் கண்டிப்பாகத் தீரும்.