இன்றைய ‘யூத்’துகளின் ரசனையைப் புரிந்து கொண்டு இந்த படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் அஹமத். நட்பு அதிகம், காதல் கொஞ்சம், பாசம் மிச்சம் என அனைத்தும் கலந்த ‘புன்னகை’யைக் கொடுத்திருக்கிறார்கள். ஆங்காங்கே கொஞ்சம் ‘3 இடியட்ஸ்’ வாசனை அடித்தாலும் இந்த புன்னகையின் பூரிப்பு கொஞ்சமும் குறையவில்லை. ஜீவா, வினய், சந்தானம் பள்ளி வயது முதலே நெருங்கிய நண்பர்கள். மூவரும் சேர்ந்து விளம்பர ஏஜென்சி ஒன்றை நடத்தி வருகிறார்கள். ஜீவாவின் அம்மா யாருடனோ ஓடிப் போய்விட்டதால் சிறு வயது முதலே பெண்கள் என்றாலே ஒரு வெறுப்புடன் இருப்பவர் ஜீவா. ஆனால், வினய் பெண்கள் என்றாலே உடனே வழிய ஆரம்பித்து விடுவார். சந்தானமும் அவருக்கு சளைத்தவரல்ல. இருந்தாலும் யாருமே கல்யாணம் பண்ணிக்காமல் நட்பை மட்டுமே பெரிதாக நினைக்க வேண்டுமென சத்தியம் செய்து கொள்கிறார்கள். ஆனால், வினய், சந்தானம் இருவருமே அந்த சத்தியத்தை மீறி திருமணம் செய்து கொள்கிறார்கள். இதனால், கோபமுற்ற ஜீவா நண்பர்களை விட்டுப் பிரிகிறார். இதனிடையே, வேறு ஏஜென்சிக்காக இவர்களுடன் வேலை செய்ய வந்த த்ரிஷாவை மனதுக்குள் காதலித்தாலும் அதை வெளியில் சொல்லாமலே இருக்கிறார் ஜீவா. ஒரு சந்தர்ப்பத்தில் ஜீவா, த்ரிஷாவை அவமானப்படுத்திவிட அவரும் ஜீவாவை விட்டுப் பிரிகிறார்கள். அப்பா நாசர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதால் அவர் மீதும் கோபமுற்று சிறுவயதிலிருந்தே பேசாமல் இருக்கிறார் ஜீவா. மகன் எப்படியாவது தன்னிடம் பேசிவிட மாட்டானா என்ற பாச ஏக்கத்தில் இருக்கிறார் நாசர். கடைசியில் நட்பும், காதலும், பாசமும் வென்றதா இல்லையா என்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ். ‘கோ’ படத்திற்குப் பிறகு ஜீவாவிற்கு பெயர் சொல்லும்படியான படம். காதல், நட்பு, பாசம் என மூன்றுக்கும் இடையில் தவிக்கும் ஜீவனுள்ள கதாபாத்திரம் . அதை அழகாகப் புரிந்து கொண்டு அருமையாக நடித்திருக்கிறார். எந்த இடத்திலும் செயற்கைத்தனமான நடிப்பையோ மிகையான நடிப்பையோ பார்க்க முடியவில்லை. கீப் இட் அப் ஜீவா. ஜீவாவின் நெருங்கிய நண்பர்களில் ஒருவராக வினய். காதல் மன்னன் கதாபாத்திரம். எந்த பெண்ணையும் நிமிடத்திலேயே வளைத்து விடும் கதாபாத்திரம். நீண்ட நாளைக்குப் பிறகு கிடைத்துள்ள வாய்ப்பை சரியாக பயன்பத்தியிருக்கிறார். தொடர்ச்சியான சில சறுக்கல்களுக்கு பிறகு திரையரங்கை புன்னகையால் நிரப்பியிருக்கிறார் சந்தானம். இடைவேளை வரை படம் கலகலப்பாக நகர்வதற்கு இவர்தான் முக்கிய காரணம். ‘பட் பட்’ என பல காட்சிகளில் நகைச்சுவையை வெடித்திருக்கிறார். ஆனாலும், அந்த கக்கூஸ் காமெடியையெல்லாம் விட மாட்டேனென்கிறார். எத்தனை வருடம் ஆனால் என்ன என்றும் மாறாத அதே புன்னகையுடன் என்றென்றும் இருப்பேன் என்கிறார் த்ரிஷா. இவரது சிரிப்பைப் பார்த்துத்தான் படத்திற்கு இயக்குனர் பெயர் வைத்திருப்பாரோ என்னமோ. அந்த அளவிற்கு த்ரிஷாவின் மிகப் பெரிய ரசிகராய் இருப்பார் போலும். அவரும், ஒளிப்பதிவாளரும் சேர்ந்து இந்த அளவிற்கு த்ரிஷாவை அவ்வளவு அழகாய் காட்டியிருக்கிறார்கள். ஆன்ட்ரியா கொஞ்ச நேரம்தான் வருகிறார். பெரிய முக்கியத்துவம் இல்லையென்றாலும் அவர் கோபம், த்ரிஷாவின் காதலுக்கு உதவுகிறது. மீண்டும் ஒரு நிறைவான, பாசமான கதாபாத்திரத்தில் நாசர். வில்லனோ, குணச்சித்திரமோ எதில் நடித்தாலும் நல்ல நடிகர் என்பதை நிரூபிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் படம் முழுவதும் வாசித்துத் தள்ளிக் கொண்டேயிருக்கிறார். பல இடங்களில் அவரது பின்னணி இசை பல காட்சிகளில் வசனத்தைக் கேட்க விடாமல் செய்கிறது. வாங்கற காசுக்கு மேலயே பின்னணி இசையை அடிச்சித் தள்ளியிருக்கிற ஹாரிஸ் அப்படியே பாடல்கள்லயும் கவனத்தை செலுத்தியிருக்கலாம். ஒரே ஒரு பாடல் தவிர மற்ற எல்லாமே சுமாருக்கும் கீழ் ரகம். ஒளிப்பதிவாளர் மதி ஒவ்வொரு காட்சியையும் ஒரு விளம்பரப் படம் போல அசத்தலா படமாக்கியிருக்காரு. மருத்துவர் ராமதாஸ் கட்சித் தலைவர் மகன் தயாரிச்ச படத்துல இவ்வளவு ‘குடி’த்தனமான காட்சிகளா ?. சமீபத்தில் வெளிவந்த படங்களில் அதிகமான ‘குடி’ காட்சிகள் இந்த படத்தில்தான் இருந்திருக்கும். ‘குடி’ இல்லாத காட்சிகளை யோசியுங்கள் இயக்குனர்களே…. என்றென்றும் புன்னகை – பெயரைப் போலே…