‘மீகாமன்’ என்றால் பலருக்குப் புரியுமா என்பது சந்தேகம்தான். ‘மீகாமன்’ என்றால் ‘கேப்டன் ஆப் தி ஷிப்’ என்று அர்த்தம். அழகான தமிழ்ப் பெயருக்கு ஆங்கிலத்தில் அர்த்தம் சொல்ல வேண்டியதாயிருக்கிறது,” என்று கடந்த ஆண்டு இந்தப் படம் ஆரம்பிக்கப்பட்ட சமயத்தில் பத்திரிகையார்களைச் சந்தித்த இயக்குனர் மகிழ் திருமேனி தெரிவித்தார். படத்தில் எந்த கப்பலுக்கும் ஆர்யா கேப்டன் இல்லை. ‘அன்டர் கவர் ஆபரேஷன்’ ஒன்றை முன்னெடுத்துச் செல்லும் ‘கேப்டன்’ ஆகத்தான் ஆர்யா நடித்திருக்கிறார். சமீப காலத்தில் இப்படி ஒரு ஸ்டைலிஷான ஆக்ஷன் படம் ஒன்றைப் பார்த்திருப்போமா என்பது சந்தேகம்தான். அருள் என்கிற சிவா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆர்யாவின் ஸ்டைலான தோற்றத்தால் ‘மீகாமன்’ மிரள வைக்கிறது. கோவாவில் நடக்கும் கதை. கடத்தல் உள்ளிட்ட மிகப் பெரும் குற்றங்களைப் புரியும் அசுதேஷ் ராணா மற்றும் அவனது கூட்டாளிகளைப் பிடிக்க ‘போக்கிரி, பாண்டியன்’ பாணியில் வில்லனிடமே அடியாளாகச் சேருகிறார் ஐபிஎஸ் அதிகாரியான ஆர்யா. ஆசீஷ் வித்யார்த்தி தலைமையில் இயங்கும் மற்றொரு கடத்தல் கூட்டத்தில் மற்றொரு ஐபிஎஸ் அதிகாரியான ஆர்யாவின் நண்பர் ரமணா சேருகிறார். இவர்களிருவரையும் தலைமைப் பதவில் இருந்து செயல்படுத்தும் அதிகாரியாக அனுபமா குமார் இருக்கிறார். இவர்களின் ‘அன்டர் கவர் ஆபரேஷன்’ வெற்றியடைகிறதா இல்லையா என்பதுதான் படத்தின் கதை. சில வரிகளில் கதையைச் சொன்னாலும், அதைப் படமாக்கிய விதத்தில் பெரிதாக நிற்கிறார் இயக்குனர் மகிழ் திருமேனி. தமிழ் சினிமாவில் எப்போதாவது ஒரு முறை இடம் பெறும் கதைக்களமான கோவா இந்தப் படத்தில் புது மாதிரியாகத் தெரிகிறது. அதற்கு சதீஷின் ஒளிப்பதிவு பக்கபலமாக இருக்கிறது. ஆக்ஷன் படங்களுக்கே உரிய திட்டமிடல், காட்சி அமைப்புகள், ஹீரோயிசம், வில்லத் தனம், பரபரப்பு, விறுவிறுப்பு என அனைத்துமே சரியான விதத்தில் கலக்கப்பட்டுள்ளது. சீரியசான கதையில் நகைச்சுவைக்குத் துளியும் இடமில்லை. ஆர்யாவிற்கும், ஹன்சிகாவிற்கும் இடையே காதல் காட்சிகள் வைக்க வாய்ப்பு இருந்தாலும், அதையும் தவிர்த்திருக்கிறார் இயக்குனர். முகத்தில் அமைதியும் செயலில் ஆர்ப்பாட்டமும் என வழக்கமான ஆக்ஷன் ஹீரோக்களை விட வேறு ஒரு ரூபத்தில் இருக்கிறார் ஆர்யா. வசனங்களால் பேசுவதை விட கண்களால் பேசும் காட்சிகள் அதிகம். இப்படி ஒரு சில ஸ்டைலிஷான படங்களில் நடிக்க ஆரம்பித்தால் அஜித்துடன் போட்டி போடும் அளவிற்குக் கூட ஆர்யா உயரலாம். தமிழ் சினிமாவில் தொடர்ந்து காட்டப்படும் அழகான ‘லூசுப் பெண்’ கதாபாத்திரத்தில் ஹன்சிகா. படத்தில் ஆரம்பத்தில் ஆட வராத ‘ஸ்பின்’ அவருக்குக் கடைசியில் ஆர்யா சொல்லிக் கொடுத்த உடனேயே வந்து விடுகிறது. கடைசியில் படத்தின் ட்விஸ்ட்டுக்கு ஹன்சிகா கூடப் பயன்படவில்லை, அவருடைய மொபைல் போன்தான் பயன்படுகிறது. அசுதோஷ் ராணாவின் வில்லத் தனம் தமிழ் சினிமாவிற்குப் புதியதல்ல. அனுபமா குமார், ரமணா, ஓஏகே தேவர், ஆசிஷ் வித்யார்த்தி அவரவர் கதாபாத்திரங்களில் எல்லை மீறாமல் நடித்திருக்கிறார்கள். தமனின் பின்னணி இசை ஆங்காங்கே மிரட்டல்…மீதி இடங்களில் மிதமாகவே உள்ளது. மீகாமன் – ‘மேக்கிங்’ மிரட்டல்…