தமிழ் சினிமா ரசிகர்கள் ஒவ்வொரு படத்திலும் புது விதமான கதைகளைத்தான் எதிர்பார்த்திருக்கிறார்கள். ஒரு படத்தைப் பார்க்கும் போது ஏற்கெனவே, இதே மாதிரி ஒரு படத்தைப் பார்த்திருக்கிறோமோ என்று அவர்களை எண்ண வைக்கும் படங்கள் பெரும் வரவேற்பைப் பெறுவதில்லை. அதனால்தான் இயக்குனர்களும் யோசித்து, யோசித்து புது விதமான கதைகளைக் கொண்ட படங்களை வித்தியாசமாக உருவாக்க முயற்சித்து வருகிறார்கள். ஒரு படத்திற்கு ஒரு கதை கிடைப்பதே சிரமமாகக் கருதப்படும் இந்தக் காலத்தில் ஒரே படத்தில் மூன்று கதைகளா…என ஆச்சரியப்படும் விதத்தில் வந்திருக்கும் படம்தான் ‘அனேகன்’. இயக்குனர் கே.வி.ஆனந்த் ஒரு கதையை எடுத்துக் கொண்டு அதை திரைக்கதையாக்கி படமாகக் கொடுக்கும் விதம் சுவாரசியமானதாகவே இருக்கும். அவருடைய முதல் படத்திலிருந்தே அதை வெகு சிரத்தையாகச் செய்து வருகிறார், ‘மாற்றான்’ படத்தைத் தவிர. இந்த ‘அனேகன்’ படத்தை பூர்வ ஜென்மம் என்ற நம்ப முடியாத ஒரு ஃபேன்டஸி படமாகக் கொடுத்திருக்கிறார். கதையே நம்ப முடியாத ஒன்றாக இருந்து விடுவதால், சில காட்சிகளில் எழும் லாஜிக் மீறலையும் கண்டு கொள்ளாமல் இருந்து விட முடிகிறது. பர்மாவில் ஆரம்பமாகும் கதை. கூலித் தொழிலாளியாக இருக்கும் தனுஷிற்கும் அந்த நாட்டின் காவல் துறை அதிகாரியான முகேஷ் திவாரியின் மகள் அமைராவிற்கும் காதல். மகளின் காதல் அப்பாவிற்குத் தெரிய வர வழக்கம் போல் காதலை எதிர்க்கிறார். பர்மா கலவரத்தால் இந்தியாவிற்கும் திரும்ப நினைக்கும் தனுஷ், கூடவே காதலியையும் அழைத்துக் கொண்டு கப்பலில் செல்ல முயற்சிக்கும் போது சுட்டுக் கொல்லப்படுகிறார். காதலனுடனேயே ஜல சமாதி அடைகிறார் அமைரா. இந்த ஜென்மத்தில் அமைரா மிகப் பெரும் கோடீஸ்வரியாக இருந்தாலும் ‘கம்ப்யூட்டர் கேம்’களை வடிவமைக்கும் ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். அவருக்கு அடிக்கடி பூர்வ ஜென்ம ஞாபகம் வருகிறது. அதற்கான சிகிச்சையிலும் அவர் இருக்கிறார். அமைரா வேலை பார்க்கும் அதே நிறுவனத்தில் சிஸ்டம் இஞ்சினியராக வேலைக்குச் சேர்கிறார் தனுஷ். முன் ஜென்மத்தில் தன்னுடைய காதலனாக இருந்த தனுஷை இந்த ஜென்மத்திலும் விரட்டி விரட்டி காதலிக்கிறார். ஆனால், தனுஷ் அமைராவைக் கண்டாலோ ஓடி விடுகிறார். ஒரு சந்தர்ப்பத்தில் அமைராவிற்கு பர்மா ஜென்மத்திற்கு அடுத்தபடியாகவும், இந்த ஜென்மத்திற்கு முன்பாகவும் இருந்த மற்றுமொரு ஜென்மத்தின் ஞாபகம் வருகிறது. அந்த ஜென்மத்தில் காதலர்களான தனுஷ், அமைரா கொல்லப்படுகின்றனர். அமைராவின் உதவியால் அந்தக் கொலையாளிகளை இந்த ஜென்மத்தில் கண்டுபிடிக்கும் முயற்சிகள் ஆரம்பமாகின்றன. ஒரு கட்டத்தில் தனுஷிற்கு அமைராவின் பூர்வ ஜென்மம், முன் ஜென்மம் பற்றிய சில பல உண்மைகள் தெரிய வர அவர் என்ன செய்கிறார் என்பதுதான் படத்தின் கதை. அப்பாடா…முடிந்த அளவிற்கு