கயல் – விமர்சனம்

  kayal review தமிழ்த் திரைப்படங்களில் எவ்வளவோ காதல் படங்கள் வருகின்றன. ஆனால், ஒரு சில படங்கள்தான் காவியக் காதல் படங்களாக அமைகின்றன. அப்படிப்பட்ட காதல் காவியப் படமான ‘மைனா’ படத்திற்குப் பிறகு, ‘கும்கி’ படத்தை இயக்கி கமர்ஷில் வெற்றிப் படத்தைக் கொடுத்த இயக்குனர் பிரபு சாலமன் இந்தக் ‘கயல்’ படம் மூலம் மீண்டும் ஒரு காதல் காவிய கமர்ஷியல் வெற்றிப் படத்தைக் கொடுத்திருக்கிறார். காதல் வருவது மின்னல் போலத்தான் என்றாலும், காதல் பிறக்கும் அந்த ஒரு நொடி நமக்குள் ஒரு புதிய ஒளியைப் பாய்ச்சி விடும். இந்தக் ‘கயல்’ அப்படிப்பட்ட ஒரு ஒளியை மின்னலை விட வேகமாகப் பாய்த்து விடுகிறார். காதலாலும், காதலியாலும் அழிந்தவர்கள் பல பேர் என காதலைப் பிடிக்காதவர்கள் சொல்வார்கள். ஆனால், காதல்தான் வாழ்க்கை, காதலிதான் சுவாசம் என்பது பலருக்கும் புரியும். அப்படிப்பட்ட ஒரு காதல் தான் இந்தப் படத்தில்  வரும் ‘காதல்’. வழக்கம் போலவே உணர்வு பூர்வமாக உள்ளத்தை உருக்கி எடுக்கிறார் இயக்குனர் பிரபு சாலமன். ஆறு மாதம் வேலை, ஆறு மாதம் இந்த உலகத்தைச் சுற்றும் வேலை என ‘பறவை போல பறந்து திரிபவர்கள்’ படத்தின் நாயகன் சந்திரன் அவருடைய நண்பன் வின்சென்ட். அனாதை ஆசிரமத்தில் வளர்ந்த இவர்களிருவரும் நெருங்கிய நண்பர்கள். ஒருவர் பெயரை மற்றவர் இனிஷியலாக வைத்துக் கொள்ளும் அளவிற்கு நெருங்கிய நண்பர்கள். சந்திரனின் பார்வையற்ற அப்பாவின்  ஆசைப்படி, இந்த உலகத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் சுற்றித் திரியும் நண்பர்கள் கடைசியாக கிறிஸ்துமஸ் தினத்தைக் கொண்டாட கன்னியாகுமரிக்குப் பயணிக்கிறார்கள். போகும் வழியில் ஒரு பிரச்சனையில் சிக்கிக் கொள்ள, அங்கு யதேச்சையாக ‘கயல்’ ஆனந்தியைப் பார்க்கிறார் சந்திரன். அந்த நிமிடமே அவருடைய உள்ளத்தைக் கிழித்துக் கொண்டு உட்கார்ந்து விடுகிறார் ஆனந்தி. சந்தர்ப்பம் இருவரையும் பிரித்து விட பிரிந்தவர்கள் ஒன்று சேர்ந்தார்களா, இருவருக்குள்ளும் இருக்கும் காதல் அவர்களைச் சேர்த்து வைக்கிறதா என்பதுதான் படத்தின் மீதிக் கதை. தமிழ் சினிமாவின் இந்த ஆண்டின் சிறப்புக்குரிய அறிமுகங்களில் முதலிடத்தை சந்திரன் பிடித்து விடுவார். அவருக்கு ‘ஒளி’ மயமான எதிர்காலம் இந்தக் ‘கயல்’ மூலம் கண்டிப்பாகக் கிடைக்கும். அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எந்தக் கவலையும் இல்லாமல் ஊரைச் சுற்றுவது எவ்வளவு பெரிய இன்பம். அந்த இன்பத்தை படம் முழுவதும் முகத்தில் அப்படியே வெளிப்படுத்தியிருக்கிறார். ஆனால், அப்படிப்பட்டவருக்குள்ளும் ‘காதல்’ வந்து விட்டால் ‘பைத்தியம்’ பிடித்து