‘நான், சலீம்’ ஆகிய இரண்டு படங்களை ஒரு த்ரில்லர் படமாகக் கொடுத்து கமர்ஷியல் ரீதியாகவும் வெற்றி பெற்ற விஜய் ஆண்டனி இந்த ‘இந்தியா பாகிஸ்தான்’ படத்தில் முதல் முறையாக நகைச்சுவையைக் கையில் எடுத்துக் கொண்டிருக்கிறார். அதோடு ஹாட்ரிக் வெற்றியும் பெற்றிருக்கிறார். இசையமைப்பாளராக இருந்து நாயகனாக அறிமுகமாகி தொடர்ச்சியாக மூன்று வெற்றிகளைப் பெறுவது சாதாரண விஷயமல்ல. அதை சரியான கதைத் தேர்வின் மூலம் சாதித்திருக்கிறார் விஜய் ஆண்டனி. அறிமுக இயக்குனர் ஆனந் தன்னுடைய முதல் படத்தைத் துணிச்சலாக நகைச்சுவையை மையமாக வைத்து இயக்கியிருக்கிறார். பொதுவாக முதல் படத்திலேயே நகைச்சுவையை எந்த ஒரு அறிமுக இயக்குனரும் அவ்வளவு சுலபத்தில் தேர்வு செய்ய மாட்டார்கள். ஆனால், ஆனந் அந்த முயற்சியில் இறங்கி கரையும் சேர்ந்திருக்கிறார். கதாபாத்திரங்களின் உருவாக்கத்திலேயே அவருக்கு நகைச்சுவை அதிகம் வந்து விட்டது. அதன் பின் அதில் நடித்துள்ள பொருத்தமான நடிகர்கள் அதை மேலும் மெருகேற்றியிருக்கிறார்கள். விஜய் ஆண்டனி, சுஷ்மா ராஜ் இருவரும் வக்கீல்கள். ஒரே இடத்தை தங்களது அலுவலகத்திற்காகப் பார்க்கிறார்கள். அங்கேயே இருவருக்கும் சண்டை ஆரம்பித்து விடுகிறது. இவர்களுக்கு இடம் பார்த்து கொடுத்த தரகர்கள் இருவருமே வக்கீல்கள்தான் என்ற உண்மையை மற்றவரிடம் மறைத்து விடுகிறார்கள். அலுவலகம் வைத்த பின்தான் இருவருக்குமே தாங்கள் வக்கீல்கள் என்ற உண்மை தெரிகிறது. அதனால் யாருக்கு முதலில் ‘கேஸ்’ கிடைக்கிறதோ அவர்கள்தான் அந்த அலுவலகத்தில் இருக்க வேண்டும் என ஒரு ‘பெட்’ கட்டிக் கொள்கிறார்கள். ஆனாலும், ஒரே சமயத்தில் நிலத் தகராறு காரணமாக பசுபதியும், எம்.எஸ்.பாஸ்கரும் தனித்தனியாக இவர்களின் ‘கேஸாக’ வந்து சிக்குகிறார்கள். இதனிடையே விஜய் ஆண்டனி, சுஷ்மா மோதல் ஒரு பக்கம் அதிகமாக, பசுபதி, எம்.எஸ்.பாஸ்கர் வாரிசுகள் காதலிக்க, ஒரு இன்ஸ்பெக்டர் சுஷ்மாவைத் தேடி அலைய என பல பிரச்சனைகள் திருப்பங்ளுக்குப் பின் படம் சுபமாக முடிகிறது. விஜய் ஆண்டனிக்கு அவருடைய முகமே பிளஸ் பாயிண்டாக அமைந்து விடுகிறது. அப்பாவித்தனமான முகத்தை வைத்துக் கொண்டு, இவர் செய்யும் அடாவடிகள் ஒவ்வொன்றும் அவருக்கு கூடுதல் பலத்தைக் கொடுத்து விடுகிறது. முதல் இரண்டு படங்களில் சீரியசான கதாபாத்திரத்தில் நடித்தவர், தன்னால் நகைச்சுவையிலும் நடிக்க முடியும் என இந்தப் படம் மூலம் நிரூபித்திருக்கிறார். அவருக்கும், சுஷ்மாவுக்கும் இடையிலான ‘கோழிச் சண்டை’யில் சர்வ சாதாரணமாக சண்டை போடுகிறார். படத்தில்தான் இவர் மூன்று முறை ‘அட்டம்ப்ட்’ அடித்து பாஸ் செய்தவர், இந்தப் படத்தின் மூலம் மூன்றாவது ‘அட்டம்ப்ட்’டிலும் பாஸ் செய்து விட்டார். சுஷ்மா ராஜ், இந்த குட்டி அனுஷ்காவை எங்கிருந்து பிடித்து வந்தார்கள். இவர் மட்டும்தான் நடிப்பார் என்று பார்த்தால் இவர் கண்களும் கூட கொஞ்சம் எக்ஸ்ட்ராவாக நடித்து விட்டுப் போகிறது. நல்ல உயரம், எந்த ஆடையிலும் பொருத்தமான தோற்றம், நடிப்பு, இனி கொஞ்ச நாளைக்கு சுஷ்மா ரசிகர்களை சும்மா இருக்க விட மாட்டார். தமிழில் முதல் படம், அறிமுகமே நடிப்பதற்கு ஸ்கோப் உள்ள படத்தில் நடித்து, தன்னுடைய திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார். இனி, தொடர்ந்து படங்கள் கிடைக்க வாழ்த்துவோம். நல்ல வேளையாக ஜெகனை படத்தில் அதிக நேரம் காட்டவில்லை. இல்லையென்றால் சிரிக்க வைக்கிறேன் பேர்வழி என்று கடித்தே தள்ளியிருப்பார். இவரை விட சில காட்சிகளே வந்தாலும் காளி வெங்கட் சிரிக்க வைக்கிறார். பசுபதி, எம்.எஸ்.பாஸ்கர் படத்திற்கு முக்கியமான ‘பில்லர்கள்’. தங்களது நெல்லைத் தமிழின் மூலம் பேச்சிலும் ரசிக்க வைப்பவர்கள், நடிப்பிலும் தாமிரபரணி ஆறாய் ஓடுகிறார்கள். பசுபதியின் கைத்தடியாக வரும் யோகி பாபுவும் சிரிக்க வைக்கிறார். கெட்ட இன்ஸ்பெக்டராக சரத் லோகிதாஸ்வா, பேச்சில் மட்டும் கன்னட வாடை அடிக்கிறது. தீனா தேவராஜன் இசையில் ‘பல கோடி பெண்கள்…’ பாடலை பலமுறை கேட்டு ரசிக்கலாம். ஓம் ஒளிப்பதிவில் கிராமமும், சிட்டியும், ஏன் அறையும் கூட அழகாக படமாக்கப்பட்டுள்ளன. படத்தின் நீளத்தை மட்டும் 157 நிமிடங்களிலிருந்து ஒரு 20 நிமிடம் குறைத்தால் படம் இன்னும் அதிக விறுவிறுப்பாக இருக்கும்.