கதையைச் சொல்லியாகிவிட்டது. புரிந்தவர்கள் புரிந்து கொள்ளுங்கள், புரியாதவர்கள் தயவு செய்து படத்தைப் போய்ப் பாருங்கள். படத்திற்குப் படம் தனுஷின் நடிப்பு மெருகேறிக் கொண்டே போகிறது. இந்தப் படத்தில் ‘அனேகன்’ ஆக விதவிதமான தோற்றங்களில் நடித்திருக்கிறார். முழுமையாக காட்டப்படுவது மூன்று தோற்றங்கள்தான், அதில் பர்மா ஜென்மத்தில் வரும் ‘மூனா ரூனா’வும், அதற்கடுத்த ஜென்மத்தில் வரும் ‘காளி’யும் நிறையவே கவர்கிறார்கள். இந்த ஜென்மத்து அஸ்வின் கதாபாத்திரத்திற்கு அதிரடி ஆக்ஷன் என வழக்கமான கமர்ஷியல் ஹீரோ வேலை. மூன்று கதாபாத்திரங்களிலுமே தனுஷ் வித்தியாசப்படுத்தி நடித்து ரசிகர்களைக் கவர்கிறார். அமைரா, செக்கச் செவேலென இருக்கிறார். அந்த ‘பளிச்’சைக் குறைக்கவாவது மேக்கப் போட வேண்டும் போல் உள்ளது. உண்மையிலேயே அவர் அவ்வளவு சிகப்பா, அல்லது மேக்கப் கோளாறா என்பதுதான் தெரியவில்லை. இந்த ஜென்மத்தில் அல்ட்ரா மாடர்ன் குறும்புப் பெண்ணாகவும், முந்தைய ஜென்மத்தில் பாந்தமான, அமைதியான குடும்பப் பெண்ணாகவும், அதற்கும் முந்தைய ஜென்மத்தில் துறுதுறு பெண்ணாகவும் நடித்திருக்கிறார். மொழி தெரியாமலேயே மூன்று கதாபாத்திரங்களிலும், முதல் படத்திலேயே முத்திரை பதித்து விடுகிறார். காதல் நாயகன் கார்த்திக்கை, வில்லனாகப் பார்ப்பதா எனத் தோன்றினாலும், அந்த கிளைமாக்சுக்கு முந்தைய காட்சியில் வசனம் பேசியே வில்லத்தனத்தில் விஸ்வரூபமெடுத்து விடுகிறார். ஆனால், அதையே தனுஷை வைத்து உடனே அவ்வளவு நீளமாகவே வசனம் பேசுவது என கிண்டலடித்திருக்க வேண்டாம். தமிழ் சினிமாவிற்கு பணக்காரத் தோற்றத்தில் ஒரு புது வில்லன் ரெடி. சின்னச் சின்னக் கதாபாத்திரங்களில் நடிப்பவர்களைக் கூட பார்த்துப் பார்த்து தேர்வு செய்திருக்கிறார் இயக்குனர். அந்த மனநல மருத்துவர், ஜெகன், ஐஸ்வர்யா தேவன், ஆசிஷ் வித்யார்த்தி, முகேஷ் திவாரி, தலைவாசல் விஜய் அவரவர் கதாபாத்திரங்களில் நிறைவாக நடித்திருக்கிறார்கள். ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் பாடல்கள் அனைத்துமே ரசிக்க வைக்கின்றன. குறிப்பாக ‘டங்கா மாரி’ அதிரடி ஹிட்டாக அமையும். மற்ற தொழில்நுட்பக் கலைஞர்களும் இயக்குனருக்கு பக்கபலமாக அமைந்திருக்கிறார்கள். படத்தில் ஆங்காங்கே சில கேள்விகள் எழுகின்றன. தனுஷைப் பார்க்கும் போது மட்டுமே அமைராவிற்கு முந்தைய சில ஜென்மங்களின் ஞாபகம் வருகிறது. கார்த்திக், ஜெகன், ஐஸ்வர்யா தேவன் ஆகியோரும் முந்தைய ஜென்மங்களில் இருக்கிறார்கள், அவர்கள் இந்த ஜென்மத்தில் இருந்தாலும் அவர்களைப் பார்த்தால் பூர்வ ஜென்மம் வராதா என்பதை யாராவது மனநல மருத்துவர்கள்தான விளக்க வேண்டும். இந்தப் படத்தைப் பார்க்கும் போது, கமல்ஹாசன், ஷோபனா, ஸ்ரீப்ரியா நடித்த ‘எனக்குள் ஒருவன்’ படத்தின் ஞாபகம் நமக்கும் வந்துவிடுகிறது. ‘அனேகன்’ – அனைவருமே பார்க்கலாம்.