ரவுடியிசம் சம்பந்தப்பட்ட கதைகள் தமிழ் சினிமாவில் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. சில கதைகளைப் பார்க்கும் போது சினிமாத்தனம் மட்டுமே அதிகம் கலந்திருக்கும். அதே சமயம் ரவுடியிசத்தில் யதார்த்தமான கதைகளைப் பார்க்க முடியாது.
இயக்குனர் எஸ்.ஆர். பிரபாகரன் இந்த ‘சத்ரியன்’ படத்தை ஒரு யதார்த்தமான ரவுடியிசம் படமாகக் கொடுத்திருக்கிறார்.
திருச்சியில் உள்ள பிரபலமான தாதாவான சரத் லோகித்சவாவிடம் அடியாளாக இருப்பவர் விக்ரம்பிரபு. எதிரியால் சரத் கொல்லப்படுகிறார். அதன்பின், சரத்தின் மகள் மஞ்சிமா மோகன் கல்லூரிக்குச் சென்று வருவதற்கு பாதுகாப்பாகச் செல்கிறார் விக்ரம் பிரபு. சினிமா வழக்கப்படி விக்ரம் பிரபு, மஞ்சிமா மோகன் காதலில் விழுகிறார்கள். ஆனால், இந்தக் காதலுக்கு மஞ்சிமாவின் அம்மா, அண்ணன் எதிராக இருக்கிறார்கள். மஞ்சிமா அப்பா சரத்தைக் கொன்றவனை ஒரு கட்டத்தில் விக்ரம் பிரபு கொலை செய்துவிட, திருச்சிக்கே தாதாவாக வரும் வாய்ப்பை வேண்டாமென விடுகிறார் விக்ரம் பிரபு. அதற்குக் காரணம் காதல். மஞ்சிமாவின் வற்புறுத்தலால் ஊரை விட்டே ஓடுகிறார்கள் விக்ரம் பிரபுவும், மஞ்சிமாவும், அதன் பின் என்ன என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
அடியாளாக விக்ரம் பிரபு. அந்தத் தோற்றத்திற்கு அவருக்கு உயரமும், தாடியும் ஒரு மெச்சூரிட்டியைக் கொடுக்கிறது. அதே சமயத்தில் முகத்தில் இன்னும் கடுமையையும், ஒரு முரட்டுத்தனத்தையும் அவர் கொண்டு வந்திருக்கலாம். இன்னும் கதாபாத்திரத்திற்குப் பொருத்தமாக இருந்திருக்கும்.
மஞ்சிமா மோகன் மயக்க வைக்கும் அழகு இல்லையென்றாலும் யதார்த்தமாக நடித்திருக்கிறார். உடல் எடையை இன்னும் குறைத்தால் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வரலாம்.
படத்தில் இரண்டு வில்லன்கள், அருள்தாஸ், விஜய் முருகன். கொஞ்சமே வரும் சரத் லோகித்சவா ஆகியோரும் அவரவர் கதாபாத்திரங்களில் நிறைவு.
‘சரவணன் மீனாட்சி’ புகழ் கவின், ரியோ ஒரே படத்தில் அறிமுகமாகியிருக்கிறார்கள். ‘இங்கேயும் ஒரு கங்கை’ புகழ் தாரா அம்மாவாக நடித்திருக்கிறார்.
யுவன்ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை படத்திற்கு மிகப் பெரும் பக்கபலம்.
படத்தில் நகைச்சுவையைக் கொஞ்சம் சேர்த்திருக்கலாம். காதலும், ஆக்ஷனும் கலந்த காதல் கதையில் திரைக்கதையை இன்னும் பரபரப்பாக அமைத்திருந்தால் ‘சத்ரியன்’ இன்னும் சத்தானவனாக மாறியிருப்பார்.