‘பீட்சா’ படத்தின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இந்த ‘ஜிகர்தண்டா’ மூலம் அடுத்த கட்டத்துக்கு பயணிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறார். ரசிகர்கள் அடுத்து இப்படித்தான் நடக்கும் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்க அவர்கள் எண்ணத்தில் இடியை இறக்கி விட்டு, அவர்கள் எதிர்பார்க்காத விதத்தில், தனக்கென ஒரு திரைக்கதை பாணியை இந்தப் படத்திலும் உருவாக்கி விட்டார். படத்தின் ஆரம்பக் காட்சியிலேயே முகம் தெரியாத ஒருவனை சில பேர் சுட்டுக் கொல்ல, அடுத்தக் காட்சியில் முகத்தை மூடிய ஒருவனை மிகக் கொடூரமாக உயிரோடு எரித்துக் கொல்லும் காட்சியைக் காட்டி விட்டு ஒரு முரணோடுதான் படத்தை ஆரம்பிக்கிறார் கார்த்திக். எந்த ஃபார்முலாவுக்குள்ளும் அடங்க வேண்டாமென்று நினைப்பது சரிதான், அதற்காக இடைவேளை வரை ஒரு ஆக்ஷன் கலந்த ‘ரத்த வரலாற்றை’க் காட்டி விட்டு, அதன் பின் வேறு ஒரு பாதையில் படத்தை நகர்த்தியிருப்பதை எந்த வித்தியாசத்தில் சேர்ப்பது….? குறும்படப் போட்டியில் கிடைத்த திரைப்பட வாய்ப்பால், ஒரு ரவுடி பற்றிய திரைப்படம் ஒன்றை இயக்க வேண்டும் என்ற ஆசையில் சென்னையிலிருந்து மதுரைக்கு வருகிறார் சித்தார்த். நண்பன் கருணாகரன் வீட்டில் தங்கியிருந்து மதுரையையே மிரட்டிக் கொண்டிருக்கும் ரவுடியான சிம்ஹா பற்றிய ‘அ முதல் ஃ’ வரையிலான விவரங்களை சேகரிக்க ஆரம்பிக்கிறார். ஒரு சந்தர்ப்பத்தில் சித்தார்த்தும், கருணாகரனும், சிம்ஹாவிடம் வசமாக மாட்டிக் கொள்கின்றனர். தன்னை உளவு பார்க்க வந்தவர்தான் சித்தார்த் என சிம்ஹா நினைக்கிறார். அவர்களைக் கொல்ல முயலும் நேரத்தில் சித்தார்த், தான் எதற்காக மதுரைக்கு வந்தேன், சிம்ஹாவைப் பற்றிய விவரங்களை எதற்கு சேகரித்தேன் என்ற விவரங்களைச் சொல்கிறார். இதன் பின் ஆக்ஷனை விட்டு, நகைச்சுவைக்கு மாறும் படத்தில் என்ன நடக்கிறது என்பதுதான் கொஞ்சம் கலகலப்பான மீதி கதை.
படத்திற்கு உயிர் நாடியாய் இருப்பர் சிம்ஹா…பிரகாஷ்ராஜ், நாசர் போன்றோர் குணச்சித்திர வேடத்திற்கு மாறிவிட அவர்கள் விட்ட இடத்தை நிரப்ப, சபாஷ் சரியான போட்டி என ஓட்டத்தில் குதித்திருக்கிறார் சிம்ஹா. ‘அசால்ட் சேது’ கதாபாத்திரத்தில் அசால்ட்டான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இதற்கு முன் இவர் நடித்து வெளிவந்த படங்களில் எந்த கதாபாத்திரத்தில் இவர் நடித்தார் என்று நம்மை கொஞ்சம் யோசிக்க வைப்பவர், இந்த படத்தின் மூலம் தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். இவ்வளவு நடிக்கத் தெரிந்த நடிகரை தங்கள் படங்களில் சரிக்கு சரியான வில்லன் கதாபாத்திரத்திலோ, குணச்சித்திரக் கதாபாத்திரத்திலோ நடிக்க வைக்க நமது ஹீரோக்கள் முன் வருவார்களா….? கடந்த சில வருடங்களில் அறிமுகமான புதிய இசையமைப்பாளர்களில் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். ‘கண்ணம்மா…கண்ணம்மா…’ பாடலிலும், பின்னணி இசையிலும் புது உத்வேகத்தை கொடுத்துள்ளார்.
மதுரையைச் சேர்ந்த இயக்குனர்கள் கூட இன்னும் எத்தனை நாளைக்குத்தான் மதுரையை ரவுடிகளின் நகரமாக காட்டுவீர்கள். மதுரையின் உண்மையான மறுபக்கத்தை காட்டவே மாட்டீர்களா…“இரும்பு அடிக்கிற இடத்துல ஈக்கு என்ன வேலை” மாதிரிதான் இருக்கிறாரு சித்தார்த். தனக்கு அதிக முக்கியத்துவம் இல்லை என்று தெரிந்தும் இந்த படத்தில் நடிக்க சம்மதித்ததற்கு பெரிய மனது வேண்டும். லட்சுமி மேனன், மொத்தமா பத்து சீன்களாவது வந்திருப்பாங்களா…நீட்டி…முழக்கி சொல்லியிருப்பதை கொஞ்சம் குறைத்து, கத்தரித்து கொடுத்திருந்தால் ‘ஜிகர்தண்டா’ இன்னும் ‘ஜிவ்வுன்னு…’ இருந்திருக்கும். இனிப்பா இருந்தாலும் நிறைய சாப்பிட முடியாதே….அப்புறம் ‘ஃபுல் மீல்ஸ்’ எப்படி சாப்பிடுவது…. ஜிகர்தண்டா – நிறைய ‘ஜிவ்வு’….கொஞ்சம் ‘ஜவ்வு’….