அண்ணாதுரை – விமர்சனம்

தொடர்ந்து வித்தியாசமான கதைகளையும், கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடிக்கும் விஜய் ஆண்டனி முதல் முறையாக இரு வேடங்களில் நடித்திருக்கும் படம். எத்தனையோ இரு வேடப் படங்களை பார்த்திருக்கும் நமக்கு இந்த அண்ணன், தம்பி பாசக் கதை ரொம்பவே நெகிழ வைக்கும்.

கதை –  திருக்கோவிலூர் பேரூராட்சியில் அண்ணாதுரை டெக்ஸ்டைல்ஸ் நடத்தி வரும் குடும்பம் விஜய் ஆண்டனியின் குடும்பம். அண்ணன் விஜய் ஆண்டனி காதலியை பறி கொடுத்ததால் குடிப் பழக்கத்திற்கு ஆளாகி ஊரைச் சுற்றிக் கொண்டிருக்கிறார். தம்பி விஜய் ஆண்டனி பள்ளியில் பி.டி. வாத்தியாராக இருக்கிறார். மனம் மாறி குடிப்பழக்கத்தை விடலாம் என நினைக்கும் அண்ணன் விஜய் ஆண்டனி கடைசியாக போதை தலைக்கு ஏறும் வரை குடிக்கிறார். அப்போது நடக்கும் எதிர்பாராத சம்பவத்தில் கொலைகாரனாகி 7 வருட தண்டனை அனுபவித்து சிறைக்குச் செல்கிறார். அதன் பின் அண்ணாதுரையின் குடும்பத்தில் 7 வருடங்களில் நடந்த மாற்றங்களும், அதன் முடிவும்தான் ‘அண்ணாதுரை’ படத்தின் மீதிக் கதை.

இயக்கம் – அறிமுக இயக்குனர் ஜி. சீனிவாசன் முதல் படத்திலேயே ஒரு பாசமான கதையைக் கொடுத்து சென்டிமென்ட்டில் ஜெயித்திருக்கிறார். குடும்பத்தில் உள்ள ஒருவரின் குடிப் பழக்கத்தால் அந்த குடும்பமே எப்படி தள்ளாடிப் போகிறது என்பதை ஆணி அடித்தாற் போல் சொல்லியிருக்கிறார். குடும்ப உறவுகளையும், அண்ணன், தம்பி பாசத்தையும் சமீப காலத்தில் வேறு எந்தப் படமும் இந்த அளவிற்கு நெகிழ்ச்சியாகச் சொன்னதில்லை. கதாபாத்திரங்களின் உருவாக்கம், அதற்கான பொருத்தமான நடிகர் தேர்வு என அனைவரிடமும் சரியான நடிப்பைப் பெற்றிருக்கிறார்.

நடிப்பு – அண்ணாதுரை, தம்பிதுரை என இரு கதாபாத்திரங்களில் விஜய் ஆண்டனி. இவர் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்கள் எப்போதுமே மனதால் அதிக வலியை அனுபவித்த கதாபாத்திரமாக இருக்கும். அப்படிப்பட்ட கதாபாத்திரங்களில் விஜய் ஆண்டனி அவருடைய நடிப்பை பிரமாதமாக வெளிப்படுத்தி விடுவார். இந்தப் படத்தில் இரண்டு கதாபாத்திரங்களிலும் ‘டபுள் பிரமோஷன்’ பெற்றுவிட்டார்.

மூன்று நாயகிகளில் டயானா சம்பிகாவிற்குத்தான் அதிக முக்கியத்துவம். கொஞ்சலிலும், குறும்புத்தனத்திலும் கனமான நடிப்பு. முதல் படம் என்றே சொல்ல முடியாது. மற்ற இரண்டு நாயகிகளான ஜுல் மேரி, மகிமா சில காட்சிகளே வருகிறார்கள்.

நாயகியின் அப்பாவாக செந்தில்குமரன் அருமையான, யதார்த்தமான குணச்சித்திர நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அதிலும் விஜய் ஆண்டனியிடம் குடிப்பழக்கத்தை விடச் சொல்வதற்காக அவர் குடும்பத்தில் உள்ளவர்கள் எவ்வளவு கஷ்டப்படுவார்கள் எனச் சொல்லும் காட்சி கண்கலங்க வைத்துவிடும். விஜய் ஆண்டனியின் அம்மாவாக நடித்திருக்கும் ரிந்து ரவி, சினிமாத்தனம் இல்லாத அம்மாவாக அழ வைக்கிறார்.

வில்லன்களில் ராதாரவி, உதயராஜ்குமார் இருவரை விட சேரன்ராஜ் மிரட்டியிருக்கிறார்.

இசை – விஜய் ஆண்டனியின் இசையில் ‘இஎம்ஐ…’ பாடல் காதல் பாடலாக ரசிக்க வைக்கிறது. பாடலைப் படமாக்கியிருக்கும் விதம், அதற்கான சி.ஜி. வேலைகள் அற்புதம். ‘தங்கமா வைரமா…., ஓடாதே….’ பாடல் கதையோட்டத்தை இன்னும் அழுத்தமாக்கும் பாடல்கள்.

படத்திற்கு +  

விஜய் ஆண்டனியின் நடிப்பு மற்றும் இசை, அருமையான சென்டிமென்ட் குடும்பப் பாசம், கதாபாத்திரங்களின் அமைப்பு, நடிப்பு…

படத்திற்கு –

இடை வேளைக்குப் பின் மையக் கதையிலிருந்து நகர்ந்து, மேலும் சில கிளைக் கதைகள்  வருவதைத் தவிர்த்திருக்கலாம். கிளைமாக்ஸ் முன்பாக அரசியல் பாதைக்குச் சென்று விடுகிறது படம்.

Read Previous

ரசிகர்களின் பெரும் வரவேற்பில் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ டீசர்

Read Next

‘அஅஅ’ பட நஷ்ட விவகாரம், தயாரிப்பாளருக்குத் தீர்வு கிடைக்குமா ?

Most Popular