‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தைத் தயாரித்து வெளியிட்டதால் சுமார் 20 கோடி ரூபாய் வரை நஷ்டமடைந்ததாக படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் பத்திரிகையாளர்களைச் சந்தித்து வெளிப்படையாகத் தெரிவித்தார். அவருடன் படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனும் கலந்து கொண்டார்.
திட்டமிட்டபடி படப்பிடிப்பிற்கு வராமல் போனது, எழுதப்பட்ட கதையை, எழுதப்பட்ட காட்சிகளை படமாக்க முடியவில்லை. அதற்கு படத்தில் நாயகனாக நடித்த சிம்பு சரியாக ஒத்துழைப்பு தரவில்லை என படத்தின் தயாரிப்பாளரும், இயக்குனரும் விளக்கமாகத் தெரிவித்தார்கள்.
‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படம் ஜுன் மாதம் வெளிவந்து, மிகப் பெரும் தோல்வியைத் தழுவியது. ஒரு முழுமையான படமாக இல்லாமல் சிம்பு ரசிகர்களையும் ஏமாற்றியது. படம் தயாரிப்பில் இருக்கும் போதே பெரிய சர்ச்சையை எழுப்பியது.
தயாரிப்பாளர் சங்கத்தில் தயாரிப்பாளர் புகார் தெரிவித்ததைத் தொடர்ந்து சங்கத்தின் மூலமாக இந்தப் பிரச்சனை சம்பந்தமாக சிம்புவிடம் பேசி வருவதாகத் தெரிகிறது. சமீபத்தில் நடந்த ஒரு திரைப்பட விழாவிலும் தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளர் கே.ஈ.ஞானவேல் இது பற்றிய தகவலை மறைமுகமாகத் தெரிவித்தார். அதன் பின்தான் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது.
சிம்புவை சிலர் தொடர்பு கொண்டு கேட்ட போது, என் மீது நடவடிக்கை என்று வரும் போது அப்போது இது பற்றி பேசுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் இரண்டிலும் விஷால் முக்கியப் பொறுப்பில் இருப்பதால் இந்த விவகாரத்திற்கு எப்படிப்பட்ட தீர்வு கிடைக்கப் போகிறது என திரையுலகத்திலேயே பலரும் ஆர்வமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
நஷ்டப்பட்ட தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனுக்குத் தீர்வு கிடைக்குமா, சிம்பு மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதைத் தெரிந்து கொள்ள இன்னும் கொஞ்ச நாள் ஆகலாம்.