விடும் இல்லையா…அந்தக் காதலால் ஏற்படும் உருக்கத்தையும் யதார்த்தமாகக் கண்முன் நிறுத்தியிருக்கிறார். அழகான நடிக்கத் தெரிந்த நாயகிகளை அறிமுகப்படுத்துவதில் அடுத்த பாலசந்தர், பிரபு சாலமன்தான். இந்தப் படத்தைப் பற்றி பல செய்திகளை இதற்கு முன் எழுதும் போது கூட ஆனந்தி என்ற பெயரை ‘கயல்’ என்றே எழுதி பின்னர் திருத்திய பல சம்பவங்கள் உண்டு. கயலின்…அந்த இரண்டு…கண்கள்… சே..இப்போதும்..தவறுதான்…ஆனந்தியின் அந்த இரண்டு கண்களும் என்னமாய் பரிதவிக்கிறது, பாசத்துடன் பார்க்கிறது, பரவசப்பட வைக்கிறது, காதலைக் கனிவாக வெளிப்படுத்துகிறது. ஆனந்திக்கு இந்தக் ‘கயல்’ ஆஹா..அறிமுகம் மட்டுமில்லை…ஆஹா..ஒஹோ..அற்புதம்..அருமை எனச் சொல்ல வைக்கும் அறிமுகம். யாருப்பா அந்த வின்சென்ட்…இலங்கைத் தமிழர்…தமிழ்நாட்டில் மட்டும் சிறந்த தமிழ் நடிகர்கள் இல்லை. உலகம் முழுவதும் பரவிக் கிடக்கிறார்கள் என அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமாக இந்தப் படத்தில் அறிமுகமாகியிருக்கிறார். நம் மண்ணின் மைந்தராகவே தெரிகிறார். கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள் வின்சென்ட்… படத்தில் மற்ற முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள தேவராஜ், பிளாரன்ட் பெரைரா, ஆரம்பத்தில் வரும் பாரதி கண்ணன், அந்த தொப்பை போலீஸ், கயலின் பாட்டி, கயலைக் காதலனுடன் சேர்த்து வைக்கத் துடிக்கும் அந்தக் கல்லூரி மாணவிகள் என அனைவருமே மனதில் இடம் பிடிக்கிறார்கள். மணிரத்னம் – இளையராஜா கூட்டணி போல, பிரபு சாலமனுக்கென்று எப்போதும் இமான் சிறப்பாகக் கவனிப்பார். அது இந்தப் படத்திலும் தொடர்கிறது. “பறவையா பறக்கிறோம்…, எங்கிருந்து வந்தாயோ…, எங்க புள்ள இருக்க…என் ஆளப் பார்க்கப் போறன்…, உன்ன இப்பப் பார்க்கணும்…, எனக் காற்றில் இந்தக் ‘கயல்’ பாடல்கள் காலத்திற்கும் ஒலித்துக் கொண்டேயிருக்கும். போலீசிடம் சந்தேகத்தின் பேரில் சந்திரனும், வின்சென்ட்டும் சிக்கிக் கொள்ளும் போது சந்திரன் பேசும் ஒவ்வொரு வசனமும் வாழ்க்கையின் அர்த்தத்தை உணர வைக்கிறது. நாமும் ஒரு ஆறு மாதம்…வேண்டாம் ஆறு நாட்களாகவது பையைத் தூக்கிக் கொண்டு எங்காவது கிளம்பி விட வேண்டும் என்ற தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மகேந்திரனின் ஒளிப்பதிவு நம் கண்கள் போலவே தெரிகிறது. 1 சாமுவேல் 2:8 படத் தொகுப்பும், வைர பாலனின் அரங்க அமைப்பும் கச்சிதம். அதிலும் அந்த சுனாமி காட்சிகள் இன்னொரு ‘டைட்டானிக்’ பார்த்த உணர்வு. கயல் – விழிகளுக்கு ஒரு காவியம்…  

Read Previous

மீகாமன் – விமர்சனம்

Read Next

Madhavan’s Irudhi Suttru…

Most Popular