ஆதார் – விமர்சனம்

ராம்நாத் பழனிகுமார் இயக்கத்தில், கருணாஸ், ரித்விகா, அருண் பாண்டியன், உமா ரியாஸ்கான், திலீபன், இனியா மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.

கருணாஸ் கட்டிட வேலை பார்க்கும் ஒரு கூலித் தொழிலாளி. குழந்தை பெற்றுக் கொள்வதற்காக கருணாஸ் மனைவி ரித்விகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குழந்தை பிறந்த பின் ரித்விகா திடீரென காணாமல் போகிறார். அவருக்காக உதவியாக இருந்த இனியா மருத்துவமனையின் பின்புறம் இறந்து கிடக்கிறார். காணாமல் போன தனது மனைவியைக் கண்டுபிடித்துத் தருமாறு காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறார் கருணாஸ். அவரது மனைவி ரித்விகா எங்கே போனார், இனியா எப்படி இறந்தார் என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

ஒரு சாதாரண மனிதனுக்கு இங்கு எப்படிப்பட்ட நீதி கிடைக்கிறது என்பதைச் சொல்லும் படம். போலீஸ் நிலையத்தில் காவலர்களால் அலைக்கழிக்கப்படுகிறார் கருணாஸ். அவர்கள் சொல்வதை மட்டுமே நீதிமன்றத்தில் சொல்ல வேண்டும் என்றும் மிரட்டப்படுகிறார். கிளைமாக்சில் ரித்விகா என்ன ஆனார் என்பது தெரிய வரும் போது, இந்த சட்டமும், நீதியும் பணம் உள்ளவர்களுக்காக எப்படி வேண்டுமானாலும் வளைந்து கொடுக்கும் என உணர்த்துகிறார் இயக்குனர் ராம்நாத்.

ஒரு அப்பாவி கணவனாக கருணாஸ் அப்படி ஒரு எமோஷனலாக நடித்திருக்கிறார். அவரைப் பார்க்கும் போது நமக்கும் அப்படி ஒரு அனுதாபம் வருகிறது. ஒரு ஏழைக்கு எந்த மாதிரியான மரியாதை இந்த சமூகத்தில் கிடைக்கிறது என்பதை கருணாஸ் கதாபாத்திரம் கண் கலங்க சொல்லியிருக்கிறது. 

இன்ஸ்பெக்டராக பாகுபலி பிரபாகர், துணை கமிஷனராக உமா ரியாஸ் கான், தலைமை காவலர் அருண் பாண்டியன் படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள். அந்தக் கதாபாத்திரங்களுக்கு தங்கள் நடிப்பு மூலம் உயிர் கொடுத்திருக்கிறார்கள்.

சில காட்சிகளில் வந்தாலும் திலீபன், இனியா, ரித்விகா அவரவர் கதாபாத்திரங்களில் அழுத்தமாய் நடித்திருக்கிறார்கள்.

ஸ்ரீகாந்த்தேவாவின் பின்னணி இசை, மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவு படத்திற்கு பக்கபலமாக அமைந்துள்ளது.

இம்மாதிரியான படங்கள் வசூல் ரீதியாக எப்படி வேண்டுமானாலும் வசூலிக்கட்டும். ஆனால், அழுத்தமான படங்களில் ஒன்றாக தமிழ் சினிமாவில் தடம் பதிக்கும்.

Read Previous

குழலி – விமர்சனம்

Read Next

பபூன் – விமர்சனம்